கொலைக் குழுக்களுக்கு அரசாங்கம் அஞ்சுகிறதா

கடந்த காலங்களில் கொலைகளிலும் மற்றும் சூழ்ச்சிகளிலும் ஈடுபட்ட குழுக்களுக்கு அரசாங்கம் அஞ்சுகின்றதா என்ற சந்தேகங்கள் நிலவுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
உரையாற்றும் போது சானக்கியன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் திரிபோலி பெட்ரோன் ஊடாக இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் இந்த பாராளுமன்றத்தில் அடிக்கடி கூறியுள்ளேன. ஆனால் இது தொடர்பில் எவ்வித விசாரணைகளும் இதுவரையில் நடக்கவில்லை. அரச புலனாய்வு அதிகாரிகள் இதில் தொடர்புபட்டிருந்தாக தெளிவாக கூறியிருந்தோம். அண்மையில் இடம்பெற்ற கணேமுல்லை சஞ்சீவ கொலை சம்பவத்தை தொடர்ந்து சாட்சியாளர்கள் பலர் சாட்சிகளை உங்களிடம் கூறி அதனை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினால் எங்களுக்கும் இதுவா நடக்கும் என்று கூறுகின்றனர்.
2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் மெனிக்பாமில் இருந்த 27 இளைஞர்கள் காத்தான்குடிக்கு கொண்டுவரப்பட்டு காத்தாங்குடியில் கொலை செய்யப்பட்டு கடலில் போடப்பட்டனர் என்று அதனுடன் தொடர்புபட்ட புலனாய்வு பிரிவினருடன் இருந்த வாகன சாரதியின் சாட்சியம் என்னிடம் வீடியோவாக உள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் கடந்த காலங்களில் இடம்பெற்ற சூழ்ச்சிகளை செய்த குழுக்களுக்கு பயப்படுகின்றதா? இவற்றை மூடி மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன என்றார்.
![]()