கதைகள்

இடைவெளி ஐம்பது ஆண்டுகள்!… ( சிறுகதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

ஐம்பது ஆண்டுகளுக்குள் மனிதவாழ்வில் என்னென்னவோ நடந்துவிடுகிறது. தினமும் இல்லாவிட்டாலும் விடுமுறை நாட்களில் காலை எழுந்தவுடன் குளித்துவிட்டு நெற்றியில் திருநீறணிந்து காதுமடல்களில் பூக்களைச் சொருகி, நாதவிந்து காலா நமோ நம, தீப மங்கள ஜோதி நமோ நம என்று வாய் பாடலை முனுமுனுக்க பெங்களூரிலுள்ள சிவாஜி நகர் ஒடுக்கத்தூர் முருகன் ஆலய பிரகாரத்தை சுற்றிவந்த நாட்கள் நினைவலைகளில் வந்து மோதிச் சென்றன.அன்றும் ஒருநாள் ஞாயிற்றுக் கிழமை காலை ஒடுக்கத்தூர் முருகன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தேன். நண்பன் ஜானகிராமனும் இணைந்திருந்தான். எனது வீடு அலசூர் காளியம்மன் கோவில் தெருவிலும் அவன் வீடு பழனிமுதலியார் தெரிவிலும் இருந்தது. நாங்கள் எதேச்சையாக பேஹம் மஹால் அருகே சந்தித்தோம். பனிமூட்டத்தில் பத்தடி தூரத்தில் மனிதன் வந்தாலும் மாடுவந்தாலும் தெரியாது. அப்படியிருந்த பெங்களூரின் தட்பவெப்ப நிலை இப்போது எங்கோ சென்று ஒளிந்து கொண்டன.இருவரும் அலசூர் ஜட்கா ஸ்டாண்டை கடந்து சென்றோம். அங்கிருந்த தண்ணீர்க்குழாயில் தண்ணீர் விழுந்து தரையில் ஓடிக்கொண்டிருக்க அந்த குழாயை நிறுத்தவேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் தோன்றவில்லை. அதனருகில் யாராவது சென்றால் ஒருவேளை நிறுத்தலாம். நாங்கள் தெருவின் எதிர்திசையில் இருந்தோம். தெருவைக் கடந்து நல்லசெயலைச் செய்யவேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. அந்த காலத்தில் காவிரி நீருக்கு குடுமிப்பிடி சண்டை எல்லாம் இருந்ததில்லை.அது ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் தமிழன் என்ற எண்ணம் இரத்த அணுக்களில் ஓடிக்கொண்டிருந்தது. பள்ளியில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்த பண்டைய தமிழகத்தில் தேனும் பாலும் ஓடிக்கொண்டிருந்தது என்பதும் நினைவில் இருத்து அழியவில்லை. ஆதலால் இப்போது தண்ணீர் மட்டும்தானே ஓடுகிறது ஓடட்டும் என்றே எண்ணவைத்தது. தெருவைக் கடந்து சென்று தண்ணீரை நிறுத்தவேண்டும் என்ற எண்ணம், புறாவுக்காக தன் சதையையே அறிந்தகொடுத்த மரபில் வந்தவர்களுக்கு ஓடவில்லை. கோவில் அருகே வரவும் பனிமூட்டம் கலைந்திருந்தது. சற்று தூரத்தில் ஒருவர் தன்னந்தனியே பேசியபடி எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்.அப்போது,“மணி, அங்க பார் ஒருத்தர் தனக்குத்தானே பேசிக் கொண்டு வருகிறார்” என்று எதிரில் வந்து கொண்டிருப்பவரை காண்பித்தான்.“ஐயோ, பாவம் யார் பெற்ற பிள்ளையோ!” என்றேன்.“ஆமாம், அவருக்கு என்ன பிரச்சனையோ?” என்றான் ஜானகி.அவர் எங்ளை கடந்து செல்லும்போது முருகா முருகா என்ற வாரத்தைகள் கோபத்துடன் வெளிப்பட்டன. நிச்சயமாக கடவுள் இருக்காது. சற்று தொலைவில் இருக்கும் கோவிலுக்குள் சென்று சொல்லாமல் இப்படி தெருவில் கோபத்துடன் சொல்லவேண்டிய அவசியம்இருந்திருக்காது என்று பேசியபடியே அப்பன் முருகனை வழிபட ஆலயத்துக்குள் சென்றோம்.ஐம்பது ஆண்டுகாலம் பின்னோக்கி பயணம் செய்திருந்த நான் தற்காலத்துக்கு வந்தேன். இடம் மாறியிருந்தது. கத்திபோய் மாம்பழம் வந்தது டும்டும் என்ற கதையைப்போல ஆஸ்திரேலியாவின் மெல்பன் எப்பிங்கில் நண்பரின் மகன் வீட்டு புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். சிரித்தால் சிவகுமார் போல் இருக்கிறாய் என்று மாமன் பெண்களும் மற்ற பெண்களும் சொன்ன காலம்போய் சிரிக்க முடியாமல் நான்கு முன்வரிசை மேற்பற்கள் விழுந்து சதிசெய்து விட்டன.கண்கள் மட்டும் இன்னும் பழுதடையவில்லை. பார்க்கக் கூடாதவற்றை எல்லாம் பார்த்தன. அப்படிப் பார்த்ததில் சிக்கிய ஒன்றை ரகசியமாக நண்பனிடம் பகிர்ந்தேன்.“அங்க பார், அந்த மனிதரை, தன்னாலேயே பேசிக்கொண்டிருக்கிறார்” என்றேன் ராகவனிடம்.“மணி, நீ எந்த காலத்தில் இருக்கிறாய்? கைபேசியில் யாருடனாவது பேசிக் கொண்டிருப்பார்.”“அதுதான் இல்லை. அவர் காதுகளைப்பார். அப்படியொன்றும் தெரியவில்லையே?” என்றேன். “ கொஞ்சம் அமைதியாய் இரு. அவர் நம்மை நோக்கித்தான் வந்து கொண்டிருக்கிறார்.”அவர் எங்களருகே வந்து நின்று கொண்டார். நாங்கள் காதுகளை நன்றாகத் தீட்டிக்கொண்டோம். அவர் சொல்வது எங்கள் காதுகளில் நன்றாகவே விழுந்தன. ஒரு கடவுளின் பெயரைத்தான் விடாமல் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.ஐம்பது ஆண்டுகளில் எவ்வளவு மாற்றம். அன்று பெங்களூரில் ஒடுக்கத்தூர் முருகன் கோவில் அருகே ஒருவர் கோபமாக தனக்குத்தானே முருகா முருகா என்று சொல்லிக் கொண்டு போனார். இன்று சாந்தமாக மெல்பனில் அந்த முருகனின் சொந்தக்காரர் பெயரை இங்கொருவர் விடாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.வெள்ளைக்காரனின் பாடலான“ஒர்க் ஒய்ல் யு ஒர்க், பிளே ஒய்ல் யு பிளே” என்ற பாடலெல்லாம் இவர் படித்திருக்க மாட்டாரோ? பக்தி இருக்க வேண்டியதுதான் அதற்காக இப்படியா? நம்மை விரும்பி அழைத்த நண்பரின் வீட்டு நிகழ்வில் கலந்து கொள்வதைவிட்டு இப்படி கடவுளோடு ஐக்கியமாகி விட்டாரே என்று நண்பருடன் புலம்பினேன். அதற்கு அவர்சொர்க்கம் ஒன்றும் சும்மா கிடைத்திடாது. அதற்கும் கடினமாக உழைக்க வேண்டும் என்றார்.-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *