இலங்கை

எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை நீக்க சபையில் பிரேரணை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்கும் வகையில் புதிய ஜனநாயக முன்னணி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தனி நபர் பிரேரணையொன்றை சபையில் முன்வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மக்கள் சேவைக்காக அன்றி அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகவே வழங்கப்படுகின்றது என்றும், இதனால் அந்தப் பணத்தை நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் அந்தப் பிரேரணையை முன்வைத்து ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை குறித்த தனிநபர் பிரேரணை முன்வைத்து உரையாற்றிய ரவி கருணாநாயக்க கூறுகையில்,

மக்கள் மத்தியில் பெரும் விரக்தியேற்பட்டுள்ள விடயமொன்றை குறிப்பிடுகின்றேன். பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிக்காலத்தை பூர்த்தி செய்த பின்னர் ஓய்வூதியம் பெறுவதற்கு வாக்காளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றனர். இதனால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்க வேண்டுமென வலியுறுத்துகின்றேன். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் மக்கள் சேவைக்காக அன்றி அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக வழங்கப்படுகின்றது என்ற விமர்சனங்கள் உள்ளன. இதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்காக சேவை செய்பவர்களாக இருக்க வேண்டும். அந்த பணத்தை நாட்டின் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சேவைகளுக்காக பயன்படுத்த வேண்டும் என்று கேட்கின்றேன். இதன்மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.

இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான நம்பிக்கை குறைவடைந்துள்ளது. இந்த நம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலேயே இந்த தீர்மானத்தை கொண்டு வருகின்றேன். மக்களின் எண்ணங்களின் வெளிப்பாடாகவே நாங்கள் இருக்கின்றோம். இதன்படி நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கோரிக்கையை செயற்படுத்த வேண்டும்.

215 பேர் ஓய்வூதியத்தை பாராளுமன்றத்தின் ஊடாக பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் நாட்டுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஓய்வூதியத்தை பெறுவது போன்றே காண்பிக்கப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த யோசனையை முன்வைக்க வேண்டியுள்ளது. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை செய்யுங்கள். அப்போது அவர்கள் மக்களுக்கான சேவையாளர்களாக இருப்பர். மலேசியா, இந்தியா போன்ற நாடுகளை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இதனூடாக புதிய கலாச்சாரத்தை உருவாக்கி பாராளுமன்றத்தை நம்பிக்கையுடனான கௌரவான இடமாக மாற்ற வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button