பலதும் பத்தும்

ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பது நல்லது

மும்பை அணியின் முன்னாள் அணித் தலைவர் ரோஹித் சர்மா. இவர் தற்போது மோசமான பார்மில் உள்ளார். பவர் பிளேயில் அதிரடியாக விளையாடி விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார்.

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக தொடங்கிய ரோஹித் சர்மா, 3 சிக்சர்களை விளாசியதால் பெரிய ஸ்கோரை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் 16 பந்துகளில் 26 ஓட்டங்களை மட்டுமே எடுத்து வெளியேறினார். இந்த பருவத்தில் ரோஹித் சர்மா இதுவரை விளையாடிய 6 இன்னிங்ஸ்களில் 82 ஓட்டங்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

இந்நிலையில் இந்த பருவத்தோடு ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சேவாக் கூறியுள்ளார்.

இது குறித்து சேவாக் தெரிவித்ததாவது, “ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் போது ரோஹித் சர்மா விலகுவது நல்லது. ஏனென்றால் வரும் காலங்களில் ரசிகர்களே, போதும்.. ஓய்வு பெறுங்கள் என்று கூற தொடங்கிவிடுவார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் ரோஹித் சர்மா ஒரேயொரு முறை மட்டுமே 400 ஓட்டங்களுக்கு மேல் சேர்த்திருக்கிறார். அவர் ஒவ்வொரு பருவத்திலும் 500 முதல் 700 ஓட்டங்களை அடிக்க வேண்டும் என்று நினைக்கும் வீரரும் அல்ல. இந்திய அணியின் தலைவராக இருக்கும் போது, பவர் பிளேவில் அட்டாக் செய்து ஓட்டங்களை குவிக்க வேண்டும் என்று ஆடினார். அணிக்காக தியாகம் செய்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் ஓட்டங்களை சேர்க்கவில்லை என்றால், அவரின் இத்தனை நாட்கள் கட்டி காத்த அனைத்தும் பாதிப்படையும்.

யாராவது அவரிடம் சென்று முதல் 10 பந்துகளை பொறுமையாக விளையாடுமாறு கூற வேண்டும். ஏதாவது ஒரு இன்னிங்ஸில் ரோஹித் சர்மா புல் ஷாட் விளையாட கூடாது என்று களமிறங்க வேண்டும். நான் விளையாடும் போது, பார்மில் இல்லாத போது சச்சின், ராகுல் டிராவிட், கங்குலி உள்ளிட்டோர் கொஞ்சம் நிதானமாக விளையாடுமாறு கூறியுள்ளனர். அதனை ரோஹித் சர்மாவுக்கு யாராவது சொல்ல வேண்டும் ” என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button