உரும்பிராயில் தியாகி பொன்.சிவகுமாரனின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஈழத் தமிழின விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியும், முதற் தற்கொடையாளருமான தியாகி பொன்.சிவகுமாரனின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (05) காலை-08 மணியளவில் யாழ். உரும்பிராய்ச் சந்திக்கு அருகில் உள்ள பொன்.சிவகுமாரனின் உருவச் சிலையடியில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பொன்.சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரி பொதுச் சுடரேற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். ஒரு நிமிட அக வணக்கத்தைத் தொடர்ந்து சிவகுமாரனின் உருவச் சிலைக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவஞ்சலிக் கூட்டமும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரின் உறுதியுரையைத் தொடர்ந்து பிரபல அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், தமிழ்மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினரும், யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன், மூத்த சமூக, அரசியல் செயற்பாட்டாளர் க.அருந்தவராஜா, காணி உரிமைக்கான மக்கள் இயக்கத் தலைவரும், சமூகச் செயற்பாட்டாளருமான இரத்தினசிங்கம் முரளிதரன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
![]()