கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!…. 30…. (உண்மைக்கதை) …. ஏலையா க.முருகதாசன்.

நாளன்டைக்கு யோகமலரின் கழுத்தில் தாலிகட்டப் போகிறன் என்ற யோசனை வந்து எனது மனதில் அலைமோதியது.மனைவியொருத்தி இருக்கத்தக்கதாக இன்னொருத்தியை மனைவியாக்குவது…….அதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை.

இனி நடக்கிறது நடக்கட்டும் யோகமலரை பரிதவிக்க விடக்கூடாது.எனது விதிப்படி எனக்கு இரண்டு மனைவிகள்தான் போல என ஒரு இறுக்கமான முடிவுக்கு வந்தன்.

ஆரம்பத்தில் சொன்னது போல மலாயாவுக்கு வேலைக்குப் போனவர்கள் அங்கு மலேயாவில் உள்ள தமிழ்ப் பெண்களையோ இல்லாட்டி மதம்மாறி மலேய் பெண்களையோ கல்யாணம் கட்டின கதைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறன்.

எனது மூன்று நாளு பரம்பரைக்கு முந்தியவர்கள் அப்படிச் செய்திருக்கிறார்கள்.அதிகம் ஏன் போவான் கிராமப்புறங்களிலிருந்து கொழும்புக்கு வேலைக்குப் போனவர்களிலும் சிலர் அப்படி நடந்திருக்கிறார்கள்.

சில விடயங்கள் இரண்டு பரம்பரை கடந்து திரும்பவும் நடக்கும் என்பதைச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன்.அப்படித்தான் எனது வாழ்க்கையிலும் நடக்கின்றதோ….ஏதோ நடக்கிறது நடக்கட்டும் மூளை அப்படி ஒரு முடிவை எடுக்க மனம் கையைப் பிடித்து இழுப்பது போல இருந்தது.

மீண்டும் வேலை ஆரம்பித்தது.நேற்றுப் போல எந்த மிசினும் தொல்லை கொடுக்கவில்லை.கையும் மூளையும் மிசின்களோடு உறவாடிக் கொண்டிருந்தாலும் யோகமலருக்கு தாலிகட்டப் போற வெள்ளிக்கிழமையை நாட்கணக்காகவும், மணித்தியாலக் கணக்காகவும,; நிமிடக் கணக்காகவும், விநாடிக் கணக்காகவும் மனம் கணக்கிட்டு வேலை முடியப் போகும் நேரத்தை

அறிவதற்காக சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த கடிகாரத்தை அடிக்கொருதரம் பார்த்துக் கொண்டேயிருந்தது.

வேலை முடிந்து வழமை போல யோகமலர் என் கைகளைச் சுற்றி அணைக்க நானும் அவளை அணைத்துக் கொண்டே பஸ்ஸடிக்குப் போய்க் கொண்டிருக்கையில் அவள் அடிக்கடி என்னைப் பார்ப்பதும் படபடப்பைக் குறைப்பதற்காக சொண்டுகளைக் கடிப்பதுமாக இருந்தாள்.

அவளின் இருதயத் துடிப்பு என் உடலுக்கு கேட்டது.கைவிரல்களில் உள்ள இரத்த நாளங்களின் துடிப்பை எனது இடுப்புக்கு மேலே உள்ள பகுதித் தோல் உணர்ந்தது.

ஏன் ரென்சனாகிறியல்; எல்லாம் நல்லது நடக்கும்.மனசைப் போட்டுக் குழப்பாமல் வீட்டுக்குப் போய் நல்லாய் நித்திரை கொள்ளுங்கள்.

