சாலை விபத்தில் பெற்றோர் மரணம்… 55 மணி நேரம் காரில் சிக்கிய நிலையிலும் தம்பியைக் காப்பாற்றிய 5 வயதுச் சிறுமி
கார் விபத்தில் பெற்றோரை இழந்த 5 வயதுச் சிறுமி, 1 வயது தம்பியின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறாள்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் கிராமப்புறத்தில் கார் விபத்து நேர்ந்தது. சேதமடைந்த காரில் 3 இளம் பிள்ளைகள் 2 நாள்களுக்கும் மேல் சிக்கியிருந்ததாக Nine News செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அவர்களின் 25 வயது தாயும் 28 வயது தந்தையும் விபத்தில் மாண்டனர்.
3 பிள்ளைகள் உயிர் பிழைத்தனர். சேதமடைந்த காரில், அதிகரித்த வெப்பநிலையில், இறந்துபோன பெற்றோருடன் வாகனத்தில் அவர்கள் சிக்கிக்கொண்டனர்.
உறவினர் ஒருவர் அவர்களைக் கண்டுபிடித்தார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு உரிய நேரத்தில் சென்றுசேராததை அடுத்து, அக்குடும்பத்தைக் காணவில்லை என்ற புகார் தொடுக்கப்பட்டதாக Nine News செய்தி நிறுவனம் தெரிவித்தது.
5 வயதுச் சிறுமி 1 வயது தம்பியைக் குழந்தை இருக்கையிலிருந்து விடுவித்து அவன் உயிரைக் காப்பாற்றியதாக உறவினர் கூறினார்.
அதிகரித்த வெப்பநிலை அவர்களின் நிலமையை மோசமாக்கியது என்றும் அவர் தெரிவித்தார்.
55 மணி நேரங்களுக்கு 30 டிகிரி செல்சியஸ் (degree celsius) வெப்பத்தில் பிள்ளைகள் தவித்தனர்.
நீர்ச்சத்து வெகுவாகக் குறைந்த நிலையில் குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் காவல் துறையினர் கூறினர்.
பிள்ளைகளின் உயிருக்கு அபாயம் இல்லையென்றும் வரும் நாள்களில் அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பக்கூடும் என்றும் Nine News செய்தி நிறுவனம் தெரிவித்தது.
![]()