இலக்கியச்சோலை

எஸ்.பொன்னுத்துரை; இனநல்லிணக்கத்தைத் தேடுவோருக்கான திறந்த புத்தகம்!… இரண்டாம் விசுவாமித்திரன் (ஸ்ரீ லங்கா)

இலங்கையில் அறுபதுகளில் மேற்கிளம்பிய துடக்கு மனப்பான்மைகொண்ட முற்போக்கு இலக்கியக் கூட்டத்தினரால் எஸ்.பொன்னுத்துரையின் தமிழ் இலக்கிய வாழுகையை இல்லாமல் செய்ய முடியவில்லை. அதனால்தான் இன்றும் எஸ்பொ பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.அவர் தொடர்பில் பாலில் நெய்யாக மறைந்திருக்கும் பல விடயங்கள் வெளிக்கொண்டு வரப்படுதல் சேமமானது என்பது எனது கட்சி.அந்த முயற்சியே முஸ்லிம் நேசிப்பு அப்பிக் கிடக்கும் எஸ்பொவின் வாழ்வியலைப் படம் பிடிக்கும் இந்தத் தேடல் எத்தனமாகும்.

எஸ்பொவின் முஸ்லிம் நேசிப்பு என்பது யாழ்ப்பாணம் புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் மூன்றாம் வகுப்புப் படிக்கின்றபோது மன்னாரைச் சேர்ந்த எம்.எஸ்.ஏ ரஹீம் என்ற மாணவனுடன் ஆரம்பமாகின்றது. நல்ல கைமுழுத்தம். எஸ்.பொ பெற்ற உயர் கல்வியும் பாடசாலைச் சமூகமும் மட்டக்களப்புச் சூழலும் கம்பளை வாழ்க்கையும் இளம்பிறை எம்.ஏ.ரஹ்மானின் தொடர்பும் எஸ்பொவின் முஸ்லிம் நேசிப்புக்கு அடிப்படைக் காரணிகளாக அமைந்தன. அபுல்கலாம் ஆஸாத் ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். ‘அல்-ஹிலால்’ என்ற வாராந்த சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர். அவரது வாழ்வுமுறையை எஸ்பொ மிகவும் நேசித்தார். இதுபோன்றவை உப காரணியாய் அமைந்தன.

முஸ்லிம்களுடன் எஸ்.பொன்னுத்துரை கொண்டிருந்த தொடர்புகள்பற்றி மூன்று சிறிய தலைப்புகளின் ஆராய முற்படுகிறது இக்கட்டுரை. (1) முஸ்லிம்களோடு எஸ்பொ தொடர்புபட்டிருந்த வாழ்வுமுறை. (2) அவருடன் நெருங்கிப் பழகிய முஸ்லிம் ஆளுமைகள் (3) முஸ்லிம்கள்தொற்றி அவரின் கருத்தியல்

எஸ்.பொ தன்னை ஒரு நாத்திகவாதியாகக் கருதி வாழ்ந்தவர். அவர் எழுதிய நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களுள் ‘இஸ்லாமும் தமிழும்’ என்ற நூலும் அடக்கம்.அதனை அவர் எழுத ஆரம்பித்தபோது “இணை துணையற்ற ஏகனை நெஞ்சிலே நிறுத்தி இந்த எழுத்துப் பணியிலே என் பேனாவை ஊன்றுகின்றேன்”. எனறு குறிப்பிட்டுள்ளார். ‘இணை துணையற்ற ஏகன்’ என்று மனதில் உள்வாங்கும்போது-அவரிலிருந்து நாத்திகம் வெளியேறி விடுகின்றது.

முஸ்லிம்களோடு தொடர்புபட்ட விடயமொன்றைப் பேசுவதற்காக அவர் தனது அடிப்படைக் கொள்கைகளிலும்கூட விட்டுக் கொடுப்புக்குத் தயாராக இருந்தார் என்பதைச் சுட்டவே இதனைக் குறிப்பிட்டேன்.

ஆயிரக்கணக்கான இஸ்லாமிய நூல்களைக் கற்று அறபு மொழியின் இயல்புஇ அறபுத் தமிழ் வளர்ச்சி ஆகியனபற்றி ஓரளவுக்கு ஆராய்ச்சி செய்துள்ளதாக மேற்படி ‘இஸ்லாமும் தமிழும்’ என்ற நூலிலே எஸ்.பொ குறிப்பிட்டுள்ளார்.

“இஸ்லாமிய வாழ்க்கை முறையின் மேன்மையினையும் சகோதரத்துவத்தினையும் கம்பளையிலேயே நான் கற்றுக் கொண்டேன்” என்பதையும் அவர் பதிவு செய்திருக்கிறார்.

“பன்றி இறைச்சி ஹராமானது என்று நம்பிப் பயில்பவன் நான்.பன்றி இறைச்சி சாப்பிடுபவர்களுடன் நான் ஒரே மேசையில் அமர்ந்து சாப்பிடவும் மாட்டேன்” என்று ‘வரலாற்றில் வாழ்தல்’ என்ற நூலில் பேசுகிறார். முஸ்லிம்களின் வாழ்வுமுறையை அநுசரித்தவராக அவர் இருந்தார் என்பதற்கான சாட்சியமாக பன்றி இறைச்சிபற்றிய இக்கூற்று அமைந்துள்ளது.

கம்பளை ஸாஹிறா கல்லூரி, காத்தான்குடி மத்திய கல்லூரி, ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி போன்ற பிரபல முஸ்லிம் கல்லூரிகளில் அவர் ஆசிரியராகக் கடமையாற்றியவர். மட்டக்களப்பு மத்திய கல்லூரி, வந்தாறுமூலை மத்திய கல்லூரி போன்றவற்றிலும் பெரும் தொகையான முஸ்லிம் மாணவர்கள் அவரிடம் கல்வி கற்றனர்.அதுபற்றிய குறிப்பில் “அபூர்வ விசுவாசங்களும் நேசிப்புகளும் பாசங்களும் எனக்கு மட்டக்களப்பு மாநிலத்தில் முஸ்லிம் மாணவர்களிடமிருந்து பூரணமாகக் கிடைத்தன என்று எழுதியுள்ளார். மனதார அவர் விழைந்தது அவருக்கு விளைந்தது என்பதன் வாக்குமூலமே இந்தக்குறிப்பு.

முஸ்லிம்களின் தலைவராகவும் கல்வி அமைச்சராகவும் இருந்த கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அரசியலுக்கு வர முன்னர் கம்பளை ஸாஹிராக் கல்லூரியில் அதிபராய் இருந்தவர். 1954 ஆம் ஆண்டு எஸ்பொவுக்கு ஆசிரிய நியமனத்தை பதியுதீன் அவர்களே வழங்கினார். அதனைச் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் எஸ்.பொ குறிப்பிடத் தவறுவதில்லை.

கல்விமான்கள் பலரோடு பொன்னுத்துரைக்கு நெருக்கமான தொடர்பிருந்தது. அறிஞர். எம்.ஏ.எம்.சுக்ரி, புலவர்மணி ஆ.மு.சரீப்தீன், ஹாபிஸ் எம்.கே.செய்யத் அகமது,ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபராகவிருந்த ஒமர்தீன், கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.சமீம் , கல்விச் சேவை அதிகாரியான திருமதி அஸாரியா நுபைல் போன்றவர்கள் அவர்களுட் சிலராவர்.

எஸ்.பொவின் முஸ்லிம் தொடர்பின் பெரும் கணியம் எம்.ஏ.ரஹ்மானுடன் தொடர்புபட்டது. எனவே இளம்பிறை எம்.ஏ.ரஹ்மான்பற்றி இங்கு சற்று விரிவாகப் பேச வேண்டியுள்ளது.
1960 இல் நண்பர்களான இருவரும் தமிழ் இலக்கியத்தின் ஒரு புதிய சக்தியாக மேற்கிளம்பினர். முற்போக்கு இலக்கியவாதிகளின் புத்திஜீவித சர்வாதிகாரப் போக்கினையும் தங்களுக்குக் கிண்ணி தாங்குபவர்களுக்கு மாத்திரம் வர்ணம் பூசும் பக்கச் சார்பான விமர்சன அணுகுமுறையினையும் இருவரும் எதிர்த்து நின்றனர். ரஹ்மானுக்கும் பொன்னுத்துரைக்கும் இடையிலான உறவு தமிழிலக்கியத்தின் போக்கிலே பெரும் பங்களிப்புச் செய்துள்ளமை மறுக்க முடியாத உண்மை. பேராசிரியர் பொன்.பூலோகசிங்கம் போன்றவர்கள் இதற்குச் சாட்சியாக உள்ளனர்.

எம்.ஏ.ரஹ்மான் ‘இளம்பிறை’ என்ற சஞ்சிகையை 1964 இல் தொடங்கி ஒன்பது வருடங்களாக வெளிக்கொணர்ந்தார். தமிழ்பேசும் மக்கள் மத்தியிலே முஸ்லிம் கோலம் புனைந்து கலாசாரத் தூதுவனாக இளம்பிறை வெளிவந்ததோடு இலக்கியவாதிகள் மத்தியிலே புதிய ஆற்றல்கள் மின்னல் வெட்டாக வெளிக்கிளம்பவும் அச்சஞ்சிகை காரணமாயிற்று. அது வெளிவந்த சமகாலத்தில் வேறு சில கலை இலக்கிய மாசிகைகளும் சந்தையில் இருந்தன. கலைச்செல்வி, விவேகி, ஈழச்சுடர், மல்லிகை, புதுமை இலக்கியம் போன்ற சஞ்சிகைகள் அவற்றுள் குறிப்பிடத்தக்கன. இவற்றிலிருந்தெல்லாம் வேறுபட்டு புதியதொரு பார்வையுடன் இளம்பிறையின் பயணம் அமைந்தது. அப்பயணத்தில் ரஹ்மானுக்கு பூரண ஒத்தாசையுடன் எஸ்பொவும் இருந்தார் என்பதைச் சொல்லவே இளம்பிறைபற்றிய பேச்சு இங்கு வந்தது.

மறைந்த எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம் தனது குறிப்பொன்றில் இளம்பிறை எம்.ஏ ரஹ்மான் செய்த நூல் வெளியீட்டுப் பணியும் இலக்கிய முயற்சிகளும்
முற்போக்கு எழுத்தாளர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டன எனப் பதிவு செய்துள்ளார். எஸ்பொவுடன் நெருக்கமான நட்பில் ரஹ்மான் இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக இலக்கிய சர்வாதிகாரத்தை கையில் வைத்திருந்த முற்போக்குக் கூடாரத்தினரால் ரஹ்மானின் இலக்கியப் பங்களிப்புகள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்;பட்டன.

எம்.ஏ.ரஹ்மான்பற்றி எஸ்.பொ. பின்வருமாறு கூறுகின்றார். “என்னுடைய எழுத்தாற்றலைச் செப்பனிடவும் வளப்படுத்தவும் ரஹ்மானின் படைப்பாற்றலும் இலக்கிய நயப்பும் பெரிதும் உதவியிருக்கின்றன என்ற உண்மையை மிகுந்த நன்றிப் பெருக்குடன் இங்கு பொறித்து வைக்க விரும்புகின்றேன்”. இவ்வாறு ‘இஸ்லாமும் தமிழும்’ என்ற நூலில் பக்கம் 92 இல் மிகவும் தெளிவாக கூறியுள்ளார். இதே நோக்கில் “எம்.ஏ.ரஹ்மான் என் இனிய நண்பனாயும் பரமார்த்த இலக்கிய சகாவாகவும் வாழ்பவர் என்பதை இலக்கிய உலகம் நன்கறியும். அவருடைய நட்பின் செழுமையும் இணைந்ததுதான் என்னுடைய வாழ்க்கை” ;என்று நீலாவணன் ;:எஸ்.பொ.நினைவுகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். பொன்னுத்துரையின் மரணபரியந்தம்வரை ரஹ்மானின் நட்பு நீண்டு கிடந்தது.

