இலங்கை

பிள்ளையான் கைதை பயன்படுத்தி கம்மன்பிலவின் மூலம் தூண்டில் போடுவது யார்?

பேராசிரியர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரத்தில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ளதை போன்று அவசரப்பட்டு உதயகம்மன்பில செயற்படுவதன் காரணம் புரியவில்லை என்றும், ஆனால் பிள்ளையான் விடயத்தில் என்ன நடக்கின்றது என்பதனை அறிவதற்காக கம்மன்பிலவை பயன்படுத்தி ஏதோவொரு குழு தூண்டில் போட்டு பார்க்கின்றது என்றும் அமைச்சர் சுனில் ஹதுன்நெதி தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் ஹதுன்நெதி இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிள்ளையான் கைது செய்யப்பட்டிருக்கும் போது மக்கள் ஒன்றும் கூறாத நிலையில் கம்மன்பில கதறுகின்றார். இவர் சட்டத்தரணியாக நீதிமன்றத்திற்கு சென்றதை எவராவது கண்டுள்ளீர்களா? முதற்தடவையாக அவர் பிள்ளையானின் சட்டத்தரணியாகியுள்ளார். அவரை பார்த்துவிட்டு வந்த பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் அவருக்கு தொடர்பில்லை என்றும் தாக்குதல் காலத்தில் அவர் சிறையிலேயே இருந்தார் என்றும் கம்மன்பில கூறுகின்றார். எதற்காக இவ்வாறு வேலி பாய வேண்டும். பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்படவில்லை. பேராசியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே உள்ளே சென்றுள்ளார்.

ஆனால் கம்மன்பில வேறு ஒன்றை கூறுகின்றார். எதற்காக கம்மன்பில அவசரப்படுகின்றார். பிள்ளையானின் சட்டத்தரணியாக வர வேண்டிய அவசரம் என்ன? அவரை எதற்காக தேசிய வீரராக்க வேண்டும் என்று கூறுகின்றார். அவர் கூறுவதை பார்த்தால் நாங்களும் அவரை வீரராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை போன்றுள்ளது. கம்மன்பிலவுக்கு பின்னால் குழுவொன்று உள்ளது. பிள்ளையானை தேசிய வீரராக்க கம்மன்பிலவை பயன்படுத்தியுள்ளமையானது தூண்டில் போட்டு பார்ப்பதாகவே உள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அப்பாவி ஒருவரை சிக்க வைக்கப் போகின்றர் என்ற கருத்தை கொண்டு செல்லவே முயற்சிக்கின்றனர். ஆனால் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளமையானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பிரச்சினை அல்ல. இதற்கு அவசரப்படத் தேவை இல்லை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *