முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்பதால் பிரசாரக் கூட்டங்களுக்கு உச்சக் கட்டப் பாதுகாப்பு

தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதால் பிரதான வேட்பாளர்கள் இறுதிப் பிரசாரக் கூட்டத்தை பிரமாண்டமாகவும் வெற்றிகரமாகவும் நடத்தி முடிப்பதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கூட்டணிகளின் தலைவர்கள் அனைவரும் கடைசி கூட்டத்தில் ஒன்றாக பங்கேற்பதால் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாட்டுக்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் கடைசி தேர்தல் பிரசாரக் கூட்டம் கொழும்பு மாநகர எல்லையை மையப்படுத்தியதாக அமையவுள்ளது.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தல் நிலவரம் தொடர்பில் வெளிநாட்டு உளவு அமைப்புகளும் களத்தில் இறங்கி தீவிரமாக செயற்பட்டுவருதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தேர்தல் நாள் மற்றும் தேர்தலுக்கு பிந்தைய காலம் முழுவதும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது. பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய இராணுவத்தினர் ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்துமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி அனைத்து பாதுகாப்புப் படைத் தளபதிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் நடவடிக்கைகளை சுமூகமாக நடத்துவதற்காக 54,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். செப்டெம்பர் 21 ஆம் திகதி வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து, முடிவுகள் அறிவிக்கப்படும் வரை வாக்களிப்பு நிலையங்களுக்கு வெளியேயோ அல்லது வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வெளியிலோ குழுக்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்படாது என்றும் கொழும்பு நகரின் பல முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 13 ஆயிரத்து 421 வாக்களிப்பு நிலையங்களில் செப்டம்பர் 21ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. மாலை 6 மணி முதல் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button