இலக்கியச்சோலை

ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ‘அரபு வசந்தம்’ நூல்:…  நடுநிலையான விளக்கம் தரும் வரலாறு!… என்.எம்.அமீன்

– என்.எம்.அமீன்
தலைவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போறம்.
 
அரபு வசந்தம் – மாற்றமா ஏமாற்றமா எனும் ஐங்கரன் விக்கினேஸ்வராவின்
நூல் ஜீவநதி பதிப்பகத்தின் 439 ஆவது வெளியீடாக வெளிவந்துள்ளது.
ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகளில் பல தசாப்தங்களாக நீடித்த சர்வாதிகார தோரணையில் அமைந்த ஆட்சி முறைக்கு 2010 முதல் இப்பிராந்தியங்களில் தோன்றிய புரட்சிகள் சவால் விட்டன.
இப்பிராந்தியங்களில் இருந்த ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளுக்கும் ஊழல் மோசடி நிறைந்த ஆட்சி முறைக்கும் எதிராக பொதுமக்கள் கிளர்ந்து எழ துவங்கினர் .
சிறு எதிர்ப்பு கோஷங்களோடு தொடங்கி , பாரிய ஆர்ப்பாட்டங்களாக, பேரணிகளாக, நாடு தழுவிய போராட்டங்களாக பரிமாணம் பெற்று, குறித்த ஆட்சியாளர்களை பதவிகளிலிருந்து தூக்கி எறிய வழிவகுத்தன. அரபு வசந்தம் (Arab spring) என அழைக்கப்படும் இந்த பிரபல்யமான போராட்டங்கள் துனிஷியாவில் தொடங்கி யேமன், லிபியா, சிரியா என பரவ ஆரம்பித்தன. அந்த நாடுகளில் இருந்த அரசியல் முறைமைகள் எதிர்வினைகளை ஏற்படுத்தின.
பல மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க அரபு நாடுகளின் அரசியல் கட்டமைப்பில் மாத்திரம் இன்றி பொருளாதார படிமுறைகளிலும் இப்போராட்டங்கள் தாக்கங்களை ஏற்படுத்தின. இந்த அரபு வசந்த போராட்டங்களை நடுநிலைமையாக நோக்குகின்ற போது இதனால் சாதக பாதக விளைவுகள் ஏற்பட்டதனை நோக்க முடியும்.
ஏனைய ஜனநாயக நாடுகளில் உள்ள மக்களோடு ஒப்பிடுகின்ற போது, இப்பிராந்திய மக்கள் ஜனநாயக ரீதியாக ஒவ்வொரு குடி மகனுக்கும் உள்ள சுதந்திர காற்றை முழுமையாக அனுபவிக்க முடியாதவர்களாக இருந்தனர்.
இந்த போராட்டம் காரணமாக ஜனநாயக ரீதியாக பெரும் விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டது. மக்கள் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்க வழிவகுத்தமை, மனித உரிமை, ஜனநாயக விழுமியங்களுக்கான தேவை என்பன இதன் மூலம் வலியுறுத்தப்பட்டன.
துனிசியா போன்ற நாடுகள், சர்வாதிகார போக்கைக் கொண்ட ஆட்சி முறைக்கு பதிலாக ஜனநாயக படிமுறையை தழுவி தன்னை ஜனநாயக நாடாக மாற்றிக் கொண்டன. அமைதியான முறையில் அரசியல் பரிமாற்றத்திற்கான ஒரு முன்னுதாரணமான நாடாகவும் இது மாற்றம் பெற்றது .
மக்களின் அபிலாசைகளுக்கும் எதிர்பார்ப்புக்கு மாற்றமான முறையில் ஆட்சி புரிந்து ஆட்சியாளர்கள் பதவி விலகி மக்களின் கருத்துக்கும் அபிலாசைக்கும் ஏற்ப ஆட்சி மாற்றங்கள் தோன்றவும் போராட்டங்கள் வழி வகுத்தன. ஒரு நாட்டில் அரசியல் சமூக மாற்றத்துக்கு பின்னால் இளைஞர்களின் பங்களிப்பு எவ்வாறு இன்றியமையாது என்பதை இப் போராட்டங்கள் மூலம் நன்கு அடையாளப்படுத்தப்பட்டிருந்தன.
இப்பிராந்திய நாடுகளில் பல தசாப்தங்களாக புரையோடியிருந்த மனித உரிமை மீறல்கள் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படல் , ஊழல் மோசடிகள், அரச பயங்கரவாத அடக்குமுறை என்பவற்றுக்கு எதிராக சர்வதேச கருத்தினை திசை திருப்பவும் இப்போராட்டங்கள் பெரிதும் துணை நின்றன.
எனினும் போராட்டங்களின் பின்விளைவுகள் மக்கள் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தவில்லை. புரட்சியின் சுழற்சி சக்கரம் ஒரு கட்டத்தில் எதிர் திசையில் சுழன்று மாறி இயங்க ஆரம்பித்தமை கவலைக்குரியது. மக்களின் உண்மையான புரட்சி இடை நடுவே கடத்தப்பட்டு மக்களுக்கு எதிரான புரட்சியாக தோன்றிய துர்ப்பாக்கிய நிலையை கண்டோம். லிபியா ,சிரியா, யேமன் போன்ற நாடுகளில் அரசியல் இஸ்திரமற்ற நிலையும் உள்நாட்டு போர் நிலையும் தோன்றி, பிராந்தியத்தில் நிச்சயம் அற்ற நிலை இப்போராட்டங்கள் தோற்றுவித்தன.
முதலீடுகள் இன்மை, முதலீட்டாளர்கள் வெளியேற்றம் , வேலை வாய்ப்பு இன்மை வறுமை போன்ற இன்னோரன்ன பொருளாதார ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டு பொருளாதார நலிவுற்றதை காணக்கூடியதாக இருக்கிறது.
அரபு வசந்தம் மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட இத்தகைய பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இப் புத்தகம் வாசகர்களுக்கு முழுமையான தெளிவையும் ஒரு நடுநிலையான விளக்கத்தையும் பெற்றுக் கொள்வதற்கு உதவும் என்று திடமாக நம்புகிறேன்.
என்.எம்.அமீன்
தலைவர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போறம் & பிரதமர் ஆசிரியர், உதயம் பத்திரிகை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *