பலதும் பத்தும்

ஒரே குழந்தை இருமுறை பிறந்த அதிசயம்!

இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே குழந்தை இரண்டு முறை பிறந்துள்ளது. இது மருத்துவ உலகில் நடந்த மிகப்பெரிய அதிசயமாக பார்க்கப்படுகிறது.

இது பற்றி வைத்தியர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்த லூசி ஐசக் ஆக்ஸ்ஃபோர்ட் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் கருவுற்றார். இவரது கணவருக்கு கடந்த 2022ல் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குழந்தை பிறக்கப்போவது பற்றி மிகுந்த மகிழ்ச்சியாக இருந்த அவர், மிகவும் கவனமாகவும் இருந்திருக்கிறார்.

பின்னர் ஐசக் கருப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. புற்றுநோய்க்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் உயிரை காப்பற்ற முடியாது. ஆனால் 12 வார கரு உள்ளே இருக்கிறது.

எனவே, எப்படி சிகிச்சை அளிப்பது? கருவை கலைக்கவும் முடியாது. சரி பிரசவத்திற்கு பின்னர் புற்றுநோய் கட்டியை அகற்றலாம் என்றால், அதுவரை காத்திருக்க முடியாது. உயிருக்கு ஆபத்தாகிவிடும். இந்த இக்கட்டான சூழலில்தான் வைத்தியர்கள் திறமையாக பணியாற்றியிருக்கிறார்கள்.

அதாவது கருவை கருப்பையுடன் சேர்த்து வெளியில் எடுத்திருக்கிறார்கள். பின்னர் புற்றுநோய் கட்டியை ஆப்ரேஷன் செய்து அகற்றியிருக்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சை குறித்து வைத்தியர் ஒருவர் கூறுகையில், “நாங்கள் கருவை வெளியில் எடுத்து வைத்துவிட்டு கட்டியை அகற்றினோம். இது கொஞ்சம் சிக்கலான நடைமுறைதான். மொத்தம் 2 மணி நேரம் கரு வெளியில் இருந்தது.

ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் கருவின் வெப்பநிலையை நாங்கள் பரிசோதித்து வந்தோம். இறுதியாக நாங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்து முடித்தோம்” என்று கூறியுள்ளார். சுமார் 30 வைத்தியர்கள்கொண்ட குழுதான் இந்த சாதனையை செய்திருக்கிறது.

சிகிச்சை முடிந்து சில மாதங்களுக்கு பிறகு சராசரியான உடல் எடையுடன் குழந்தை ஆரோக்கியமாக பிறந்திருக்கிறது. இந்த சம்பவத்தை பொறுத்தவரை குழந்தை இரண்டு முறை பிறந்திருக்கிறது. மருத்துவ உலகில் இப்படியான அறுவை சிகிச்சைகள் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button