இன்னும் ஒரு நாள்தான், அன்றைக்கு சொன்ன மாதிரி நாளைக்கு வரேக்கிலை பேர்சனல் மனேஜருக்கு கொடுக்க ஏதாவது சிறிய பரிசு இல்லாட்டி தாங்யூ கார்ட் வாங்கிக் கொண்டு வாங்கோ யோசிக்காமல் போங்கள் என்று சொல்லி அவளின் பஸ்ஸில் ஏற்றிவிட, „ம் ..வாங்கிக் கொண்டு வாறன் நீங்க மனசைப் போட்டுக் குழப்பாமல் தூங்குங்க, நீங்க தூங்கினீங்களா இல்லையான்னு நாளைக்கு உங்க கண்ணில தெரியுமுங்க என்று சொல்லிக் கொண்டே பஸ்ஸில் ஏறினாள்.

அவளை அனுப்பிவிட்டு நான் எனது பஸ்ஸில் ஏறி சூரியகுமாருக்குப் பக்கத்தில் அமைதியாக உட்கார்ந்து இருந்தன்.நான் அமைதியாக இருந்ததைப் பார்த்த சூரியகுமார்,’ என்ன பொஸ் ஒருமாதிரியாய் இருக்கிறியள், பக்றியில் ஏதேன் பிரச்சினையா „ என்று கேட்டன்.

நான், „ ஒன்றமில்லை „என்று சொன்னதும்,’பொஸ் நீங்கள் இல்லாத நேரங்களில் பொடியங்கள் தேவையில்லாத கதையெல்லாம் கதைக்கிறாங்கள்…..’ என்று சூரியகுமார் ஏதோ

சொல்ல ஆரம்பிக்கும் முன்னரே அதைக் கேட்க விரும்பாதவனாக’ என்னைப் பற்றிக் கதைக்கத்தான் செய்வார்கள் மலேய்க்காரர்களும் சீனர்களுமே என்னைப் பற்றிக் கதைக்கும் போது எங்கடை ஆட்கள் என்னைப் பற்றிக் கதைக்கிறது புதினமில்லை’ என்று மனசக்குள்ளை நினைச்ச நான்’ அவை என்னென்றாலும் கதைக்கட்டும் அதையெல்லாம் யோசிச்சுக் கொண்டிருந்தாள் நிம்மதியாகவே இருக்க முடியாது’ என்று அவனுக்கு பதில் சொல்லிவிட்டு அமைதியாகவிருந்தன்.

அதற்குப் பிறகு சூரியகுமார் எதுவும் கதைக்கவில்லை.எங்களுடைய வீட்டடி தரிப்பு நிலையத்தில் பஸ் நிற்க இருவரும் இறங்கி வீட்டை நோக்கிப் போகும் போதும் வீட்டுக்குள் போன பின்பும் அவனும் கதைக்கவில்லை நானும் கதைக்கவில்லை.

எனது மனம் முழுக்க யோகமலரைச் சுற்றியும்,அவளுக்குத் தாலி கட்டப் போறதைப் பற்றியுமே இருந்தது.

இரவு நித்திரை கொண்டுவிட்டு அடுத்தநாள் வியாழக்கிழமை எழுந்த போது கொஞ்சம் மனம் படபடப்பாகவிருந்தது.அதே நேரம் யோகமலருடன் அவளின் உடல் ஸ்பரிசத்துடன் ஒரே கட்டிலில் நித்திரை கொள்ளப் போகிறேனே என நினைச்ச போது அதுவும் மனசைக் கிளர்ந்தெழச் செய்தது.

நாளைக்கு வெள்ளிக்கிழமை இந்த வீட்டைவிட்டு அதிகாலையே புறப்பட்டு போக வேணும்.யோகமலரையும் அவளுடைய அண்ணன்மார்,அண்ணிமாரைச் சந்திக்க வேணும்.அவர்கள் என்ன யோசனையுடன் வருகிறார்களோ தெரியாது.

