கதைகள்

நடுகைக்காரி!…. 44 …. ஏலையா க.முருகதாசன்.

ஞானத்துடன் தனக்கு இருக்கும் காதல் விடயம் பள்ளிக்கூடம் முழுவதும் பரவிவிடுமோ என்று பயப்பட்ட புஸ்பகலா அதை மூடிமறைப்பதற்காக முயற்சித்தும் அவளையுமறியாமலே ஞானத்துடன் அவள் நெருக்கமாகிக் கொண்டிருந்தாள்.

ஞானமும் தான் அவளைக் காதலிக்கவில்லை நட்புடன் பழகுவதாக நினைத்துக் கொண்டாலும் அவனும் அவனையறியாமலே மனதால் நெருங்கிக் கொணடிருந்தான்.

பொதுவாக பள்ளிக்கூடங்களில் ஒரு பருவ வயது மாணவியும் ஒரு இளம் மாணவனும் நெருங்கிப் பழகிக் கதைச்சாலே அந்தச் செய்தி பள்ளிக்கூடம் முழுவதும் பரவிவிடும்.

மாணவியிடம் „ உன்ரை ஆள் அங்கை வாறார்’ என்றும்,மாணவனிடம் „ உன்ரை மகாராணி அங்கை வாறா’ என்று சொல்லியே சிறு நெருப்பாய் இருக்கும் ஈர்ப்பை பெரும் காதலாக மாற்றிவிடுவார்கள் சக மாண மாணவிகள்.

ஒரு மாணவியை „அவள் வடிவானவள் „ என்று ஒரு மாணவன் சொன்னாலே,’உங்களை வடிவான கேர்ள்’ என்று அவன் சொல்கிறான் என்று,வடிவானவள் என்று சொல்லப்பட்ட மாணவியைக் கடந்து போகிற போது கண்களாலும் கைவிரல்களாலும் பின்னால் வரும் மாணவனைச் சுட்டிக் காட்டிவிட்டுச் செல்லும் மாணவர்களும்,’வடிவானவள் „ என்று தன்னைச் சொன்ன மாணவனை கடைக் கண்ணால் பார்ப்பதும்,தனது டிவிசன் இல்லாவிட்டாலும் அந்த மாணவனை தண்ணீர்ப் பைப்படியில் பார்ப்பதற்காக தேநீர் இடைவேளையின் போதும்,மத்தியான இடைவேளையின் போதும் வேகமாக தண்ணீர் குடிக்கப் போவதும் உண்டு.

மாணவர்கள் மட்டுமல்ல,மாணவிகளும் இதில் சளைத்தவர்கள் அல்ல,தூரத்தில் வரும் மாணவனை „அங்கை பாரடி உன்னட்டைத்தான் வந்து கொண்டிருக்கிறார்’ என்று ஒரு மாணவனைக் காட்ட,அவளும் திரும்பிப் பார்க்க,அவளுக்கருகில் வந்து கொண்டிருக்கும் அவனை அவள் கடைக் கண்ணால் பார்க்க,தோழிகள் அவளை இடித்துத் தள்ள,தடுமாறியவள் அவனருகில் செல்ல,இருவருக்குமான அருகருகான இடைவெளி நிலையில் கஞ்சி போட்டு பக்குவமாக அயன்பண்ணிய சீருடையின் வாசத்தையும் அவளுடைய உடல் வாசத்தையும் சுவாசம் உள்வாங்க அதுவே அந்த மாணவியின் நினைவாக மாற பள்ளிக்கூடம் விட்டு மாலையில் வீடு போனபிறகும் அவளின் நினைவு அவனை அலைக்கழிக்க எப்ப விடியும் எனக் காத்திருந்து வழமைக்கு மாறாக நேரத்தோடு நித்திரை விட்டெழுந்து ஒருமுறைக்கு இரண்டுமுறை சவர்க்காரம் போட்டு தென்னம் பொச்சால் உடம்பை உரசு உரசு என்று உரசிக் குளிச்சிட்டு,காய்ஞ்ச சிரட்டைகளைத் தேடி எடுத்து அயன் பொக்சுக்குள் போட்டுச் சூடாக்கி ,கால்சட்டையையும்,சேர்ட்டையும் அவசரம்

