அநுர அரசாங்கத்திலும் தொடரும் அடக்குமுறை; தியாகி திலீபனின் சிலை பொலிஸாரால் அகற்றல்!

யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த திலீபனின் வெண்கலச் சிலையை நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணப் பொலிஸார் அகற்றியமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் , தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான உணர்வுகளையும் கூட்டு நினைவேந்தல் உரிமையையும் அநுரகுமார அரசாங்கமும் அடக்குமுறைகளைப் பயன்படுத்தி ஒடுக்குவதாகவும் கடும் கண்டனங்களும் எழுந்துள்ள நிலையில் இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் போராட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயம் பகுதியில் தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாள் நிகழ்வான கடந்த 15ஆம் திகதி வெண்கல சிலை வைக்கப்பட்டு , தொடர்ந்து 12 நாட்கள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று, நேற்று முன்தினம் சனிக்கிழமை இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.இந்த நாட்களில் அஞ்சலி நிகழ்வுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்த பொலிஸார் பல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததுடன் ஒலிபெருக்கிகளும் பறித்துச் செல்லப்பட்டிருந்தன
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான சுமார் இருபது வரையிலான பொலிஸார் , இரண்டு வாகனங்களில் வந்து திலீபனின் வெண்கல சிலையை அவ்விடத்திலிருந்து அகற்றி அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர்.
யாழ் பொலிஸாரின் இந்த செயல் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்தச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர் தியாகதீபம் திலீபனுக்காக அமைக்கப்பட்டுள்ள வெண்கலச் சிலையை அகற்றுவதற்கு அனுமதிகோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாணம் பொலிஸார் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அதனை நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டதுடன் சிலையை அகற்றுவதற்கான அதிகாரம் பொலிஸாரிடமே இருப்பதால், இதில் நீதிமன்றத்தின் கட்டளைகள் அவசியமில்லை எனச் சுட்டிக் காட்டியிருந்தது.
இதனையடுத்து சட்ட ஆலோசனையைப் பெற்று திலீபனின் சிலையை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைப்பற்றப்பட்ட சிலை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஊடாக பொலிஸார் முன்னெடுப்பர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தியாக தீபம் திலீபனின் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், தியாக தீபம் திலீபனின் சிலையை மீள உரிய இடத்தில் உடனடியாக வைக்க வலியுறுத்தியும் இன்று திங்கட்கிழமை வடக்கு கிழக்குமாகாணங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.
![]()