கதைகள்

மனதொரு மரம்!… ( சிறுகதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

ஒலுவடா நாட்டின் ஒரு விசித்திரமான வழக்கம். அந்த நாட்டில் குற்றத்தை நீதிமன்றத்தில் விவாதித்து தீர்ப்பு வழங்கியபின் மரணதண்டனை பெறும் கைதியை மட்டும் வழக்கைத் தொடுத்தவர் தண்டிக்கலாம். மரண தண்டனை பெறும் அளவுக்கு ஒருவன் இருந்திருந்தால் அவன் எத்தகைய கொடூரமானவனாக இருந்திருப்பான். அதனாலேயே அத்தகைய கொடூரத்தை அனுபவித்தவருக்கு அல்லது குடும்ப உறுப்பினருக்கு தண்டனையை வழங்கும் சந்தர்ப்பத்தை அரசு வழங்கியுள்ளது.மரண தண்டனை சற்று வித்தியாசமானது. கிரிக்கெட் மைதானம் அளவுக்கு ஒரு திறந்தவெளி இருக்கும். அதன் நடுவில் இருஅறைகள் இருக்கும். அந்த திறந்த வெளியின் தொடக்கத்திலுருந்து மரணதண்டனைக் கைதியை நடத்திச் செல்வாரகள். அப்படி நடந்து செல்லும்போதே மரணதண்டனைக் கைதிக்கு பாதி உயிர் போய்விடும். அப்படிப் பட்டதொரு வெறுமையையும் இறுக்ககத்தையும் மரணதண்டனைக் கைதிக்கு அச்சூழல் கொடுக்கும்.அதில் ஒரு அறைக்குள் மரண தண்டனைக்கைதியை முன்கூட்டியே அழைத்துவந்து அமர்த்தி இருப்பார்கள். அவரின் கைகள், கால்கள், தலை மற்றும் இடுப்புப் பகுதி தளர்வாக ஒரு பொறியுடன் பிணைக்கப்பட்டிருக்கும்.அந்தாட்டின் குடிமகனான லிசான்வி தன் உடன் பிறந்த அண்ணன் மகனான ஐந்து வயது சணூண்டாவை தன் தோளில் அமர்த்திமேடையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றை காண்பித்துக் கொண்டே,“சணூ, நல்லா தெரியுதா?” என்று கேட்க“தெரீது, உக்கா(சித்தப்பா)”“என்ன தெரீது?”“ஒராளு ஒராளை காதப் புடிச்சு இழுத்துட்டு போறா” பதில் சொன்னான் சணூன்டா.“தெரீதா தப்பு செஞ்சா தண்டன”“ஊம்…ம்..ம்”சணூண்டா சித்தப்பாவின் தலைமயிரைப் பிடித்படி மேடை நிகழ்ச்சியைப் பார்த்து கெக்கே பிக்கே என்று சிரித்துக் கொண்டிருக்கிறான். அண்ணன் மகன் மீது அவ்வளவு பாசம் கொண்ட லிசான்வி இன்று மரண தண்டனை அறையில் இருக்கிறான்.மரண தண்டனைக்கு மூன்று நாட்களுக்கு முன் கைதியை அந்நாட்டு வழக்கப்படி வெளியே அவன் விருப்பம்போல் சுற்ற விடுவார்கள். தப்பிக்க முடியாதபடி கண்காணிக்கப் படுவார்கள். தப்பிக்க முயன்றால் நரக வேதனைக்குட் படுத்தப்பட்டு பின் சில மாதங்களில் மரணதண்டனை நிறைவேற்றபடும். மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாதபடி விருப்பம்போல் சுற்றலாம். உணவு போன்றவை குறித்த நேரத்தில் கிடைத்து விடும். இரவில் குறிப்பிட்ட இடத்திற்கு வந்துவிட வேண்டும்.அந்த மூன்று நாட்களிலும் அந்திசாயும் நேரம் சணூன்டாவின் இல்லம் வரை சென்றவன் ஏனோ திரும்பிவிட்டான். தன் தோளில் சுமந்து வளர்த்த சணூன்டாவின் பதினைந்து வயது மகனை கொன்றவனால் எந்த முகத்தை வைத்து சணூன்டாவை பார்க்க முடியும்? உயிர்போகும்வரை சணூன்டாவின் மகன் தகீசெ பிக்கா (தாத்தா)…பிக்கா என்று இறுதி மூச்சு நிற்கும்வரை கதறியது இப்போது நினைத்தாலும் அவனுக்கு அடிவயிறெல்லாம் கலங்க கண்ணீர் தாரை தாரையாக வழிய பித்துப் பிடித்தவன் போலாகிவிடுவதால் திரும்பி விடுவான்.மரண தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது. மைதானத்துக் கொண்டு வரப்பட்ட லிசான்வி பொறியுடன் பிணைக்கப்பட்டான். அதையொட்டிய இன்னொரு அறைக்கு மரண தண்டனையை நிறைவேற்றவதற்காக சணூன்டாவை அழைத்து வந்திருந்தார்கள்.ஆனால் ஒருவரை ஒருவர் பார்க்க இயலாது. சணூன்டாவுக்கு அதிகாரிகள் தண்டனையை எப்படி நிறைவேற்றுவது என்பதை விளக்கிக் கொண்டிருந்தனர்.“சணூன்டா, உன் கையில் இருக்கும் பொறியில் இருக்கும் பச்சை பட்டனை அழுத்தினால் அடுத்த அறையில் தளர்வாக பிணைக்கப்பட்டிருக்கும் உன் சித்தப்பாவின் பிடி அசைய முடியாதபடி இறுகும்” என்றார் ஒரு அதிகாரி.“சரி”“பின் சிறிது நேரத்தில் மஞ்சள்நிற விளக்கு எரிந்து மாறிக்கொண்டே வந்து கடைசியில் சிவப்பாய் மாறி நின்றுவிடும்”“ஏன் அப்படி நிறம் மாறி நிற்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாமா?”“அது வேறொன்றுமில்லை. பிணைப்பு சிறிது சிறிதாக இறுகி அசையமுடியா நிலைவந்தவுடன் சிவப்பு நிறமாக மாறும்” விளக்கிய அதிகாரி தொடர்ந்தா்.“சிவப்ப நிறமாகி மறைந்ததும் நீங்கள் தண்டனையை நிறைவேற்றலாம். அதிலுள்ள சிவப்பு பட்டனை அழுத்தினால் அடுத்த அறையில் இருக்கும் உன் சித்தப்பாவின் நெற்றிக்கு நேராக இருக்கும் விசை உன் சித்தப்பாவின் உயிரைக் குடித்துவிடும்.” என்று சொன்னார்.“அவ்வவுதானா?”“இல்லை. சிவப்பு பட்டனை அழுத்துமுன் ஏதாவது மணியடித்தால் உன்னால் தண்டனைய நிறைவேற்ற முடியாது. உன் சித்தப்பா அறையில் ஏதோ விபரீதம் என்று அர்த்தம். உன்னிடமுள்ள கருவி செயலிழக்கும். விளக்கம் முடிந்தது. தண்டனையை நிறைவேற்றுங்கள்.” அதிகாரி அனுமதி வழங்கினார்.அதிகாரி சொல்லிக் கொடுத்தபடி சணூன்டா செயல்பட்டான். நெஞ்சு வலித்தது. தோளில் ஏற்றிவைத்து வளர்த்து வெளியலகை காட்டிபாசத்தோடு வளர்த்த சித்தப்பா ஒருபுறம். துடிக்கத்துடிக்க சித்தப்பாவால் கொல்லப்பட்ட ஆசையாக வளர்த்த ஒரே மகனின் முகம் ஒருபுறமென அவன் திண்டாடினான். சித்தப்பா இரக்கமில்லாமல் மகனைக் கொன்றுவிட்டார். இவரை நான் எப்படிக் கொள்வேன்.தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆட அவனது கைகள் நடுங்கின. அதேசமயம் என்றோ ஒருநாள் லிவன்சி பார்த்த வெளிநாட்டுப்படமான தமிழ் திரைப்படத்தின் ஒரு பாடல் அவனுக்குள் ஒருபாதிப்பை ஏற்படுத்த மொழிபெயர்ப்பாக வந்த ஆங்கில வரிகள் பொருளுரைத்தன. அவன் அப்பாடலின் முதல் வரியை மனப்பாடம் செய்ததோடு அவ்வப்போது பாடவும் செய்தான். அவ்வரி தற்போது நினைவில் வந்து மோதின.நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா?அப்போது எதிர்பாரா வண்ணம் பொறியில் மணியடிக்க சிவப்பு பட்டன் இயங்க மறுத்தது. அதிகாரிகள் வந்தனர். இனிமேல் அன்று மரணதண்டனையை நிறைவேற்ற முடியாததால் சணூன்டாவையும் அழைத்துக் கொண்டு அடுத்த அறைக்கு சென்றனர். அங்கு வெளிறிய முகத்துடன் கண்களை மூடி சுயநினைவை இழந்த நிலையில் வாய்மட்டும் சணூ…ரூக்கா(மகனே) சணூ என்றபடி இடைவிடாது சொல்லிக் கொண்டிருந்தான் லிவான்சி.மருத்துவர்கள் அழைத்துவரப்பட்டு சோதனை செய்தபின் மனநிலை பிறண்டிருக்கலாம் என்ற அனுமானத்தில் மருத்துவமனையில் சேர்த்தனர். நாட்கள் பல பறந்தோடின. மனநல மருத்துவமனையில் அச்சு(அருமை)…ரூக்கா சணூ என்ற விட்டத்தை பார்த்தபடியே பிதற்றிக் கொண்டிருந்தான் லிவான்சி. பைத்தியம் பிடித்தவருக்கு அந்நாட்டு சட்டப்படி மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது. சணூவின் மகன் கௌரவமிக்க மிகவும் பெரிய அரசுப்பணிக்கு நடந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு வரிசையில் முதலாம் இடத்தில் இருந்தான்.அதே தேர்வை எழுதிய மிகவும் அறிவாளியான தன் மகன் இரண்டாம் இடத்தில் வந்திருப்பதை லிவான்சியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த பொறாமைதான் சணூண்டாவின் மகன் என்றும் பாராமல் தகீசெவை பிக்கா…பிக்கா என்று கதறிய போதும் துடிக்கத் துடிக்க கொன்றான். தகீசெ இறந்து போனால் அடுத்த இடத்தில் இருக்கும் தன்மகனுக்கு அந்த பதவி உறுதியாக கிடைக்கும் என்ற பேராசைதான். பேராசை பெரு நட்டமாகி இன்று அவனைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக்கூட அறியமுடியாத நிலையில் இருக்கிறான்.சணூன்டாவின் மகனான பேரன் தகீசெக்கொன்றபோது லிவான்சிக்கு ஆடாத தசை லிவான்சிக்கு மரணதண்டனை கொடுக்க இருந்தபோது சணூன்டாவுக்கு ஏன் ஆடியது? உறவுகளுக்குள்ளும் உணர்ச்சிகளின் அளவில் வேறுபாடு இருக்குமா?-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *