மகிந்த மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்படுமா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆளில்லா விமானத் (ட்ரோன்) தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே தெரிவித்த கருத்து மிகவும் பாரதூரமானவையெனவும் இவ்விடயம் தொடர்பில் பொலிஸாரால் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், ட்ரோன் தாக்குதலை சமாளிக்க மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பணியாளர்கள் போதாதெனவும் அது வேறு பிரச்சினையெனவும் தெரிவித்தார்.

ரி 56 துப்பாக்கிகளை கொண்டு ட்ரோன் தாக்குதலை முறியடிக்க முடியாது. இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் போது அவை தொடர்பான ஆதாரங்களை வெளியிட வேண்டும். எங்களுடைய ஆய்வின் அடிப்படையில் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் இல்லை. அவ்வாறு இருக்குமாயின் இராணுவ பாதுகாப்பு அதற்கு ஏற்றதல்லவெனவும் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டே இராணுவ பாதுகாப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் கேள்வி எழுப்ப முடியும்.

முன்னர் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு இரண்டு பொலிஸார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டனர். தற்போது ஆளுங்கட்சியிலுள்ள 159 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொலிஸார் பொதுமக்கள் சேவைக்கு இணைக்கப்பட்டுள்ளனர். பயிற்சி பெற்ற அதிகாரிகள் பொலிஸ் சேவையுடன் இணைந்து செயற்படுவதே பொருத்தமானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு இல்லாமல் கிராமங்களுக்கு செல்வதில் சிரமங்கள் காணப்படுவதாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கு அறிவித்துள்ளனர். கிராமங்களுக்கு செல்வது சிரமமென்றால் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதில் அர்த்தமில்லை. இவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துவதே தங்களுடைய நோக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *