இலங்கை

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்கள் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, பலாலியில் 15ஆவது வாரமாகவும் போராட்டம்

உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள தமது பூர்வீக காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, பலாலி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் நிலமீட்புப் போராட்டம் நேற்று 15ஆவது வாரமாகவும் தொடர்ந்தது.

தலைமுறைகள் வாழ்ந்த தமது சொந்த நிலங்களிலிருந்து நீண்டகாலமாக வெளியேற்றப்பட்டுள்ள மக்கள், தங்களது பூர்வீக உரிமையையும் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த கால அரசாங்கங்கள் பல ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்த நிலையில், காணி நிலங்களை விடுவிப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசு மக்களிடம் கையளிக்க முன்வராதது ஏன்? என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், ஊடகங்களுக்கு முன்பாக காணி விடுவிப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதைக் காட்டிலும், அரசாங்கம் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

குறிப்பாக, உடனடியாக விடுவிக்கக்கூடிய காணிகளை அடையாளம் கண்டு, அவற்றை காலதாமதமின்றி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்; வாக்குறுதிகள் அல்ல, நடைமுறைத் தீர்வே வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன், பலாலி மக்களின் நிலமீட்புப் போராட்டம் 15ஆவது வாரத்தையும் கடந்து தொடர்கிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *