சிக்கப் போகும் பல தெற்கு அரசியல்வாதிகள்; அமைச்சர் ஆனந்த விஜேபால எச்சரிக்கை

போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகளுடன் தெற்கு அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் உள்ளமை தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பாரதூரமான இரண்டு பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அதாவது திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகம் என்பன உள்ளன. இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவையே. கடந்த காலங்களில் அரசாங்கங்கள் பின்பற்றிய அரசியல் கலாச்சாரத்தின் பெறுபேறாகவே இந்த குற்றச்செயல்கள் அதிகரித்தன. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பாதாள குழு செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. அதன் பெறுபேறுகள் தற்போது கிடைக்கின்றன.
பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருள் வியாபாரத்துக்கு அரசியல் ஆசீர்வாதம் மற்றும் அரசியல் தொடர்புகள் இருக்கின்றன. இப்போது நாங்கள் இந்த அரசியல் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம்.
இப்போது தங்காலையில் மூன்று லொறிகளில் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்செயல்களுடன் அரசியல் வாதிகளுக்கு தொடர்புள்ளதாக தெரிய வருகின்றது. குறிப்பாக தெற்கு அரசியல்வாதிகளுக்கு தொடர்புகள் உள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை பொதுமக்கள் தற்போது தகவல்களை வழங்கி வருகின்றனர். பொலிஸாரும், புலனாய்வு துறையினரும் சரியாக செயற்பட்டு வருகின்றனர். மக்கள் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை பயமின்றி வழங்க முடியும். இரகசியம் பேணப்படும். பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க நாங்கள் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.
![]()