இந்தியா

கரூரில் 41 பேர் உயிரிழந்த சோகம்: மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய த.வெ.க!

கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி, சிறுவர்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த சோக சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனையொட்டி, உயிரிழந்தவர்களின் நினைவாக, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.

கரூரில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அணமையில் தமிழக ​வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நினைவு தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அஞ்சலி செய்தியில், “2025 செப்டம்பர் 27 – என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக அமைந்த நாளாகும்.

சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம். நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் அரணாகவும் நாமே இருப்போம்” என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கரூரில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக நினைவிடம் கட்டப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *