முச்சந்தி

பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் இஸ்ரேல்!…. தமிழர் தாயகத்தை சிதைக்கும் சிறிலங்கா !!… நவீனன்

(பாலஸ்தீனர்கள் எப்படி தங்கள் மண்ணின் பூர்வீகத்தை இழந்தார்களோஅதற்கு ஒப்ப ஈழத் தமிழர்களின் தாயக நிலம் எங்கும் ஆக்கிரமிப்பை சிறிலங்கா அரசுகள் தீவிரப்படுத்துகின்றன.எவ்வாறு பாலஸ்தீனம் யூதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதோஈழத்திலும் சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்ந்தமைக்கான வரலாற்று சான்றுகள் உள்ளன)
ஈழத்தின் வரலாற்றுக் காலம் தொட்டே தமிழர்கள் தங்களுக்கெனத் தனியான தாயகத்தைக் கொண்டிருந்தமை என்பது வரலாற்று சான்றாகும். தற்போது தமிழர்களின் வரலாற்றை அழிக்கவும், சிதைக்கவும், மாற்றி எழுதவும் சிங்கள – பௌத்த அரசுகள் முயன்று அதில் கணிசமான வெற்றியும் கண்டுள்ளன.
இதனைப் போலவே 1946 வரை முழுமையாக பாலஸ்தீனம் என்று உலக வரைபடங்களில் குறிக்கப்பட்ட தேசம், இன்று குறுகிச் சிறிதாகி மத்திய கிழக்கின் அவலமிக்க மண்ணாக மாறியுள்ளது.1947 ஆம் ஆண்டு ஐநா சபை மற்றும் இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளின் திட்டமிட்ட சதியின் மூலம் பாலஸ்தீனம் துண்டாடப்பட்டு வந்தேறிகளான யூதர்களிடம் தாரை வார்த்து கொடுக்கப்பட்டது.
பாலஸ்தீனமும் ஈழமும் :
இஸ்ரேல் – பாலஸ்தீன முரண்பாடு நூறாண்டுகளாக துயரமும் ஆக்கிரமிப்பும் இன்னமும் தொடர்கிறது. ஐ.நா.சபையின் 75 ஆண்டு கால வரலாற்றில் பாலஸ்தீனத்திற்கு உரிய நியாயத்தை உறுதி செய்வதில், ஐக்கிய நாடுகள் சபை தோல்வியடைந்துள்ளது. ஐ.நா. சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்தைக் கூட அமெரிக்கவும், மேற்குலக நாடுகளும் ஆதரித்ததில்லை.
தற்போது இராணுவ முற்றுகைக்குள் காசா முடங்கி,இஸ்ரேலின் போர் குற்றம் தொடர்கிறது. உலகின் மனச்சாட்சியும் மௌனித்திருக்க, ஐ.நா.சபையின்  தோல்வியை வெளிப்படுத்தும் வண்ணம் இஸ்ரேலின் கோரத் தாண்டவம் அரங்கேறுகிறது.
பாலஸ்தீனர்கள் எப்படி தங்கள் மண்ணில் பூர்வீகமாக இருந்தார்களோ, அதற்கு ஒப்ப பண்டைய காலத்தில் தமிழர்கள் இலங்கை எங்கும் ஆண்டிருப்பதும், அரசுரிமை செல்வாக்குச் செலுத்தியிருக்கக் கூடும் என்பதும் பல ஆராய்ச்சியாளர் கருத்து.
கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை இலங்கையின் தலைநகரமாயிருந்த அனுராதபுரத்தில் மிக முற்பட்ட காலங்களிலேயே தமிழ் வணிகர்களும், சிற்பிகளும் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. வரலாற்று ரீதியாக கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே அனுராதபுரத்தை தமிழர்கள் ஆண்டிருப்பதும் மகாவமிசம் தரும் குறிப்புகளிலிருந்து அறியத் தருகின்றது.
இவ்வாறு இலங்கை எங்கும் இருந்த தமிழ் இராசதானிகள் பின்னர் ஐரோப்பியர்களால் கைப்பற்றப்பட்டு, தமிழர்களின் வரலாறு அழிக்கப்பட்டது. இதன் பின்னர் இலங்கைத் தீவு பிரித்தானியாவின் காலனித்துவத்திலிருந்து விடுதலை அடைந்த காலம் முதல், ஈழத் தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி சாத்வீக முறை போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். இப்போராட்டங்கள் வன்முறையினூடாக அடக்கப்பட்டதினால், ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தமிழர்கள் தள்ளப்பட்டனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம்:
பாலஸ்தீனம் என்று உலக வரைபடங்களில் குறிக்கப்பட்ட தேசம், 1947 ஆம் ஆண்டு ஐநா சபை மாற்றும் இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளின் திட்டமிட்ட சதியின் மூலம் பாலஸ்தீனம் துண்டாடப்பட்டு யூதர்களிடம் கொடுக்கப்பட்டது.
1967 ஆம் ஆண்டு திட்டமிட்ட பெரும் தாக்குதல் மூலம் பாலஸ்தீனத்தின் பெரும்பான்மை இடங்களை யூதர்கள் ஆக்கிரமித்தனர்.
2000 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட கால கட்டத்தில் கிட்டத்தட்ட பெரும்பான்மையான (காசா மேற்குக்கரை ) உள்ளிட்ட சில பகுதிகளை தவிர 90% அதிகமான பகுதிகளை யூதர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
இந்த பாலஸ்தீனப் பிரச்சினையை நம் காலத்தின் மாபெரும் தார்மீகப் பிரச்சினை என்றார் நெல்சன் மண்டேலா. பாலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை, அவர்களின் துயரத்தை இதைவிடச் சுருக்கமாக அதே நேரத்தில் மனத்தைத் தைக்கும் விதமாக ஒருவர் கூற முடியாது.
இரண்டாம் உலகப்போருக்கு பின் இரண்டு சம்பவங்கள் உலகை உலுக்கிக் கொண்டிருந்தது.இதில் ஒன்றான தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சி நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின்னர் 1994இல் முடிவுக்குவந்தது. ஆனால் 1940களில் தொடங்கிய பாலஸ்தீன மக்களின் துயரம் இன்றளவும் தொடர்கிறது. பலஸ்தீன சுதந்திர போராட்டமும் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது என நெல்சன் மண்டேலாவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனின் துரோகங்கள் :
வரலாற்று ரீதியில் பாலஸ்தீனத்தை பார்த்தால், முதல் உலகப் போரில் நேச நாடுகள் வெற்றி  பெற்றதைத் தொடர்ந்து பாலஸ்தீனப் பகுதியின் நிர்வாகத்தை பிரிட்டனிடம் நேச நாடுகள் அளித்தன. போருக்குப் பின் உலகம் முழுவதிலிருந்தும் யூதர்களை பிரிட்டன் பாலஸ்தீனப் பகுதிகளில்
குடியமர்த்தியது. யூதர்கள் தங்களுக்கென்று பலமிக்க இராணுவம் அமைத்து பாலஸ்தீனர்களை தாக்கினர். பிரிட்டன் அதைக் கண்டு கொள்ளவில்லை.
1948 மே 14 அன்று பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறியவுடன், பலமிக்க ராணுவத்தை கொண்டிருந்த யூதர்கள், அமெரிக்க உதவியுடன், பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றினர்.  சுமார் 15000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மிகப்  பெரிய அளவில் இனஒழிப்பு நடவடிக்கைகள் பாலஸ்தீனர்க்கு எதிராக நடத்தப்பட்டது.
ஏழு இலட்சம் பாலஸ்தீனர்கள் தங்கள் மூதாதையர் வீடுகளிலிருந்து விரட்டப்பட்டனர்.  ஆயிரக்கணக்கான பாலஸ்தீன கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவையனைத்தும் அமெரிக்க ஆதரவுடன் நடைபெற்றன. அதே தினத்தில் யூதர்கள் “இஸ்ரேல்” என்ற  நாட்டை அறிவித்தனர். அனைத்து ஆவணங்களிலும் இருந்த ‘பாலஸ்தீனம்’ என்ற பெயரை அழித்தனர்.  இந்த தினத்தை பாலஸ்தீனர்கள் “அல்-நக்பா” என்றழைக்கின்றனர். நக்பா என்றால் பேரழிவு என்று அர்த்தம்.
கந்தளாயில் முதல் சிங்களக் குடியேற்றம்:
எவ்வாறு பாலஸ்தீனம் யூதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதோ, ஈழத்திலும் சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்ந்தன. இலங்கையிலும் முதன் முதலில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற்ற பிரதேசம் திருகோணமலையின் கந்தளாய். 1940களில் இங்கு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தனியே தமிழ் பேசும் மாவட்டமாக, தமிழரின் தலைநகராக விளங்கிய திருகோணமலையில் தற்போது ஒரு தொகுதியைக் கூட வெற்றிகொள்ள முடியாத நிலை உருவாகி உள்ளது. தமிழர் தலைநகரில் இன்று பெரும்பான்மையினர் சிங்களவர்களே.
அப்போது கந்தளாய் திட்டத்தைத் தொடக்கி வைத்த பிரதமர் டி.எஸ். சேனநாயக்க ஆலமரம் ஒன்றை நாட்டி வைத்த பின்னர், அங்கு குழுமியிருந்த குடியேற்றவாசிகளான சிங்கள மக்களிடம்,  “இந்த மரம் வளர்ந்து பெரிதாகக் கிளை பரப்பி நிற்கும்போது இங்கு நீங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.” என்று கூறி சிங்கள – பௌத்த மேலாண்மையையும், ஆக்கிரமிப்பு மனோபாவத்தையும், இனக்குரோதத்தையும் ஒரு சேரப் பற்றவைத்தார். அன்று அவர் பற்ற வைத்த சிறுபொறியே இன்று இனவாதப் பெருந் தீயாக வளர்ந்துள்ளது.
ஈழத்தின் வடக்கு -கிழக்கில் நில அபகரிப்பு, சிங்கள குடியேற்றங்கள் மற்றும் இராணுவமயமாக்கல் எந்தளவு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதற்கான அதிர்ச்சி அளிக்கும் விபரங்கள் மற்றும் ஆதாரங்கள் பல வெளிவந்துள்ளன.
சிறிலங்கா தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், நிலவள திணைக்களம், பௌத்த சாசன அமைச்சு  மற்றும் மகாவலி  அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக பௌத்த மயமாக்கல், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை சிறிலங்கா அரசாங்கமானது முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருகிறது.
கல்லோயா சிங்களக் குடியேற்றம்:
இதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டமாகப் பரந்து விரிந்திருந்த தமிழ்ப் பிரதேசமான அம்பாறையில் கல்லோயாத் திட்டத்தைத் தொடக்கி வைத்தவர் டட்லி சேனநாயக்க. இவரது தந்தையான டி.எஸ். சேனநாயக்க பற்ற வைத்த இனவாதத் தீயை மீண்டும் வளர்த்தெடுத்தவர் இவரே. இவரின் தந்தை திருகோணமலையில் தொடக்கி வைத்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத் திட்டத்தை மட்டக்களப்பில் இன்றைய அம்பாறையில் நடைமுறைப்படுத்தினார்.
டட்லி சேனநாயக்காவின் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை எதிர்த்து அரசியல் செய்யத் துணிந்த ஆர்.டபிள்யூ. பண்டாரநாயக்கா நாடு முழுவதும் இனவாதத் தீயைப் பற்ற வைத்து ஆட்சியைப் பிடித்தார். இவரின் காலத்தில் கல்லோயாக் குடியேற்றத் திட்டம் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்தக் குடியேற்றத் திட்டத்தினாலேயே திட்டமிட்ட முறையில் 1956 ஜூன் கலவரம் முன்னெடுக்கப்பட்டது.
ஈழத்தமிழர்களின் சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றவும், தமிழ் மக்கள் தமது நிலங்களுக்கு செல்வதை தடுக்கவும் அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் தமிழர் பிரதேசங்களில் அரசாங்கங்களினால்  முன்னெடுக்கப்படும்  சிங்கள குடியேற்றம் தற்போது தீவிரமாக வளர்ந்து வருகிறது.
அத்துடன் வடக்கு-கிழக்கில் உள்ள சுமார் 200 ற்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த தமிழ் ஆலயங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறன. அத்துடன் தமிழர் தாயகம் எங்கிலும் பெளத்த விகாரைகள் அமைக்கப்பட்டும், தொடர்ந்தும் அமைக்கப்படுவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
இதனாலேயே வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தமது உரிமைக்காக கடந்த 70 வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடினர். தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தினை பயங்கரவாதமாக தெற்கில் சிங்கள மக்களிடத்திலும், சர்வதேசத்தின் மத்தியிலும் சித்தரித்த சிறிலங்கா அரசானது இலட்சக்கணக்கான தமிழ் மக்களை படுகொலை செய்து, கொடுங்கோல் அடக்குமுறை இராணுவத்தினால் தமிழர் தாயகம் எங்கும் ஆக்கிரமித்து உள்ளனர்.
இதய பூமி – வெலிஓயா சிங்களக் குடியேற்றம்:
இதுபோலவே, தமிழரின் இதயபூமி என வர்ணிக்கப்பட்ட மணலாறு பிரதேசம் வெலிஓயா சிங்களக் குடியேற்றத் திட்டமாக மாறியது அனைவரும் அறிந்ததே. அகன்று விரியத் துடிக்கும் இந்தப் பிரதேசம் முல்லைத்தீவின் கரைத்துறைப்பற்று, செம்மலை பகுதிகளையும் சிங்கள அரசு தனது ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வந்துள்ளது.
ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த தமிழர் தாயகம் இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களுடன் மட்டும் சுருங்கி, மட்டுப்பட்டு தமிழ்த் தேசியத்தைச் சிதைவடையச் செய்து, அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காக  பல வகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஆளும் அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.
தமிழ் மக்களின் தேசிய ஆயுதப் போராட்டம் சிறிலங்கா பேரினவாத அரசினால் கொடுங்கரம் கொண்டு மிகப்பெரும் மனிதப் பேரழிப்பினூடாக முள்ளிவாய்க்காலில் 2009இல் மௌனிக்கப்பட்டது. ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடரில், இலங்கையில் முடிவற்ற போர்:  இலங்கையில் தமிழ் மக்களின் அழிக்கப்பட்ட நிலம், வாழ்வு மற்றும் அடையாளம் என்ற ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனில் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் எந்தளவுக்கு துன்பப்படுத்தப் படுகின்றார்கள் என்பதற்கான அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்த இறுதியுத்தத்தின் போது இறுதி ஆறு மாதங்களில் மட்டும் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் உறவுகள் கொல்லப்பட்டதையும், கைக்குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதும் இந்த உலகறியும்.
இறுதி யுத்தம் நிறைவடைந்து பதினான்கு ஆண்டுகளில் வடக்கு-கிழக்கை இராணுவ மயமாக்கிவரும் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் கலாசார, பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வடக்கு-கிழக்கு பூர்வீக குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி வருகிறது.
நூறாண்டுகளாக தொடரும் துயரம்:
 
ஈழத்தமிழர் அல்லட்படுவதைப் போலவே, இஸ்ரேல் – பாலஸ்தீன முரண்பாடு நூறாண்டுகளாகத் தொடரும் துயரமும் ஆக்கிரமிப்பும் இன்னமும் தொடர்கிறது. ஐ.நா.சபையின் 75 ஆண்டு கால வரலாற்றில் பாலஸ்தீனத்திற்கு உரிய நியாயத்தை உறுதி செய்வதில், ஐக்கிய நாடுகள் சபை அப்பட்டமாக தோல்வியடைந்துள்ளது.
ஐ.நா. சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்தைக் கூட அமெரிக்கவும், மேற்குலக நாடுகளும் ஆதரித்ததில்லை. தற்போதை இராணுவ முற்றுகைக்குள் காசா முடங்கி,இஸ்ரேலின் போர் குற்றம் தொடர்கிறது. உலகின் மனச்சாட்சியும் மௌனித்திருக்க, ஐ.நா.சபையின்  தோல்வியை வெளிப்படுத்தும் வண்ணம் இஸ்ரேலின் கோரத் தாண்டவம் அரங்கேறுகிறது.
ஏற்கனவே, காசா முனைக்கு பல்வேறு வசதிகளை தடுத்து நிறுத்தி உலகின் மிகப்பெரிய (Open Air Prison) எனப்படும் திறந்தவெளி சிறையாகவே காசாவை இஸ்ரேல் வைத்துள்ளது. காசாவில் உள்ள பத்து பாலஸ்தீனியர்களில் ஏழு பேர் அகதிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக வாழும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த முழு முற்றுகை ஒன்றும் காசாவுக்கு புதிதல்ல. ஏற்கனவே அங்கு 22 மணி நேரம் மின்சாரம் இருக்காது. இஸ்ரேல் அறிவிப்பால் தற்போது 24 மணி நேரமும் மின்சாரம் இருக்காது. காசாவில் வறுமை மற்றும் உணவுப் பற்றாக்குறையால் ஏழு சதவீத குழந்தைகள் நீண்ட கால ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளனர். 60 சதவீத குழந்தைகள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா தரவுகள் கூறுகின்றன.
தற்போது உணவு, எரிபொருள் மற்றும் மருந்து பொருள்கள் எதுவும் உள்ளே செல்ல இயலாதவாறு இஸ்ரேல் முழுமையாக காஸாவை முற்றுகை செய்துள்ளது. ஏற்கெனவே இருந்த எகிப்து ஊடான ஒரே வழியும் அடைப்பட்டுவிட்டது. காஸாவின் மருத்துவமனைகளில் போதிய மருந்து பொருள்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், போர் குற்றத்தின் கீழ் வரும், மனித நேயத்திற்கு எதிரான, மின்சாரம் வழங்கப்படாது; உணவு வழங்கப்படாது; தண்ணீர் வழங்கப்படாது; எரிவாயு வழங்கப்படாது; அனைத்தும் மூடப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளமைக்கு பல நாடுகள் கணரடனங்களை முன்வைத்துள்ளனர். ஆயினும் இஸ்ரேல் தொடரும் போர் குற்றத்தை மேற்கு உலகின் மௌனமானது ஐ.நா.சபையின் தோல்வியாகவே கருதலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *