தற்போது தோண்டப்படும் இடத்திற்கு அப்பால் புதிதாகத் தோண்டிய இடத்திலும் வெளிக் கிளம்பிய எலும்புக் கூடுகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் எழுமாற்றாக தோண்டப்பட்ட குழியிலும் மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டமை பரபரப்பை கிளப்பியுள்ளது.
செம்மணி மனித புதைகுழி காணப்படும் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இரண்டு சோதனைக்கான இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையிலே ஒரு குழியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 46ஆம் நாள் அகழ்வு பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,இரண்டு குழிகள் அடையாளப்படுத்தப்பட்டு, மூன்று மீற்றர் நீளமும் 2 மீற்றர் அகலமும் கொண்ட குழிகள் அகழப்பட்டன.
முதல் அகழ்வின் போது அந்த குழியிலிருந்து மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில் அது அவ்வாறே பாதுகாக்கப்பட்டது.
இரண்டாவது குழியில் முதல் மண் படை மட்டும் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது. மிகுதி அகழ்வின் போது மனித எச்சங்கள் தோன்றுமாயின் சில முடிவுகளுக்கு வரக்கூடியதாக இருக்கும் – என்றார்.
![]()