அவர்கள் முன்னிலையில் எங்கையாவது கோவிலில் வைச்சு தாலிகட்டச் சொல்லிக் கேட்கும் திட்டத்துடன் வருகிறார்களோ தெரியாது.தலைக்குள் என்னவோ செய்தது.ஏதோ நடக்கிறது நடக்கட்டும் என்று இறுதி மனநிலையை எல்லாவற்றிற்கும் முடிவாக நினைச்சுக் கொண்டன்.

ஊரிலை இருந்த போது மனச்சாட்சிக்குப் பயந்து நடக்கும் நானா இப்படித் தலைகீழாக மாறியிருக்கிறேனே என்ற குற்ற உணர்வு ஏற்பட்ட போதம் எல்லாம் விதிதானோ என மனம் முடிவெடுத்தது.

எனது மனைவியின் பெற்றோர், சகோதர சகோதரிகள்.எனது சகோதர சகோதரிகள் அயலட்டையில் உள்ளவர்கள் என எல்லாரும் என்னை நல்ல பிள்ளை என நினைச்சுக் கொண்டவர்கள்.

ஆனால் சிங்னகப்பூரில் ஒரு பெண்ணிடம் சகவாசம் ஏற்பட்டு அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ளும் நிலைக்குள் என்னை தள்ளிவிட்டிருக்கின்றது.

சூழ்நிலைதான் முழுக்க முழுக்க இதற்குக் காரணம் என மூளை ஒரு நேரம் சொல்லும்.ஆனால் மனமோ பெண் சுகத்தை நாடிச் செல்கிறாய் என்று சொல்லும்.

தேத்தண்ணியை போட்டு கட்டிலில் உட்கார்ந்து குடிச்சுக் கொண்டிருக்க மனமோ ; அங்குமிங்குமாக பலதையும் யோசிச்சு அலைபாய்ஞ்சு கொண்டிருந்தது.

இரவு வேலையாலை வந்து நாளைக்கு காலமையோடு வெளிக்கிட்டுப் போவதற்கான ஆயத்தங்களைச் செய்ய முடியாது என்று நினைச்ச நான் சிறீலங்காவிலிருந்து கொண்டு வந்த சூட்கேசில் உடுப்புகளை அடுக்கி வைக்கத் தொடங்கினன்.

நாளைக்குப் போட்டுக் கொண்டு போகவென எனது மனைவி ஆசையாக தைச்சுத் தந்த பட்டர்கலர் சேர்ட்டையும்,கடும் பச்சைக் கலர் லோங்சையும் எடுத்து வைச்சன்.

இந்த பட்டர்கலர் சேர்ட் தூரத்தில் பார்த்தால் பிளேன் துணிச் சேர்ட் மாதிரித்தான் தெரியும்.ஆனால் கிட்டப் பார்த்தால் அதில் சின்னச் சின்னப் பூக்கள் தெரியும்.

என்னிடம் நான்கு சேர்ட்டுகளும் மூன்று லோங்சுகளுமே இருந்தன.அவற்றைத் தோய்ச்சு தோய்ச்சுத்தான் போட்டுக் கொண்டிருந்தன்.

அவற்றில் மஞ்சள் நிறச் சேர்ட் எழுபது ரூபாய்க்கு வீட்டு வளவை கூட்டிச் சேர்த்த குப்பையை விற்று வாங்கிய சேர்ட்.இன்னொரு சேர்ட ஆகாய நீலக்கலர் துணியில் கடும் நீலக் கொடிப்பூக்கள் போட்ட சேர்ட்.இன்னொரு சேர்ட் சிவப்புத் துணியில் குறுக்கும் நெடுக்குமாக கறுப்புக் கோடுகள் போட்ட சேர்ட்.எல்லாச் சேர்ட்டுகளும் அகலக் கொலர் கொண்டவைதான்.

லோங்ஸ்கள் எல்லாம் பெல்பொட்ட ஸ்ரைல் உள்ளவைதான்.நான் மட்டுமல்ல என்னோடு தங்கியிருந்த வீட்டு நண்பர்களில் மூன்று பேர் என்னைப் போல அகலக் கொலர்ச் சட்டையும், பெல்பொட்டம் லோங்சும் வைச்சிருந்தார்கள்.

எனது படுக்கையோடு ஒரு பழைய ரீப்போவை வைச்சிருந்தன்.அதிலைதான் திருநீறும் வள்ளி தெய்வானை முருகன் படமும் இருந்தன.

அம்மா வழிக் குலதெய்வம் தெல்லிப்பழை புகையிரத நிலையத்துக்கு அண்மையிலுள்ள முத்துமாரியம்மன்தான்.ஆனால் அம்மன் படம் இருக்கவில்லை.ஒவ்வொரு நாளும் காலமையும் இரவு படுக்கப் போவதற்கு முன்னும் எனது ஊர் முத்துமாரியம்மனை மனசுக்குள்ளை கொண்டு வந்து கும்பிடுவன்.ஊரிலை இருக்கிற மனுசி பிள்ளைகளை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதோடு பிரச்சினைகள் வரும் போதெல்லாம் அம்மாளாச்சி நீதான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்வன்.

யோகமலரின் குலதெய்வமும் மாரியம்மன்தான்.அவள் தனது கைப்பைக்குள் சிறிய மாரியம்மன் படத்தை எப்பொழுதும் வைச்சிருப்பதை நான் கண்டிருக்கிறன்.

வள்ளி தெய்வானையோடு இருக்கும் முருகன் படத்தையும் எடுத்து சூட்கேசுக்குள் வைச்சன்.நாளைக்கு சூட்கேசைத் தூக்கிக்

கொண்டு காலமை நேரத்தோடை வெளிக்கிட வேண்டியதுதான் என நினைச்சுக் கொண்டிருந்த எனக்கு அடுப்படிக்குள் சூரியகுமார் சமைப்பதற்கான ஆயத்தம் செய்யும் சத்தம் கேட்டது. அங்கை போய் உருளைக் கிழங்கை தோல் சீவி வெட்டிக் குடுத்தும்,கீரையை ஒடிச்சுக் குடுத்தும் உதவி செய்துவிட்டு எனது அறைக்குள் போகவென வெளிக்கிட,’ பொஸ் நாளைக்கு பப்பளிக் கொளிடே அப்ப நாளைக்கே சச்சிக்கு போய்விடுவியளா’ என்று சூரியகுமார் கேட்க, „ ஓம் நாளைக்கே போயிடுவன்,அங்கை போய் இனி வீட்டு நம்பரைக் கண்டபிடிக்க வேணும்.நாளைக்கே போயிட்டால் நிம்மதியாயிருக்கும் „ எனச் சொல்ல, அவனும் „அதுவும் சரிதான் „ எனச் சொன்னான்.

நாளைக்கு யோகமலரைச் சந்திக்கப் போறன் என்று நான் சொல்லவே இல்லை.

கட்டிலில் படுத்து நித்திரையான என்னை சூரியகுமாரின் குரல் „ பொஸ் எழும்புங்கோ வேலைக்குப் போக நேரமாகுது, சாப்பிட்டிட்டு கெதியிலை வெளிக்கிடுங்கோ’என்றது.

துடிச்சுப் பதைச்சு எழும்பின நான் அவசரம் அவசரமாக உடுப்பைப் போட்டுக் கொண்டு போய் ஆவாவென்று சாப்பிட்டிட்டு வேலைக்குப் போனன்.

பஸ்ஸால் இறங்கி மிசின்கள் இருந்த பகுதிக்குள் நான் போய்க் கொண்டிருக்கையில் அங்கை யோகமலர் மஞ்சள் சுடிதாரில் ஒரு கார்ட்டுடனும் பூக்கள அச்சடிக்கப்பட்ட பேப்பர் பையுடனும் மேசையில் சாய்ந்தபடி எனக்காக காத்துக் கொண்டிருந்தாள்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *