விளிம்பு நிலையில் இருக்கும் தமிழரும் தமிழ்தேசியத்தின் அவசியமும்!….தொடர்…1…. சங்கர சுப்பிரமணியன்.

பல நூற்றாண்டுகளாக தமிழ் மொழி தன்னைத் தக்கவைத்துக் கொள்ளவே போராடியிருக்கிறது. சங்ககாலத்தை கடந்தபின் தமிழ்மொழிக்கும் தமிழருக்கும்
ஓர் இருண்டகாலம் காலம் எனலாம்.
![]()
உலகில் எல்லா இனத்துக்கும் இருண்டகாலம் ஒன்று இருந்திருக்கவே செய்கிறது.இந்த இருண்ட காலத்தை ஓரளவு கடந்தபோது சோழப் பேரரசு கடாரம் வரை பரந்து விரிந்த போதும் தமிழ்மக்களை அங்கெல்லாம் குடியமர்த்தவில்லை. ஆனால் களப்பிரர், மராட்டியர், விஜய நகர பேரரசு, மற்றும் நாயக்கர் காலத்தில் மராட்டியர், கன்னடர், தெலுங்கர் என பிற மொழிபேசும் மக்கள் தமிழ்நாட்டில் பெருமளவில் அழைத்துவரப் பட்டு குடியமர்த்தப் பட்டனர்.
இதை தவறென்று சொல்லமுடியாது. மேட்டுப் பகுதியில் இருந்து தாழ்வான பகுதிக்கு தண்ணீர் பாய்வதுபோல் வளமான பகுதியை நோக்கி மக்கள் குடியேறுவது இயற்கை. தமிழர் ஏற்கனவே வளமான நிலத்தில் வாழ்ந்து வந்ததாலும் மற்றவர்களை ஏமாற்றி அவர்களது வளங்களை அபகரிக்கும் பண்பு இல்லாததாலும் இன்று இந்தியா என்றாலும் சரி இலங்கை என்றாலும் சரி தமது நிலங்கள் மற்றும் உரிமைகளை இழந்து வேற்று மொழியினத்திரிடம் அடிமைப்பட்டு கிடக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
பல நாடுகளில் படையெடுத்து பார் புகழ வாழ்ந்த தமிழர், புலம் பெயராத தமிழர் அந்நியர் படையெடுப்பால் வேற்றுமொழியாரிடம் தாம் பயிர் செய்யும் நிலபுலன்கள் யாவற்றையும் இழந்து சொந்த மண்ணில் தினக்கூலிகளாகவும் விவசாயக் கூலிகளாகவும் மாற்றப்பட்டனர்.
இதில் சிலர் வந்தவர்களை அண்டிப் பிழத்தாலும் பெரும்பாலானோர் ஏழைகளாகவும் அல்லது ஓரளவு வசதிகளுடன் மட்டுமே வாழ்ந்தனர். வந்தவர்களோ வசதிவாய்ப்புகளுடன் வளமான வாழ்க்கையை வாழ்ந்தனர். இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர்.
வந்தாரை வாழவைத்த தமிழர் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இலங்கை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிய கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதேபோல பீஜித்திவிலுள்ள கரும்புத்தோட்டங்களில் பணிபுரிய பெரும்பாலான வட இந்தியருடன் தமிழர் மற்றும் தெலுங்கரும் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் உலகப் பொருளாதார மயமாக்கலினாலும் ஈழப் போரினாலும் தமிழர்
புலம்பெயர்ந்தனர். இந்த மாறுபட்ட சூழலால் அவர்களை அறியாமலேயே அவர்கள் தொடர்ந்து அவர்களது சொந்த மண்ணிலேயே கொஞ்சம் கொஞ்சமாக நிலங்களும் உரிமைகளும் பறிபோக சிறுபான்மையாக தள்ளப்பட்டு வருகின்றனர்.
இந்த மாதிரி சூழலில் தமிழரிடம் ஒற்றுமை இருந்தால்தான் நமக்குத் தெரியாமலேயே நம்முடன் இருந்து நம்மை சிறுபான்மையாக்கும் இனத்தவரிடமிருந்தும் மற்றும் வேற்று
மொழியினரிடத்திடம் இருந்தும்
பாதுகாக்க முடியும். மேலும் நாம் அழிந்து
விளிம்பு நிலைக்கு சென்றுவிடாமல் நம் இனத்தை ஓரளவுக்காவது பாதுகாக்க முடியும்.
அது சாத்தியப்படுமா? என்றால் ஒட்டுமொத்த தமிழர் கையில்தான் இருக்கிறது. நாம் தமிழர் என்ற பரந்த மனப்பான்மை வேண்டும். அதற்கு நான் வேறு நாடு நீ வேறு நாடு, நான் ஒருமதம் நீ ஒரு மதம், நான் அந்த சாதி நீ இந்த சாதி என்று நம்மை பிளவு படுத்தி அதன் மூலம் நம் எதிரி நம்மை எளிதாக அழித்தொழிக்கும் வழியை அடைக்க வேண்டும். நமக்கும் ஒற்றுமைக்கும் காத தூரம்.
ஒரு சிலரே அத்திபூத்தாற்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறார்கள். மற்றபடி நம்மை பிரித்து வைப்பதிலேயே பெரும்பாலானோர் பெரும்பங்கு ஆற்றுகின்றனர். இதற்கு என்னால் நிறைய சான்றுகளை அடுக்கிக் கொண்டே செல்லமுடியும்.
தமிழரின் ஒற்றுமையை சாதி, மதம், பொருளாதாரம் மற்றும் நாடெல்லாம் எப்படிப் பிரிக்கிறதென்று பார்பப்போம். சொந்த நாட்டில் இருப்பவர்களும் வசதி வாய்ப்பற்று ஏழ்மை நிலையில் அதிகம் படிக்காதவர்கள் திருமணத்துக்கு பெண்ணையோ பையனையோ தேடும்போது அவர்களது அணுகுமுறை வேறாக இருக்கலாம்.
ஆனால் படித்து வெளிநாட்டில் வசதியாக இருந்துகொண்டு பரந்த மனப்பான்மையுள்ளவர்களாக தம்மைத் தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் நடவடிக்கைகள் எப்படியுள்ளது?
கோயாம்புத்தூரில் பிறந்து வளர்ந்த இந்த மதத்தில் இந்த சாதியைச் சார்ந்த
முதுகலைப் படித்த பெண் அதே இனத்தை சேர்ந்த மருத்துவராக மெல்பனில் பணியாற்றும் குடியுரிமை பெற்ற மணமகனுக்கு தேவை என்று நாளிதழில் விளம்பரம் செய்கிறோம். அப்படியில்லை என்று மனசாட்சிக்கு விரோதமன்றி எத்தனை பேரால் சொல்ல இயலும்?
நாம் வெவ்வேறு நாட்டில் வாழ்ந்தாலும் இனத்தால் நாம் தமிழர். நம்மை எவராலும் பிரிக்க இயலாது என்றுசொல்வோம். அதே சமயம் உலகளாவிய சிறுகதைப் போட்டி என்போம். ஆனால் இந்த நாட்டைப்
பிறப்பிடமாகக் கொண்ட எவரும் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று விளம்பரப் படுத்துவோம்.
அதிலிருந்தே நமது ஒற்றுமையை உலகறிய வைத்து சந்தி சிரிக்க வைப்போம். இதற்கு பதிலாக உலகில் வாழும் தமிழர் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று விளம்பரப் படுத்திவிட்டு அவர்கள்
விரும்பியவாறு போட்டி முடிவை அறிவிக்கலாம். இதனால் தமிழர் நாமெல்லாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்ற ஒரு அற்ப மகிழ்ச்சியாவது கிடைக்கும்.
நான் சில வேளைகளில் உலகின் மூத்தகுடி பண்பாட்டு சிறப்பினை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெற்ற குடி எப்படி எல்லாம் அபூர்வமாக சிந்திக்கிறது என்று வியந்து போவதுண்டு? ஆனால் ஆங்கிலம் போன்ற மொழிகளில் வரும் சிறுகதை மற்றும் கவிதைப் போட்டிகளுக்கெல்லாம் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட எவரும் கலந்து கொள்ளலாம் என்றோ
இங்கிலாந்தைப் பிறப்பிப்பிடமாகப் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என்றோ விளம்பரப் படுத்துவதில்லையே? அப்படியெல்லாம் செய்வதால்தான் ஆங்கிலம் பயின்ற எல்லோராலும் கலந்து கொள்ள முடிகிறது.
அப்புறம்தான் புரிந்து கொள்வேன். அவர்களுக்கு கணியன் பூங்குன்றனார் போன்று யாரும் தோன்றி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பரந்த மனப்பான்மை பற்றியெல்லாம் கற்றுக் கொடுக்கவில்லை என்று. இருந்தாலும் ஆங்கிலம் தெரிந்த எந்நாட்டவரும் அப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். உலகிற்கே பண்பை கற்றுக் கொடுத்த மூத்தகுடிக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும்?

ஒரு பக்கம் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் நாம் எல்லோரும் ஓர் இனம் என்று ஒரு கட்சியைத் தொடங்கி அதற்கு தலைவர் பிரபாகரன் அவர்களையே வழிகாட்டியாக ஏற்று தமிழினம் காக்க போராடுகிறார். சிலர் கேட்கலாம் அவர் இருப்பதோ இந்தியாவின் கூட்டாட்சியின்
கீழுள்ள தமிழ்நாடு, அப்படியிருக்க அவரால் எப்படி இன்னொரு நாட்டிலுள்ள தமிழர் பிரச்சினையைத் தீர்க்க இயலும் என்று கேட்கலாம். சரியான கேள்விதான்.
ஆம் எப்படி அவரால் இன்னொரு நாட்டுத் தமிழரின் பிரச்சினைக்கு உதவ இயலும்? ஒரு வேளை அவர் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ் நாட்டின் முதல்வராக ஆனால் உதவ இயலுமா? அது எப்படி முடியும் அவரிடம் என்ன படையா இருக்கிறது? அப்படியே இருந்தாலும் இந்திய அரசு
அனுமதிக்குமா? இதை எல்லாம் தெரியாமலா மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி தமிழருக்கு துரோகம் இழைத்து விட்டார்? என்று ஒட்டு மொத்த தமிழினமும் கூறிவருகின்றோம்?
ஒரு வேளை அவர் தமிழராக இருந்தால் உதவியிருப்பாரோ? தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பதுபோல் தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழினத்தை காத்திருப்பாரோ? என்றெல்லாம் எண்ணுகிறோம் அல்லவா? அத்தகைய சாத்தியக்கூறு இல்லையெனில் அப்படிப் பட்ட எண்ணம் எல்லோரது மனத்திலும்
எப்படி உண்டாகும்?
(தொடரும்)
-சங்கர சுப்பிரமணியன்.
![]()