இலங்கை

பதிலளிக்காமல் தப்பிச் சென்ற ஜனாதிபதி அநுர; சாணக்கியன் விசனம்

கோத்தபாய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் உண்மைகளை மூடி மறைப்பதற்கு ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு சாதகமான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. இவ்விடயம் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி இரா. சாணக்கியன் கேள்வியெழுப்பியதுடன் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் ஜனாதிபதி தப்பித்துச் சென்றார் எனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் அரசாங்கத்திடமும், ஜனாதிபதியிடமும் பலமுறை கேள்வியெழுப்பினேன். ஆனால் இதுவரை அதற்கு உறுதியான பதில் கிடைக்கவில்லை.

இந்த நாட்டில் பல படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை , திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை , 11 தமிழ் மாணவர்கள் கடத்தல்- படுகொலை , கீத் நொயார் படுகொலை , லசந்த விக்கிரமதுங்க படுகொலை , பிரகீத் ஹெக்னலிகொட உள்ளிட்டவை பிரதானவையாக கருதப்படுகின்றன.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் கடந்த மாதமளவில் பரவலாக பேசப்பட்டது. சந்தேக நபர்களை விடுவிப்பதாக சட்டமா அதிபர் எடுத்த தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே இவ்விடயத்தில் ஏதோ மர்மம் உள்ளது. ஏனைய படுகொலைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

உடலகம ஆணைக்குழுவின் அறிக்கையில் திருகோணமலையில் ஐந்துமாணவர்கள் படுகொலை தொடர்பில் பில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டது.

2020 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவை அமைத்தார். இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் 11 மாணவர்கள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக பெயர்குறிப்பிட்ட வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக வழக்கு விசாரணைகளை முன்னெடுக்காமலிருக்க பரிந்துரைக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், தாஜுதீன், பிரகீத் எக்னெலிகொட உள்ளிட்ட பலரின் வழக்கு விசாரணைகள் கடந்த காலங்களில் மூடி மறைக்கப்பட்டன. இதற்கு அரசியல் காரணிகள் செல்வாக்கு செலுத்தின.

இலங்கை தமிழ்ச்சங்கம் 2004 முதல் 2009 ஆம் ஆண்டு முதல் படுகொலை செய்யப்பட்ட 34 தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.

கோத்தபாய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டன. மக்கள் சிறந்த ஆணையை வழங்கியுள்ளார்கள். அதனை சிறந்த முறையில் பயன்படுத்துங்கள். புதிய அரசியலமைப்பு தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் ஜனாதிபதி தப்பித்துச் சென்றார். ஆகவே இந்த கேள்விகளுக்கேனும் ஜனாதிபதி பதிலளிக்க வேண்டியது அவசியம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *