உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியை ரவிக்கு நன்கு தெரியும்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ரவி செனவிரத்ன, ஆணைக்குழுவின் தலைவர் ஜனக் டி சில்வாவிடம் , குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியின் பெயரை ஒரு தாளில் எழுதிக் கொடுத்துள்ளார். எனவே தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யாரென்பதை ரவி செனவிரத்னவிடம் கேட்டால் தெரிந்து கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுவகையில்,
பாதாளக் குழுக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக பேசுகிறேன்.ஆனால் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பாரதூரமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய கைதிகளுக்காகவே புஸ்ஸ சிறைச்சாலை உருவாக்கப்பட்டது. இந்த சிறைச்சாலையை அண்மித்த பகுதியில் இருந்தவாறு கைதிகளிடமிருந்து சாட்சியம் பெற்றுக்கொள்வதற்கு ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.எனினும் இன்றுவரை அந்த நோக்கம் வெற்றி பெறவில்லை.
சந்தேக நபர்களை நீதிமன்றத்துக்கு கொண்டுவரும் போது அவர்கள் முன்னிலையில் செல்வதற்கு நீதிபதிகள் தற்போது அச்சமடைந்துள்ளார்கள். பொலிஸ் மீதும், சிறைச்சாலை அதிகாரிகள் மீதும் நம்பிக்கையில்லை. அதேபோல் நீதிமன்ற ஊழியர்கள் மீதும் நம்பிக்கையில்லை. கடந்த 19 ஆம் திகதி புதுக்கடை நீதிமன்றத்தின் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இவற்றை கூறுகின்றேன்.
1971 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தான் பாதாளக்குழு தோற்றம் பெற்றது. அதன் பின்னரான காலங்களில் இது வளர்ச்சிப் பெற்றது. ஜே .வி.பி. தான் தமக்கு ஆயுதம் வழங்கியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.ஆகவே கடந்த அரசாங்கங்களை விமர்சித்துக் கொண்டிருக்காமல் பாதாளக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுங்கள்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்து தற்போது பேசப்படுகிறது. குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 747 பேர் கைது செய்யப்பட்டனர்.அக் காலப்பகுதியில் விசாரணைகளை சிறந்த முறையில் முன்னெடுத்த ரவி செனவிரத்ன, சானி அபேசேகர ஆகியோர் இன்று அரசாங்கத்தின் பக்கம் உள்ளனர் . ஆகவே உண்மையை வெகுவிரைவில் வெளிப்படுத்துங்கள்.
இராணுவ புலனாய்வு பிரிவில் எஸ்.ஐ. பண்டார என்பவரொருவர் இருக்கிறார்.அவர் இதுவரையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா?, அதேபோல் சொனிக், என்பவர் யார். குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜரான தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, ஆணைக்குழுவின் தலைவர் ஜனக் டி சில்வாவிடம் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியின் பெயரை ஒரு துண்டுத தாளில் எழுதிக் கொடுத்துள்ளார். ஆகவே தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யாரென்பதை ரவி செனவிரத்னவிடம் கேட்டுத்தெரிந்து கொள்ள முடியும்.
பயங்கரவாதி சஹ்ரானின் மனைவி ஹாதியா தற்போது இலங்கையில் இல்லை இந்தியாவில் உள்ளார். அவரை நாட்டுக்கு அழைத்து விசாரணை செய்யுங்கள். அதேபோல் சாராவின் உடற்கூறு பரிசோதனைகளை மேற்கொண்ட உத்தியோகஸ்தரையும் விசாரணை செய்யுங்கள். குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த காலங்களில் குறிப்பிட்டார்.அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஆகவே முறையாக விசாரணை செய்யுங்கள்.
ஜே .வி.பி.யின் முன்னாள் தலைவர் ரோஹன விஜேவீரவின் படுகொலை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் மேஜர் ஜெனரல் தோரதெனிய என்பவர் இந்த படுகொலையுடன் நேரடியாக தொடர்பு பட்டிருந்ததாக குற்றச்சாட்டப்பட்டது. ஆனால் இந்த நபர் ஜே .வி.பி.யின் நிகழ்வில் கலந்துக் கொண்டு மங்கள விளக்கேற்றியுள்ளார் என்றார்.
![]()