அவசரமுhக அயன்பண்ணிக் கொண்டிருந்த மகனிடம் „ என்னடா இண்டைக்கு பரபரக்கிறாய் „ என்று தாய் கேட்க,கேட்டும் கேட்காத மாதிரி வேகமாக உடுப்பைப் போட்ட பின் தாய் அவிச்சு வைச்ச இடியப்பத்தைச் சொதியோடு பிசைஞ்சு வாயில் அள்ளிப் போட்டு வாயை கொப்பளித்தது பாதி கொப்பளிக்காதது பாதியாக ஒரு மாணவனை பள்ளிக்கூடம் நோக்கி ஓட வைக்கின்ற மாயத்தை சக மாணவி ஒரு மாணவனுக்கு கொடுத்திருப்பாள்.

ஞானத்தை நோக்கிய புஸ்பகலாவின் ஈர்ப்பும் பள்ளிக்கூடத்தை ஒரு விரும்பிய இடமாக மாற்றியிருந்தது..வகுப்பில் மட்டும் அமைதியாக இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்றிருக்கும் ஞானம், வகுப்பைவிட்டு வெளியே வந்ததும் அவனைச் சுற்றி குறைந்தது ஐந்து வகுப்புத் தோழர்களாவது இருக்குமாறு வைத்துக் கொள்வான்.

படிப்பிக்கும் ஆசிரியர்களிலிருந்து மாணவர்கள் வரை ஒவ்வொரு பட்டப்பெயர் வைச்சு நகைச்சுவையாகப் பேசி அட்டகாசமாகச் சிரிப்பது அவனது தோழர்களுக்கு மட்டுமல்ல,சில மாணவிகளுக்கும் அவனைப் பிடிச்சிருந்தது.

ஞானத்தின் உயர்ந்த தோற்றம் எவருக்கும் அஞ்சர்த பார்ப்பது போல நேராகப் பார்க்கும் பார்வை இவை அனைத்தும் புஸ்பகலா ஞானத்தை நோக்கி ஈர்க்கப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணமாகும்.

தேநீர் இடைவேளையின் போது வகுப்பைவிட்டு தண்ணீர்ப் பைப்படிக்குப் போகும் அந்த நடைபாதையில்தான் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளுப்படுவதும் சிரிப்பதும் நடைபெறும்.

ஒரு நாள் ஞானத்துடன் கதைச்சுக்; கொண்டிருந்த மாணவர்களில் ஒருவன் ஞானம் சொன்ன பகிடிக் கதையைக் கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தபடியே’போடா நீ பொய் சொல்கிறாய் என்று சொல்லிக் கொண்டே அவனைத் தள்ளிவிட,அவன் தள்ளிவிடுவான் என எதிர்பாராத ஞானம் நிலைகுலைந்து கால்கள் தள்ளாடிப் பிசக,பின்னால் வந்த புஸ்பகலாவை அவன் தள்ளிக் கொண்டே சுவரோடு போக,அதை எதிர்பாராத புஸ்பகலா தான் விழுந்துவிடுவேனோ என்ற பயத்தில் தான் தளம்பாமலிருப்பதற்காக அவனின் தோளைப் பிடிக்க,அவள் கையிலிருந்த வாழைப்பழத்தோலின் உட்பகுதி அவனின் தோள்பட்டைச் சட்டைப் பகுதியில் வழுக்கிச் செல்கிறது.

தான் விழாமல் தன்னை நிலைநிறுத்தியவள், ஞானத்தின் தோள்பட்டைச் சேர்ட் வாழைப்பழத்தின் உட்பகுதியால் ஊத்தையாகி கிடப்பதைக் கண்டதும் „ஐயோ சொறி சொறி’ என்று சொல்லிக் கொண்டேதனது கையிலிருந்த லேஞ்சியால் துடைத்துவிடுகிறாள்.

என்ன நடக்கிறது என்பதைத் தீர்மானிப்பதற்குள் பத்துவிநாடிகளுக்குள் இவை நடந்து முடிந்து விடுகின்றது.

அவனுடைய வகுப்புத் தோழர்களும், அவளின் வகுப்புத் தோழிகளும் யாராவது மாஸ்ரேர்ஸ் ரீச்சேர்ஸ் பார்க்கிறார்களா என சுற்று முற்றும் பார்க்கிறார்கள்.

„காசு குடுக்காமலே ஒரு படம் பார்த்திட்டம்’ என்று ஞானத்தின் தோழர்கள் சொல்லலு’இப்ப கொஞ்ச நேரத்துக்கு முந்திதத்தான் புஸ்பா தன்ரை மூக்கில் வழிந்த சளியை இந்த லேஞ்சியால் துடைத்தவள், அதாலை உங்களைத் துடைச்சிருக்காள்’ என்று ஒரு தோழி சொல்ல,’பரவாயில்லை அவா எதாலை துடைச்சாலும் எனக்குப் பிரச்சினை இல்லை,ஏனென்றால் அவா என்னுடைய…’ என்று எதையோ சொல்ல நினைச்சு சொல்ல வந்ததை சொல்லாமல் விட்டுவிடுகிறான் ஞானம்.

„அவா என்னுடைய…’ என்ற ஞானத்தின் வார்த்தை புஸ்பகலாவின் இதயத்துக்குள் பாய்ந்துவிடுகிறது.

ஞானத்தைக் காதலோடு பார்துதவளின் கண்கள் மினுமினுத்தன.தான் விழாமலிருப்பதற்காக ஞானத்தின் தோளைப் பிடித்த புஸ்பகலாவின் முகம் ஞானத்தின் முகத்தோடு மிக அருகிலிருந்ததால், அவள் பதைபதைப்பினால் வேகமாக மூச்சுவிட அந்த மூச்சுக் காற்று அவனின் முகத்திலும் மூக்கிலும் சொண்டுகளிலம் பட்டுச் செல்கிறது.

தலையைக் குனிந்தவாறே புஸ்பகலா தண்ணீர்ப் பைப்படிக்குச் செல்ல ஞானமும் நண்பர்களும் அவனோடு கலகலப்பு எதுவுமின்றி அமைதியாக தண்ணீர்ப் பைப்படிக்குச் செல்கின்றனர்.

புஸ்பகலாவும் தோழிகளும் தண்ணீர்ப் பைப்படிக்கு அமைதியாகச் சென்றாலும்,தோழிகள் அடிக்கடி புஸ்பகலாவின் முகத்தைப் பார்ப்பதும் குசுகுசுப்பதுமாகச் சென்று கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒருத்தி „ என்ன புஸ்பா முகம் சிவந்திருக்கு „ என்று கேட்க „ என்ன நீ தெரியாத மாதிரிக் கேட்கிறாய்,முகத்தில் முகம் பார்த்தாள் எல்லாம் சிவக்குந்தானே’ என்று இன்னொருத்தி சொல்ல „எல்லாம் சிவக்குந்தானே „ என்ற உள்ளர்த்தம் விளங்கி அவளின் தோழிகள் சிரிக்கின்றனர்.

„ எல்லாம் சிவக்குந்தானே’ என்பதன் அர்தத்தை புரிந்து கொண்டு புஸ்பகலாவின் சொண்டுகள் சிவந்து மெலிதாக உணர்ச்சிவசப்பட்டு நடுங்கத் தொடங்கின.

பைப்படிக்கு வந்த ஞானமும் புஸ்பகலாவும் எதிரெதிரே நின்று கைளால் ஏந்தி தண்ணீர் குடித்துக் கொண்டே „காலமை இஞ்சிச் சம்பலோடை புட்டுச் சாப்பிட்டனீங்களோ „ என்று ஞானம் கேட்க,திகைப்புடன் „எப்பிடி அறிஞ்சனீங்கள் „ என்று புஸ்பகலா கேட்க „ உங்கடை மூச்சுக் காத்துத்தான் அதைச் சொன்னது „ என்கிறான் ஞானம்.

ஞானம் சொன்னதைக் கேட்டு புஸ்பகலா வெட்கப்படுகிறாள்.ஞானமும் புஸ்பகலாவும் சத்தம் கேளாமல் கதைப்பதைக் கண்ட தோழிகள் „அங்கை பார் „ என்பது போல கண்களால் பேசிக் கொள்கின்றனர்.

அடுத்த நாள்…

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button