பலதும் பத்தும்

லிப்டில் சிக்கிய மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நிருபம் ராயல் பாம் குடியிருப்பில் மின் தடை காரணமாக லிப்டில் சிக்கிய 8 வயது சிறுவனைக் காப்பாற்ற முயன்ற அவரது தந்தை, பதற்றத்தால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

கடந்த மே 26 ஆம் திகதி இரவு நிகழ்ந்த துயர சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

51 வயதான ரிஷிராஜ் பட்நாகர் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் நிருபம் ராயல் பாம் குடியிருப்பின் மூன்றாவது மாடியில் வசித்து வந்தார்.

சம்பவ தினமான மே 26 அன்று இரவு 10 மணியளவில், ஹோஷங்காபாத் வீதி பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக மின் தடை ஏற்பட்டது. இதன்போது, ரிஷிராஜ் தனது 8 வயது மகன் தேவன்ஷை மூன்றாவது மாடிக்கு லிப்ட் மூலம் செல்லுமாறு கூறினார்.

ஆனால், தேவன்ஷ் லிப்டில் ஏறிய சில நொடிகளில் மின்சாரம் தடைபட்டதால் லிப்ட் நின்று போனது.

லிப்டில் சிக்கிய மகன் “பாப்பா… பாப்பா…” என்று கத்தியதைக் கேட்ட ரிஷிராஜ், பதற்றத்துடன் குடியிருப்பின் ஜெனரேட்டர் அறையை நோக்கி ஓடினார். ஜெனரேட்டரை இயக்க உத்தரவிட்ட அவர், மகனைக் காப்பாற்ற முயற்சித்தார். ஆனால், அதற்குள் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

மூன்று நிமிடங்களுக்குள் மின்சாரம் மீட்கப்பட்டு, தேவன்ஷ் பத்திரமாக லிப்டிலிருந்து வெளியேறினான். ஆனால், ரிஷிராஜை அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்தனர்.

இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button