தமிழீழக் கோட்பாடு சிதைவதற்கு உட்கட்சி மோதல்களே காரணம்; யாழில் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா

தந்தை செல்வாவினுடைய தமிழ்த்தேசியக் கோட்பாடு சிதைந்து போவதற்குத் தமிழ் பேசும் சமூகம் என்ற கருத்து நிராகரிக்கப்படுவதும் ஒரு காரணம். அதேபோலத் தமிழீழம் என்ற கோட்பாடு சிதைவதற்குக் கட்சிக்குள் இடம்பெற்ற உட்கட்சி மோதல்கள் அல்லது இயக்க மோதல்கள், முஸ்லிம் சமூகப் புறக்கணிப்புப் போன்றவையே அடிப்படையாக அமைந்தன. இந்த இரண்டும் இடம்பெறாமல் இருந்திருந்தால் தற்போது தமிழீழ மண்ணில் வாழக் கூடிய சூழல் கூட ஏற்பட்டிருக்கலாம் என ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை முதுநிலைப் பேராசிரியர்.கலாநிதி.றமீஸ் அப்துல்லா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 48 ஆவது ஆண்டு நினைவுநாள் அஞ்சலியும் நினைவுப் பேருரையும் நிகழ்வு சனிக்கிழமை யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
இன்று தமிழர் அரசியலில் பல வெடிப்புக்கள் நிகழ்ந்து விட்டன. தமிழர் அரசியல் கட்சிகள் பல உருவாகி விட்டன. வடக்கும்- கிழக்கும் பிரிந்து விட்டது. முஸ்லிம்கள் ஒதுக்கப்படுகின்ற நிலை உருவாகி விட்டது. 1983 இல் அம்பாறை மாவட்ட அபிவிருத்திச் சபைக்கு வேட்பாளர்களை நியமிப்பதில் தமிழரசுக் கட்சியோடு முரண்பட வேண்டிய நிலைக்கு அஷ்ரப் தள்ளப்பட்டார். இவை எல்லாம் தந்தை செல்வா என்றொரு தலைவர் இல்லாமல் போனதன் பிற்பாடே இடம்பெறுகின்றன.
கிழக்கில் அரசியல் தலைவர்கள் நாளுக்கு நாள் உருவாகிக் கிழக்குத் தமிழர் அரசியல் மாறிக் கொண்டிருக்கின்றது. அதேநேரம் தற்போது பெரும்பாலான தமிழ் அரசியல் சக்திகள் கூட்டாக ஒன்றிணைந்துமுள்ளன. அதனையொட்டிப் பல அரசியல் நாடகங்களும் இடம்பெறுகின்றன. வடக்கிலும் தமிழருக்குத் தலைமை தாங்கப் பலர் உருவாகி விட்டனர். மலையக எழுச்சிக்கு உரிமை கொண்டாடப் பலர் வந்து விட்டனர். முஸ்லிம்களின் அரசியலும் ஒரு வகையான தலைமைகளுக்காகவும், கட்சிகளுக்காகவும் நாடகமாடுவதாக மாறியுள்ளது. இவையெல்லாம் எம்.எச்.எம்.அஷ்ரப் என்ற தலைவரின் மறைவின் பின் நடந்த மாயங்களாகும்.
மீண்டும் தமிழ்பேசும் சமூகம் எழுச்சி பெற வேண்டுமென்றால் இன்றைய இலங்கையின் ஆட்சிச் சூழலில் தமிழ்பேசும் சமூகத்தை வழிநடத்த தந்தை செல்வா போல் ஒரு தலைவர் வேண்டும். அல்லது அவர் சொன்னது போல் தமிழ்ச் சமூகத்தைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்றார்.
![]()