செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் மக்களைக் கண்காணிக்கும் மியான்மர் ராணுவம்

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு பிப்., மாதம் அந்நாட்டின் ஆக் சன் சூ காய் தலைமையிலான ஜனநாயக ஆட்சி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அவர் வீட்டில் சிறைப்படுத்தப்பட்டார். அங்கு ஜூண்டா ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனை எதிர்த்து போராடிய 2,100 ஜனநாயக ஆதரவாளர்கள் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பு எழுந்தது. உலகம் முழுக்க உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் மியான்மர் ராணுவத்தின் வன்முறை வெறியாட்டத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். மியான்மர் ராணுவ முக்கிய புள்ளிகள் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த 18 மாதங்களாக அதீத இன்னலுக்குள்ளான ஜனநாயக ஆதரவாளர்கள் தற்போது சற்று ஆறுதல் அடைந்த நிலையில் விஞ்ஞான தொழில்நுட்பம் வாயிலாக அவர்களை கண்காணிக்க மியான்மர் ராணுவம் புதிய சீன தொழில் ஒப்பந்தத்தை இட்டுள்ளது.

பிரபல சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவவே உள்ளிட்ட சில சீன நிறுவனங்கள் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதன்படி மியான்மர் நாட்டின் தலைநகர் நேப்பிடா உட்பட பல முக்கிய நகரங்களில் செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட சிசிடிவி கேமராக்கள் தெருவுக்குத் தெரு பொருத்தப்பட்டு வருகிறது.

இந்த கண்காணிப்பு கேமரா ஜனநாயக ஆதரவாளர்களின் முகங்களை ஸ்கேன் செய்து அவர்களது நடமாட்டத்தைக் கண்காணிக்கும். தகவல்கள் ராணுவத்துக்கு உடனுக்குடன் செல்லும். மேலும் அவர்களது வாகன எண்கள் எண் பலகையில் இருந்து இந்த கேமராக்களால் ஸ்கேன் செய்யப்படும்.

இவ்வாறு அவர்களை மறைமுகமாக கண்காணிப்பதால் அவர்கள் போராட்டங்களிலோ அரசுக்கெதிரான செயல்களிலே ஈடுபடமாட்டர் என மியான்மர் ராணுவம் நம்புகிறது. சீன தொழில்நுட்பத்தை மியான்மர் ராணுவம் அடக்குமுறைக்குப் பயன்படுத்துவதை அடுத்து மியான்மர் ஜனநாயக ஆதரவாளர்கள் பலர் வேதனையைப் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button