மகிந்தவின் பாதுகாப்பு நீக்கம் நீதிமன்றத்திற்குச் செல்கிறது
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு நீக்கம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை நீக்கினால் அதில் திருப்தியடைய முடியும் எனவும் பொருளாதார காரணங்களுக்காக ஆயுதப்படை உறுப்பினர்களை நீக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட முப்படையினர் கடந்த 23 ஆம் திகதி முதல் நீக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தற்போதும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதால் அவரது பாதுகாப்பு நீக்கம் தொடர்பில் சட்ட நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு கௌதம புத்தரிடம் ஒப்படைக்கப்படுமெனவும் அரசாங்கத்தின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்துவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவுக்கு நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் புரிதல் இருக்கின்றதா என்பதில் எமக்கு சந்தேகம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இவர்களுடைய தீர்மானங்களை நாட்டின் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு பிரதானிகள் ஏற்றுக்கொள்வார்களானால் அது அவர்களுடைய தீர்மானமாகும். எனவே அதற்கான முழுப் பொறுப்பையும் அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
![]()