மலைப்பூட்டும் தண்ணீர்ப் பிரச்சினையால் இந்த கிராம ஆண்களுக்கு மணப்பெண் கிடைப்பதில்லை

மராட்டியத்தில் உள்ள அந்த குன்றுப்பகுதி கிராமத்துக்கு புதிதாக திருமணமாகி வந்தார் அப்பெண். 2-வது நாளில் இன்னொரு பெண்ணுடன் குன்றிலிருந்து கீழே இறங்கி குடிநீர் எடுத்துவரச் சென்றார். தினமும் குடிநீர் சேகரிப்பது எவ்வளவு சிரமமான வேலையாக இருக்கப் போகிறது என்று சிந்தித்தவர், குடத்தை அப்படியே போட்டுவிட்டு அம்மா வீட்டுக்குப் போனவர்தான். திரும்பி வரவேயில்லை.

இது ஒரு மணப்பெண்ணின் கதையில்லை. இந்தக் கிராமத்துக்கு எந்தப் பெண்ணும் வாக்கப்பட்டு வர விரும்புவதில்லை. அப்படியே வந்தாலும் அதிக காலம் கணவருடன் வாழ்வதில்லை. காரணம், தாண்டிச்சி பாரி என்ற இந்தக் கிராமத்தில் தாண்டவமாடும் கொடுமையான தண்ணீர்ப் பிரச்சினைதான் காரணம்.

நாசிக் நகரில் இருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள, சுமார் 300 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை கொடிகட்டிப் பறக்கிறது. அதிலும் மார்ச் முதல் ஜூன் வரையிலான கோடை காலத்தில் அது உச்சம் பெறும்.

குன்றின் கிடுகிடு சரிவுப் பாதையில் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் கீழே இறங்க வேண்டும். குன்றின் அடிவாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் கண்ணீர் போல தண்ணீர் கசியும் ஒரு பாறை ஊற்றின் முன் மணிக்கணக்கில் தவமிருக்க வேண்டும். சிறிய பாத்திரத்தில் சிறிது சிறிதாய் தண்ணீரை முகர்ந்து குடத்தில் ஊற்றி நிரப்ப வேண்டும். பின்னர் குடத்தை தலையில் வைத்து (சில சமயங்களில் ஒன்றின் மீது ஒன்றாக இரண்டு குடம்) குன்றுப் பாதையில் கவனமாக அடிவைத்து ஏற வேண்டும்.

இங்கு ஒவ்வொரு குடும்பப் பெண்ணின் பிரதான வேலையே தண்ணீர் எடுத்துவருவதுதான். தினமும் 2 முறை இந்த ‘தண்ணீர்ப் பயணம்’ நடக்கும். அதிலும் முதல் பயணம் அதிகாலை 4 மணிக்கே தொடங்கிவிடும்.

சில சமயங்களில் ஒரு குடம் நிரம்புவதற்கே 3 மணி நேரம் வரை ஆகிவிடும் என்பதால், வீடு திரும்பும்போது இருட்டிவிடும். அப்போது, வனவிலங்குகள் குறித்த பயத்துடனே குடத்தைச் சுமந்துவர வேண்டும்.

இப்படி கடுமையான தண்ணீர்ப் பிரச்சினை காரணமாகவே இந்தக் கிராம ஆண்களுக்கு பிற கிராமத்தினர் பெண் கொடுக்க முன்வருவதில்லை.

உற்சாகமாக திருமண பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பவர்கள்கூட, மாப்பிள்ளை தாண்டிச்சி பாரி கிராமத்தைச் சேர்ந்தவர் என்று அறிந்ததும் அப்படியே ‘ஜகா’ வாங்கிவிடுவார்கள். தெரிந்தும் தெரியாமலும் இந்த கிராமத்துக்கு மணமாகிவரும் பெண்களும் இந்த அன்றாட அவஸ்தையால் அதிக காலம் புகுந்த வீட்டில் நீடிப்பதில்லை. திருமணமாகி சில நாட்களிலேயே கணவரைப் பிரிந்து சென்ற பெண்களின் கதை ஏராளம்.

இந்தக் கிராமத்தை பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் பார்வையிட்டுச் சென்றும், இங்கு நிலவும் தண்ணீர்ப் பிரச்சினையின் தீவிரம் அறிந்தும் இதுவரை தீர்வுதான் காணவில்லை. ஆக, ‘எப்போது நம் மனைவி சொல்லாமல்கொள்ளாமல் ‘ஜூட்’ விடுவோளோ?’ என்ற அச்சத்துடனே இந்தக் கிராமத்து ஆண்கள் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button