அனைத்து பல்கலைக்கழகங்களும் 20 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம்

பல்கலைக்கழக தொழிற்சங்க இணைக்குழு எதிர்வரும் 20 ஆம் திகதி புதன்கிழமை அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இந்த அடையாள வேலை நிறுத்தத்தில் பதினேழு பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள கல்விசாரா ஊழியர்கள் அந்நாளில் பணியில் ஈடுபடமாட்டார்கள் என பல்கலைக்கழக தொழிற்சங்க இணைக்குழு செயலாளர் கே.பி.ஜி. கருணாரத்ண தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தால் 2025 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட வரவு செலவு திட்டங்கள் காரணமாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கூறிய திட்டங்களால் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஏற்கனவே அரசாங்கத்திற்கு விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ள போதும். பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க குறைந்தபட்சம் ஒரு கூட்டத்தையாவது வழங்க அரசாங்கம் மறுத்துவிட்டது.
எனவே, ஏழு மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே, தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந் நடவடிக்கையால் மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஏற்படும் சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம், இதனை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த அடையாள வேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பினை கடிதம் மூலம் அனைத்து பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கும், பதிவாளர்களுக்கும், நூலகர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என பல்கலைக்கழக தொழிற்சங்க இணைக்குழு செயலாளர் கே.பி.ஜி. கருணாரத்ண மேலும் தெரிவித்தார்.
![]()