உலகம்

24 மணி நேர கெடு முடிந்ததால் சீனா மீது 104% வரியை விதித்தது அமெரிக்கா

அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்த 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெற சீனாவுக்கு விதித்த 24 மணி நேர கெடு முடிந்த நிலையில், சீனா மீது 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சீனா தனது 34% வரி அதிகரிப்பை திரும்பப் பெறவில்லை என்றால், ஏப்ரல் 9ம் திகதி (இன்று) முதல் சீனா மீது 50% கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும். கூடுதலாக, சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும். பிற நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் உடனடியாக நடைபெறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் 24 மணி நேர கெடு முடிந்தும் அமெரிக்கா மீதான 34 சதவீத வரிவிதிப்பை சீனா திரும்பபெறவில்லை. இதனையடுத்து சீனா மீது 104 சதவீத வரி விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த வரிவிதிப்பு இன்று புதன்கிழமை முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2ஆம் திகதி ட்ரம்ப் அறிவித்தார்.

அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம், இலங்கை 44 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5ஆம் திகதியிலிருந்தும், கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9ஆம் திகதிக்குப் பிறகும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன.ஏப்ரல் 10ஆம் திகதி முதல் அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்தது. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கான சீனாவின் பதிலடியாக இது அமைந்துள்ளது என சீன வர்த்த அமைச்சகம் அறிவித்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *