முச்சந்தி
கோல்டன் டோம் திட்டத்தில் கனடா இணையுமா?… 51வது அமெரிக்க மாநிலமாக மாற்ற டிரம்ப் திட்டம்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

கோல்டன் டோம் திட்டத்தில் கனடா இணைய 61 பில்லியன் டாலர் தர வேண்டும், அல்லது அமெரிக்கா உடன் இணைந்தால் கனடா ஒரு டாலரையும் தர அவசியமில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கோல்டன் டோம் (Golden Dome) அமெரிக்காவை பாதுகாக்க 175 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்படும் புதிய வான் ராணுவக் கட்டமைப்பு ஆகும் . இதற்கான ஒப்புதலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் வழங்கியுள்ளார்.
இந்த கோல்டன் டோம் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், டிரோன்கள் என எந்த ஏவுகணையாக இருந்தாலும், அதுவும் அவை சாதாரணமானது அல்லது அணு ஆயுதம் என எதுவாக இருந்தாலும் தோற்கடிக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும். அமெரிக்காவை விண்வெளியில் இருந்து தாக்கினால் கூட இந்தக் கட்டமைப்பு தடுத்துவிடும் ஆற்றலைக் கொண்டதாகும்.இந்தக் வான் பாதுகாப்பு கட்டமைப்பில் தாங்களும் இணைந்து கொள்ள கனடா விருப்பம் தெரிவித்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். பிரமாண்டமான கோல்டன் டோம் கட்டமைப்பு உருவாக்கத்தில் பங்குகொள்ள கனடா விருப்பம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் அமெரிக்கா உடன் இணையமாட்டோம் என்று கனடா மிக உறுதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ட்ரம்பின் இந்தக் கருத்து பரபரப்பை கிளப்பியுள்ளது. டிரம்ப் கூறுகையில் கோல்டன் டோம் கனடாவுக்கு பல பில்லியன் டாலர் செலவாகும், ஆனால் அது கனடா தன் இறையாண்மையை விட்டுக்கொடுத்தால் இலவசம் என்று கூறியுள்ளார். கனடா இந்த சலுகையை பரிசீலித்து வருகிறது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
கடந்த வாரம் கனடா பிரதமர் மார்க் கார்னி கோல்டன் டோம் திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டியதை அடுத்து டிரம்பின் கருத்து வந்துள்ளது.
கனடா- அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்:
கனடாவின் இறையாண்மை குறித்த டிரம்பின் கருத்துக்களுக்கும் , கனடா 51வது அமெரிக்க நாடாக மாறக்கூடும் என்ற ஜனாதிபதியின் கூற்றை கனடா திட்டவட்டமாக

நிராகரித்துள்ளது. கார்னியின் செய்தித் தொடர்பாளர் நாட்டின் இறையாண்மையை மீண்டும் வலியுறுத்தினார்.
கனடாவும் அமெரிக்காவும் ஏற்கனவே ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளன. வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளை (NORAD). இதில் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் அடங்கும்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் நீண்ட தூர பயண ஏவுகணைகள் போன்ற மேம்பட்ட அச்சுறுத்தல்களுக்கு எதிராக அமெரிக்காவைப் பாதுகாக்க விண்வெளியில் இடைமறிப்புகளை நிறுவ டிரம்பின் முன்மொழியப்பட்ட கோல்டன் டோம் அமைப்பு திட்டமிட்டுள்ளது. தனது பதவிக்காலம் முடியும் முதல் இந்தத் திட்டத்தை முடிப்பதாக டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
இதனைப் போலவே இஸ்ரேலின் பல அடுக்கு ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் “இரும்பு டோம்” (Iron Dome) என்று அழைக்கப்படுகின்றன. இது அமெரிக்காவின் கோல்டன் டோம்க்கு ஓரளவு ஈடாக செயல்படுகிறது. இஸ்ரேல் இந்த அதிநவீன அமைப்பை கணிசமான அமெரிக்க ஆதரவுடன் உருவாக்கியுள்ளது.
விண்வெளி ஆயுதப் போட்டி அதிகரிக்கும் :
சீனா, வட கொரியா மற்றும் ரஷ்யா அரசுகள் டிரம்பின் விண்வெளியில் ஆயுதங்களை வைக்கும் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளன. சீனாவின் வெளியுறவு அமைச்சகம், இந்தத் திட்டம் விண்வெளி ஒரு போர்க்களமாக மாறும் அபாயத்தை அதிகரிக்கிறது, ஆயுதப் போட்டியை தூண்டுகிறது மற்றும் சர்வதேச பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்கா தனது சொந்த நலன்களை முதன்மையாகக் கொண்டுள்ளதுடன், அதன் சொந்த பாதுகாப்பைத் தேடுவதில் வெறித்தனமாக உள்ளது. இது எந்த நாட்டின் பாதுகாப்பும் மற்றவர்களின் இழப்பில் வரக்கூடாது என்ற கொள்கையை மீறுகிறது என்றும் கூறியுள்ளது.
மேலும் வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகமும் “அமெரிக்கா விண்வெளியை இராணுவமயமாக்கும் நடவடிக்கைகளில் உறுதியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறுகையில் ‘கோல்டன் டோம் திட்டம் மூலோபாய ஸ்திரத்தன்மையின் அடித்தளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. ஏனெனில் இது உலகளாவிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்குகிறது என்று கூறியுள்ளார்.
ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் (TASS) இன் படி, “கோல்டன் டோமை உருவாக்குவது ஏவுகணைகளை ஏவுவதற்கு முந்தைய அழிவு மற்றும் அவற்றின் பயன்பாட்டை உறுதி செய்யும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று ஜகரோவா மேலும் கூறியுள்ளார்.
இது ஏற்கனவே தடுப்பு, ஆனால் அடிப்படையில் முதல் தாக்குதல்களை வழங்குவதற்கான அமெரிக்காவின் மிகவும் ஆபத்தான கோட்பாட்டுப் போக்கின் நேரடி வெளிப்பாடாகும் என்று அவர் கூறியுள்ளார். இது விண்வெளியை ஆயுதமயமாக்கப்பட்ட சூழலாகவும், ஆயுத மோதலின் களமாகவும் மாற்றும் என்று எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலின் அயர்ன் டோம்:
அயர்ன் டோம் (Iron Dome ) என்பது இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பாகும். 2011 இல் செயல்படுத்தப்பட்ட இந்த அமைப்பு, முதன் முதலில் ஏப்ரல் 7, 2011 அன்று போரில் பயன் படுத்தப்பட்டது .
அயர்ன் டோம் இஸ்ரேலின் பல அடுக்கு ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியாகும்.
கூடுதல் அடுக்குகளாக இஸ்ரேல் வான்பரப்பை பாதுகாத்து வருகின்றது. இந்த கூடுதல் அமைப்புகளானது நீண்ட தூரம் செல்ல கூடியவை. கப்பல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் போன்ற பல்வேறு வகையான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் திறன் கொண்டுள்ளன.
கூடுதல் அடுக்குகளாக இஸ்ரேல் வான்பரப்பை பாதுகாத்து வருகின்றது. இந்த கூடுதல் அமைப்புகளானது நீண்ட தூரம் செல்ல கூடியவை. கப்பல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் போன்ற பல்வேறு வகையான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் திறன் கொண்டுள்ளன.அயர்ன் டோம் 90 சதவிகித வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த அமைபபை பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததில் இருந்து, 5,000 க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா தாக்குதல்களை இடைமறித்துள்ளது. இந்த அமைப்பிற்கு அமெரிக்காவின் பேட்ரியாட் அமைப்பும் ஆதரவாக உள்ளது.
அயர்ன் டோம் எப்படி வேலை செய்கிறது?
அயர்ன் டோம் அமைப்பு மூன்று அம்சங்களை கொண்டுள்ளது. அதன்படி உள்வரும் வான்வழி அச்சுறுத்தல்களைக் கண்டறிதல், அவற்றின் தாக்கத்தின் சாத்தியமான புள்ளியின் மதிப்பீடு மற்றும் இடைமறிப்பு ஆகிய செயல்களை அந்த அமைப்பு முன்னெடுக்கிறது.
எதிரிகளால் ரொக்கெட் ஏவப்படும்போது, ரேடார் அமைப்பு ஏவுகணையை கண்டறிந்து கண்காணிக்கும். கட்டுப்பாட்டு அமைப்பானது ஏவுகணை எங்கு தரையிறங்கும் என்பதை மதிப்பிடும் மற்றும் அது இடைமறிக்கப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்கும்.அதனடிப்படையில் தேவைப்பட்டால், எதிரிகளின் ஏவுகணையை இடைமறிக்க புது ஏவுகணையைச் செலுத்தும். ஒரு ஏவுகணை எந்தத் தீங்கும் செய்ய முடியாத இடத்தில் தரையிறங்கும் என மதிப்பிடப்பட்டால், அது தரையிறங்க அனுமதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
![]()