சிலிர்ப்பான காட்சிகளுடன் நடந்த ஸ்ரீ முனீஸ்வரன் ஆலய திருக்குடமுழுக்கு விழா
சிவந்த வானத்தில் சூரிய உதயம் ஒருபுறம், பஞ்சவர்ணங்களில் ஜொலிக்கும் ராஜகோபுரம் ஒருபுறம், ‘ஓம் நமசிவாய’வென பஞ்சாட்சர மந்திர கோஷம் எழுப்பும் மக்கள் வெள்ளம் ஒருபுறம் என சிலிர்ப்பான காட்சிகளுடன் நடந்தேறியுள்ளது காமன்வெல்த் டிரைவ் ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தின் திருக்குடமுழுக்கு விழா.
ஜுலை 12ஆம் திகதி அதிகாலை நான்கு மணிக்கே மங்கள இசை முழங்க வழிபாடுகள் தொடங்கின. காலை 5.45 மணியளவில் தீபாராதனை செய்யப்பட்டு, கடப்புறப்பாடு தொடங்கியது. சரியாக 6.45 மணிக்கு 43 சிவாச்சாரியார்களின் வேத முழக்கங்களுடன் குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரங்கள், தீபாரதனை நடைபெற்றது.


தொடர்ந்து சிங்கப்பூரின் 27 கோயில்களிலிருந்தும், பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலிலிருந்தும் பேராளர்கள் அவரவர்களின் கோவில் வழக்கத்துக்கேற்ப சிறப்பு வரிசைத் தட்டுகளுடன் ஸ்ரீ முனீஸ்வரனுக்கு மரியாதை செலுத்தினர். இக்கோயிலின் தலைவர் திரு ரெத்தினம் செல்வராஜு அவர்களுக்கு பதில் மரியாதையை செய்து வழியனுப்பினார்.
கோயிலுக்கு வெளியில் பக்தர்கள் அமர்ந்து குடமுழுக்கைக் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளே நடப்பவற்றைக் காண இரு பெரிய திரைகள் அமைக்கப்பட்டு நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.
ஏறத்தாழ 800 தொண்டூழியர்கள் பம்பரமாகச் சுழன்று பக்தர்களுக்கு வழிகாட்டுவது, உணவுக்கூடங்களை கவனிப்பது என அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து, குடமுழுக்குத் தீர்த்தம், குங்குமப் பிரசாதம் அடங்கிய 10,000 பைகள் பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
வருகைதந்த பக்தர்களுக்கு அன்னதான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை (ஜூலை 11) நள்ளிரவிலிருந்தே தயார்செய்யப்பட்ட உணவு, வெள்ளிக்கிழமை அதிகாலை இக்கோயிலுக்கு தருவிக்கப்பட்டது. 10,000 பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட உணவை ஒரே நேரத்தில் 800 பேர் அமர்ந்து சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

![]()