எஸ்.பொவின் வாழ்வியல் காண்டத்தின் ஒரு துண்டம் இலக்கியம் என்றால் மறு துண்டம் அரசியலாகும்.அமைச்சராக உயர்ந்த ரி.பி இலங்கரத்னா போன்ற சிங்கள அரசியல்வாதிகள் சிலருடனும் வீ.நல்லையா போன்ற தமிழ் அரசியல்வாதிகள் சிலருடனும் அவருக்குத் தொடர்பிருந்தது. அதுபோலவே முஸ்லிம் அரசியல்வாதிகளுடனும் அவருக்கு நெருக்கமான உறவும் ஊடாட்டமும் இருந்தது.

கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் பதியுத்தீன் மகுமூத், சிறிமாவோ பண்டாரநாயகா அரசாங்கத்தில் தகவல் ஒலிபரப்புத்துறை உதவி அமைச்சராக இருந்த மூதூர் ஏ.எல்.ஏ.மஜீது, மட்டக்களப்பு பிரதிநிதி டாக்டர் பரீத் மீராலெப்பை ஆகியோர் மிக நெருக்கத்தில் இருந்த அரசியல்வாதிகள். அமைச்சராக இருந்த ஏ.எச்.எம். அஸ்வர், ஏறாவூர் பட்டினசபைத் தலைவர் எம்.ஏ.சி.ஏ.ரஹ்மான் ஆகியோரும் தொடர்பிலிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ‘சுவீற் மஜீது’ என அழைக்கப்பட்ட எம்.ஐ.எம்.அப்துல் மஜீது 1956 இல் பொத்துவில் தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்காகப் பிரச்சாரம் செய்த ஒரே தமிழர் எஸ்.பொன்னுத்துரை மட்டுமே. சம்மாந்துறை பீ.ஏ.மஜீது ஒழுங்கு செய்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலே சிங்கள அமைச்சர்களின் ஆங்கில உரைகளை எஸ்பொ தமிழில் மொழிபெயர்;த்த நிகழ்வுகள் பல உண்டு.

முதல் முழக்கம் என்ற நாடகத்தோடு எஸ்.பொன்னுத்துரை மட்டக்களப்பிலிருந்து கல்முனைக்கு வந்தபோது எம்.எம்.முஸ்தபா அவர்கள் துணை நிதியமைச்சராக பதவி வகித்தார். அச்சந்தர்ப்பத்தில் அவர் எஸ்.பொவுக்கும் நாடகக் குழுவினருக்கும் இரவு விருந்தளித்துக் கௌரவித்ததுடன் எஸ்பொவைப் பாராட்டியும் பேசினார். எதிர்ப்பக்கத்து
முஸ்லிம் அரசியல்வாதிகள்கூட அவரைப் பாராட்டியுள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

வானொலியில் ‘கலைக் கோலம்’ என்ற நிகழ்சியை எஸ்பொ நடத்தியபோது தமிழர்களுக்குப்போலவே முஸ்லிம்களுக்கும் போதிய வாய்ப்புகளை வழங்கினார். இலங்கை வானொலியுடன் தொடர்புபட்டிருந்த புத்தளம் எம்.எச் குத்தூஸ்,பணிப்பாளர் வீ.ஏ.கபூர், ,அறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீது,கிரிக்கட் வர்ணனையாளர் எஸ்.எம்.ஏ.ஜப்பார், சுஹைர் ஹமீட், . எம்.எம்.இர்பான் போன்றவர்கள் எஸ்.பொவுடன் நெருங்கியிருந்தவர்கள்.

முஸ்லிம் எழுத்தாளர்கள் பலரோடு நட்புடன் பழகினார். 1956க்கு முன்னரே புரட்சிக் கமால்,பித்தன்,கவிஞர் அண்ணல் ஆகியோருடன் அவருக்குத் தொடர்பிருந்தது அதேவேளை பல இலக்கியவாதிகளின் வளர்ச்சிக்கு வேராகவும் விழுதாகவும் எஸ்பொ இருந்தார். இலக்கிய முனைப்புடன் வாழ்ந்த இளம் முஸ்லிம் படைப்பாளிகளான எஸ்.எல்.எம் ஹனிபா. பாணந்துறை மொயின் சமீம் போன்ற பலருடைய இலக்கிய வரவுகளுக்கு எஸ்பொ ஆக்கமும் ஊக்கமும் அளித்தார். எஸ்.பொ.வின் தமிழ் ஊழியக் காலத்தின் பல்வேறு காலகட்டங்களிலும் அவரின் சகாக்களாகவோ நண்பர்களாகவோ வேண்டிய ஆலோசனை பெற்றவர்களாகவோ எழுத்துச் செப்பம் பெற்றவர்களாகவோ பல முஸ்லிம்கள் இருந்துள்ளனர். அந்தப் பட்டியல் சீனப் பெருஞ்:சுவர்போல் மிகவும் நீண்டது. இக்கட்டுரையாளனின் பெயர் உட்பட ஏதோவொரு வகையில் தொடர்புபட்டிருந்த தனக்கு ஞாபகத்திலிருந்த 80 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் பெயர்களை மட்டும் தனது சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.

எஸ்பொ வின் சிறுகதைப் பெருவெளியில் இருநூறுக்கு மேற்பட்ட கதைகள் உள்ளன. அவரது ‘வீ’ என்ற சிறுகதைத் தொகுப்பில்‘ஈரா’ என்ற கதை இடம்பெற்றுள்ளது. அது முஸ்லிம்கள் தொடர்பானது. ‘இத்தா’ என்ற சொல்லே சில கிராமப் புறங்களில் ‘ஈரா’ என வழங்கி வருகின்றது.

எஸ்பொ ஒரு பாலியல் எழுத்தாளர் என்று பிழையான கற்பிதத்தில் நம்மில் சிலர் உள்ளனர். எஸ்பொ பாலியல் எழுத்தாளர் அல்லர். அவர் கொக்கோகம் எழுதவில்லை. மனிதாபிமானப் பாலியலை தனது படைப்பு முயற்சிகளுக்குள் கொண்டு வந்தார். அவ்வளவுதான். அவரின் பல சிறுகதைகள் அதற்குச் சாட்சியமாக உள்ளன. அதில் ஒன்றுதான் ஈரா என்ற கதை. நனவோடை உத்தியில் யெசசயவiஎந நடையில் எழுதப்பட்ட கதை அது.

சுவை என்ற மற்றொரு கதையும் வீ தொகுப்பில் உள்ளது. ஒருபக்கக் கதை அது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வியல் அணுகுமுறையொன்றின் சிறப்புப்பற்றி அக்கதை பேசுகின்றத

முஸ்லிம்களின் வரலாறுபற்றி தெளிவான அறிவுடையவராக எஸ்பொ இருந்தார். இந்தியாவில் தனது பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த அவர் தனது ஆய்வுக்கு ‘முஸ்லிம் இந்தியா’என்பதையே தலைப்பாகத் தேர்ந்தெடுத்தார். அதன் ஊடாக முஸ்லிம்களின் உண்மை வரலாற்றை நன்கு தெரிந்து கொண்டார். மற்றவர்கள் சொல்ல மறந்த அல்லது சொல்ல மறுத்த பல விடயங்களை முஸ்லிம்கள் தொடர்பில் தனது எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்தினார்.
சோழர் ஆட்சியில் முஸ்லிம்கள் பெற்றிருந்த உந்நதநிலைபற்றி தீட்டு மனப்பான்மை காரணமாக நம்மவர்கள் சிலர் பேச விரும்புவதில்லை. ஆனால் எஸ்.பொ அதனைப் பேசினார்.
“சோழர்கள் ஆட்சி தமிழ்நாட்டில் உச்சம் பெற்றிருந்த வேளையில் முஸ்லிம்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தார்கள் என்றும் உயர்பதவி வகித்தார்கள் என்றும் சோழர் படையில் அகமது என்பவன் பல வீரர்களுக்குத் தலைமை தாங்கினான்” என்றும் எஸ்பொ எழுதியிருக்கிறார்.

சிலநேரங்களில் முஸ்லிம்கள் தொடர்பான தனது கருத்துக்களை எஸ்பொ துணிகரமாகவும் வெளியிட்டிருக்கிறார். கண்டிக் கலவரம்பற்றிய அவரின் கூற்று இதனை எண்பிக்கும்.‘1915 ஆம் ஆண்டு சிங்கள முஸ்லிம் இனக்கலவரம் கண்டியில் ஆரம்பித்தபோது சேர்.பொன்னம்பலம் இராமநாதன் சிங்களவரை ஆதரித்தார். அவர் எடுத்த நிலைப்பாடு முஸ்லிம்களுக்கு எதிராகத் தமிழர் எடுத்த பாதக நிலைப்பாடாகவே வரலாறு விளங்கிக் கொண்டுள்ளது. இதற்;காகத் தமிழ் இனம் நிச்சயமாக முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோரி இருக்க வேண்டும்’ என்று அவர் சொன்னார். வரலாற்றில் வாழ்தலில் இதனை நாம் வாசிக்கலாம்.

1990 இல் யாழ் முஸ்லிம்களை அங்கிருந்து அநியாயமாக வெளியேற்றமைபற்றி தமிழ் மக்கள் பலரும் அக்காலகட்டத்தில் வாய் திறக்கவேயில்லை. அநுதாபப்பட்ட சிலரும் அமைதி காத்தனர். ஆனால் எஸ்பொ “பெருந்தொகையான மக்கள் கூட்டம் ஒரே சமயத்தில் இவ்வாறு வேருடன் பிடுங்கி எறியப்பட்டமையானது மாபெரும் துயர நிகழ்வாகும். ஒரு சிலரின் செயலுக்காக முழு இனமும் தண்டிக்கப்பட்டதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது”.என்று அவர் பதிவு செய்துள்ளார்.

முஸ்லிம்கள் தனி இனமா? என்பது பற்றிய எஸ்.பொவின் கருத்தும் முக்கியமானது. சேர்.பொன்னம்பலம் இராமநாதன் போன்ற தமிழ்த் தலைமைகள் “முஸ்லிம்களை ஒரு
தனி இனமாக அங்கீகரிக்கத் தேவையில்லை” என்றும் “தமிழ்மொழி பேசுவதால் அவர்கள் தமிழர்களே” என்றும் வாதாடினர்.

ஆனால் முஸ்லிம்கள் தனி இனம் என்பது எஸ்பொவின் கருத்து.அவரது வாதாட்டம் இவ்வாறு அமைந்தது. “முஸ்லிம்கள் மொழி சார்ந்த அடையாளத்தினை என்றும் முதன்மைப் படுத்துவதில்லை. அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்போது அறபு மொழியின் மேன்மையினையும் புனிதத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள். எனவே நாடு சார்ந்தும் மொழி சார்ந்தும் இனம் சார்ந்தும் கோரப்படும் அடையாளங்களிலும் பார்க்க மதம் சார்ந்த அடையாளத்தையே முஸ்லிம்கள் முதன்மைப் படுத்துகிறார்கள். எனவே மொழிசார்ந்த அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட நாடுகளிலே முஸ்லிம்கள் அறபு மொழியின் வழிபாடு காரணமாக தனி இனமாகக் கருதப்படுதல் மகா நியாயமானது” முஸ்லிம்கள் தனி இனம் என்பதை அவரது வாதாட்ட முறை ருசுப்படுத்துகின்றது.

இஸ்லாமிய தமிழ் இலக்கியம் தொடர்பிலும் அவர் தனது கருத்தை ஓர்மத்துடன் முன்வைத்தார். 1580 – 1665 வரையான எண்பத்தைந்து வருட காலப் பரப்பில் இஸ்லாமியப் புலவர்கள் இயற்றிய தமிழ் இலக்கியப் பணிக்கு ஈடுசோடான தமிழ்ப் பணியை சைவம்இவைணவம் ஆகிய மதங்கள் சார்ந்த புலவர்கள் இயற்றவில்லை” என்று குறிப்பிடுகின்றார்.

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாடு பற்றி பரவலாக அறியப்படாத ஒரு விடயம் உள்ளது. மேற்படி மகாநாடுகளின் சிந்தனைத்துவம் எஸ்பொ விடமிருந்து வருகின்றது என்பதுதான் அது.

1964இல் வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் எஸ்.பொன்னுத்துரையின் சிந்தனையிலும் செயலுருவிலும் காப்பியப் பெருவிழாவொன்று இடம்பெற்றது. ஐம்பெரும் காப்பியங்களோடு கம்பராமாயணம் ,பெரியபுராணம் ,சீறாப்புராணம் ,தேம்பாவணி, இரட்சண்ய யாத்திரிகம் ஆகிய ஐந்து நூல்களைச் சேர்த்து பெருங்காப்பியங்கள் பத்து என்ற தொடரை அறிமுகம் செய்த விழா அது. அவ்விழாவிலே மருதமுனையைச் சேர்ந்த இஸ்லாமிய தமிழறிஞர் ஜே.எம.;எம்.அப்துல் காதிர் ஐம்பெரும் காப்பியங்களுக்கு ஈடாக சீறாப்புராணம் பற்றி மிகவும் விரிவாகப் பேசினார். அந்த உரையின் அருட்டுணர்வினால் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் 1966 இல் மருதமுனையில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா அப்துல் காதிரின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக இடம் பெற்றது. இந்த மருதமுனை விழாவே இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாடுகளின் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது என்பது வரலாறு. எனவே இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாடுகளின் தோற்றுவாய் எஸ்பொவின் சிந்தனையில் உதித்த வந்தாறுமூலை காப்பியப் பெருவிழாவே என்பது இங்குள்ள செய்தியாகும்.

மேலே தொட்டுக்காட்டிய கருத்தியல்கள் எஸ்பொ பேதம் கடந்த பெரிய மனிதர் என்பதை பறை சாற்றுகின்றது.

எஸ்.பொன்னுத்துரை கல்வி,இலக்கியம் ,அரசியல் ஆகிய முத்தளங்களில் முஸ்லிம்களுடன் கொண்டிருந்த உறவுகள் பற்றிய சிறிய பின்னமொன்றையே இக்கட்டுரை பேசுகின்றது. தமிழ் முஸ்லிம் உறவின் முக்கியத்துவம் பற்றிப்பேசப்படும் இன்றைய காலகட்டத்தில் அவரின் வழியைப் பின்பற்றி இனநல்லுறவுக்கு ஆதரவாக நிற்கலாம் என்ற நல்ல நோக்கமே இக்கட்டுரையில் மையம் கொண்டுள்ளது.

இனநல்லிணக்கத்தைத் தேட விழைவோருக்கு எஸ்பொன்னுத்துரையின் வாழ்வு திறந்த புத்தமாக உதவும் என்று நான் விசுவாசிக்கின்றேன்.

(அக்கினிக்குஞ்சு இணைய இதழ் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி) என்பன இணைந்து 17-18.12.2021 இல் நடத்திய மெய்நிகர் நிகழ்வில் மூதறிஞர் எஸ்.பொவின் நினைவுப் பேருரை இரண்டாம் நாள் நிகழ்வின்போது ஆற்றிய எனது உரையின் சுருக்க வடிவம்.)

 

 

 

 

 

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button