இலங்கை

ரணில் தரப்புடனான பேச்சை நிறுத்தவும்; சஜித் அதிரடி முடிவு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைவது தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளதாகவும் ஊழல்வாதிகள் மற்றும் திருடர்களுடன் கூடிய ஒரு கட்சியில் ஐக்கிய மக்கள் சக்தி எப்படியாவது சேர முடிவு செய்தால் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருக்கட்சிகளுக்கும் இடையில் நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில் கட்சித் தலைவர்களின் தீர்மானங்கள் அறிவிக்கப்படுவம் வரை பேச்சுவார்த்தையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருக்கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடலை முன்னெடுப்பதற்கு உத்தியோகபூர்வமாக இருக்கட்சிகளும் குழுக்களை நியமித்துள்ள போதும், இறுதியாக இடம்பெற்ற கலந்துரையாடலில் ஹரின் பெர்னாண்டோ கலந்துகொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹரின் பெர்னாண்டோ கலந்துரையாடலில் பங்கேற்றமையால், பெரும்பான்மையான கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் அடிமட்டக் கட்சி உறுப்பினர்களிடமிருந்து அதற்கு எதிராக கடுமையான எதிர்வினை எழுந்துள்ளது.

இதனால் சஜித் பிரேமதாசவை சந்தித்த, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், திருடர்கள், மோசடி செய்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகள் இல்லாத கட்சியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதால், இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகளைக் கொண்ட எவருடனும் அல்லது எந்தவொரு கட்சியுடனும் எந்த அரசியல் தொடர்பும் இருக்கக்கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

கட்சியில் தற்போது ஊழல்வாதிகள் யாரும் இல்லாததால், ஊழல்வாதிகளைக் கொண்ட கட்சியுடன் ஐக்கியப்பட்டு அவர்களைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தியால் முடியாது என்பதையும் இந்த எம்.பி.க்கள் சஜித்திடம் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக பெயர்களைக் குறிப்பிட்டு, தற்போது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஹரின் பெர்னாண்டோ, மனுச நாணயக்கார மற்றும் வஜிர அபேவர்தன போன்ற தோற்கடிக்கப்பட்ட நபர்களை ஐக்கிய மக்கள் சக்தியில் சேர்க்கக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கட்சியின் அடிமட்டக் கருத்தைக் கேட்காமல், இதுபோன்ற ஊழல்வாதிகள் மற்றும் திருடர்களுடன் கூடிய ஒரு கட்சியில் ஐக்கிய மக்கள் சக்தி எப்படியாவது சேர முடிவு செய்தால், எதிர்காலத்தில் அவர்கள் சுயாதீனமான முடிவை எடுப்பார்கள் என்றும் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித்திடம் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான நிலைமைகளால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தனது இறுதித் தீர்மானத்தை அறிவிக்கும் வரை இரு கட்சிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *