நாங்கள் வெற்றி பெற்று விட்டோம்….

ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு முன்னரே நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்று விட்டோம் என்று தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில்  நடத்தப்பட்ட பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இங்கு அவர் மேலும் பேசுகையில்,

எமது தேர்தல் மேடையில் நாங்கள் இனவாதம், மதவாதத்தை பயன்படுத்தவில்லை. ஆனால் சஜித்தின் மேடையானது இனவாதம், மதவாதத்தை தூண்டும் வகையில் எங்களுக்கு எதிராக கருத்துக்களை பரப்பும் வகையிலேயே அமைந்துள்ளது.

வடக்கு, கிழக்கில் நாங்கள் கைவிட்ட அரசியல் இருக்கும் என்று நினைத்தனர். ஆனால் அங்கே தமிழ், முஸ்லிம் மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இருக்கின்றனர். அவர்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வந்துள்ளது. வடக்கு, கிழக்கு, தெற்கு என பிரிந்திருந்து செய்த அரசியலை விடுத்து அனைத்து மக்களையும் ஓரிடத்தில் இணைக்கும் அரசியலை செய்துள்ளோம். எமது வெற்றிக்கு முன்னரே நாங்கள் இந்த விடயத்தில் வெற்றிபெற்றுள்ளோம். அதேபோன்று நல்லிணக்க வேலைத்திட்டங்கள் தொடர்பில் எங்களின் கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கியுள்ளோம்.

நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட நாட்டை போசனைமிக்க நாடாக மாற்றும் வேலைத்திட்டங்களை நாங்கள் செய்யவுள்ளோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்தால் எரிவாயு மற்றும் எரிபொருள் இல்லாமல் போகும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். அவர் யார்? அரபிய சுல்தானா? உண்மையில் இங்கே எரிபொருள், எரிவாயு, பால்மா நெருக்கடியை ஏற்படுத்திய ஸ்தாபகர் ரணில் விக்கிரமசிங்கவே ஆகும். இறுதியில் கோதாபயவே கழுத்தை கொடுத்துள்ளார்.

எப்போதும் மக்கள் வாக்குகளை கொடுத்து அரசாங்கத்தை அமைத்து இறுதியில் மக்களே பாதிக்கப்படுகின்றனர். நாட்டையே நிர்க்கதியாக்குகின்றனர். கோதாபயவை தெரிவு செய்தவர்கள் இவ்வாறு வெட்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எதிர்பார்ப்புகளுடனேயே மக்கள் வாக்களிக்கின்றனர். இந்நிலையில் செப்டம்பர் 21ஆம் திகதி தேசிய மக்கள் சக்திக்கு வாக்களியுங்கள். உங்களின் கௌவரம் பாதுக்கப்படும். நாங்கள் திசைகாட்டிக்கே வாக்களித்தோம் என்று பெருமையாக கூறும் நிலை உருவாகும். மக்களின் நம்பிக்கையை வென்ற ஆட்சியை நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button