Featureகட்டுரைகள்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிலங்கையில் நடந்த இரட்டைக் கொலை!.. அங்கம் -01… முருகபூபதி.

இந்திரன் கெட்டதும் பெண்ணாலே, சந்திரன் கெட்டதும் பெண்ணாலே…!!

துரோகம் துரத்தும் !!! 

முருகபூபதி.

இலங்கையில் இனப்பிரச்சினை தொடர்பான அரசியல் நெருக்கடிகள் உக்கிரமடைந்தபின்பு ஏராளமான கொலைச்சம்பவங்கள் நடந்துவிட்டன. அரசியல் தலைவர்கள், இயக்க, மற்றும் தொழிற்சங்கத்தலைவர்கள், மதகுருமார், அரச அதிபர்கள், அதிகாரிகள், படைத்தளபதிகள், கல்விமான்கள், பத்திரிகையாளர்கள், சாதாரண அப்பாவிப்பொதுமக்கள்…. என்று அந்தப்பட்டியல் நீளும். இது ஒரு புறமிருக்க பாதாள உலகக்கோஷ்டிகளின் படுகொலைகளும் தொடர்ந்தன.

ஆனால், இந்தப்படுகொலைகள் தொடர்பான நீதிவிசாரணைகள் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. நீதிமன்ற வழக்குகள் , அவசரகால சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும் விசாரிக்கப்பட்டபோதிலும் பத்திரிகைகளில் பத்தோடு பதினொன்றாகத்தான் வாசகர்களின் கவனத்திற்குள் வந்தன.

சேர். பொன். இராமநாதனின் பேரனும் கிரிக்கட் ஆட்டக்காரருமான சதாசிவம் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட கொலை வழக்கு, கிளிநொச்சி உருத்திரபுரம் கோகிலாம்பாள் சம்பந்தப்பட்ட அவளது கணவன் ஐயரின் கொலை வழக்கு, காலி பத்மினி குலரத்தினா கொலை வழக்கு , வில்பத்து காட்டில் இடம்பெற்ற நான்கு இலட்சம் ரூபா கொள்ளை தொடர்பான கொலை வழக்கு ( இக்கொலைச்சம்பவம் ஹாரலக்ஷ என்ற சிங்களத்திரைப்படமாகவும் வெளியானது) மங்கள எலிய என்ற இடத்தில் ஒரு அழகிய இளம்பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு அவளது சடலம் கற்களினால் கட்டப்பட்டு ஒரு வனப்பகுதியில் குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, பர்மிய தூதுவரின் மனைவி திருமதி பூண்வார்ட்டின் கொலை, தெஹிவளை பொலின் டீ குரூஸ் என்ற இளம் யுவதி சம்பந்தப்பட்ட ஒரு சிறுவனின் கொலை, வணபிதா மத்தியூ பீரிஸ் சம்பந்தப்பட்ட அவரது மனைவி மற்றும்

இங்ராம் என்பவர் தொடர்பான கொலைகள், பொலிகண்டி கமலம் இராமச்சந்திரன் கொலை முதலானவை தமிழ்ப் பத்திரிகை உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியவை.

கோகிலாம்பாளுக்காக ஆஜராகிய அமிர்தலிங்கம் தேர்தலில் போட்டியிட்டபோது அவரது எதிரணியினரான தமிழ்க்காங்கிரஸ் சட்டத்தரணிகள் அவரை கோகிலாம்பாள் அமிர்தலிங்கம் என்றுதான் மேடைகளில் விளித்து எள்ளிநகையாடினார்கள்.

மேலே குறிப்பட்ட வழக்குகள் சம்பந்தப்பட்ட விசாரணைகளை பாடசாலையில் படிக்கும் காலத்திலும் வீரகேசரியில் பணியேற்ற காலத்திலும் படித்திருக்கின்றேன். சில கொலை வழக்குகள் சம்பந்தமாக அலுவலக நிருபர்கள் எடுத்துவரும் நீதிமன்ற விசாரணைக்குறிப்புகளை அச்சுக்குப்போகுமுன்னர் செம்மைப்படுத்தியுமிருக்கின்றேன். நீதிமன்ற செய்திகளில் எங்கள் ஆசிரிய பீடம் மிகுந்த கவனமாக இருக்கும்.

எனது பத்திரிகை உலக அனுபவத்தில் நேரடியாக சந்தித்த ஒரு இரட்டைக்கொலை வழக்கு இன்றும் என்னால் மறக்க முடியாதது. அதனால் அதில் சம்பந்தப்பட்ட எதிரிகள் உட்பட வழக்கினை விசாரித்த நீதியரசர், அரச தரப்பிலும் எதிர்தரப்பிலும் வாதாடிய பிரபல வழக்கறிஞர்கள், சில சாட்சிகளின் பெயர்கள் இன்றும் நினைவிலிருக்கின்றன.

இந்த சொல்ல மறந்த கதைக்கு ‘துரோகம் துரத்தும்’ என்றுதான் பெயர் சூட்டவிருந்தேன். இந்தத்தலைப்பில் ஏற்கனவே சுஜாதா ஒரு குறுநாவல் எழுதியிருக்கிறார். இந்தத்தலைப்பும் இந்த ஆக்கத்திற்கு பொருத்தமாகத்தான் இருக்கும் என்பதை இதனை படிக்கும் வாசகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

தமிழ்த்திரைப்படங்களில் நீதிமன்ற விசாரணைகளை பார்த்திருக்கின்றேன். கலைஞர் கருணாநிதியின் பராசக்தி வசனம் இன்றும் பலருக்கும் நினைவிலிருக்கும். அவர் சிவாஜிகணேசனுக்காக “ கல்யாணி… ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்…” என்று எழுதியிருப்பார்.

ஆனால், உண்மையிலேயே நீதிமன்றங்களில் அப்படி கனல்தெறிக்கும் வசனங்களை நாம் பார்க்க முடியாது. அதற்கு தமிழ்த்திரைப்படங்களைத்தான் பார்க்கவேண்டும்.

இலங்கையில் தென்னிலங்கையில் ஹக்மண என்று ஒரு ஊர். அங்கே ஒரு நிலச்சுவாந்தார். தனவந்தர். ஊர் மக்களுக்கு அவர் பரோபகாரி. சரத் ஹாமு என்றுதான் அழைப்பார்கள். ஹாமு என்றால் ஊருக்கே பெரியவர். மதிப்பிற்குரியவர். அவரது மனைவி ஒரு பாடசாலை

ஆசிரியை. அந்த ஊர் பொலிஸ் நிலையத்துக்கு மாற்றலாகி வருகிறார் கே.டி. சமரநாயக்க என்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி. அவருக்குச்சொந்தமாக ஒரு பேஜோ காரும் இருக்கிறது. அவரது மனைவியும் ஒரு ஆசிரியை. இரண்டு ஆசிரியைகளும் அந்தப்பாடசாலையில் சிநேகிதிகளாகிவிட்டனர். அதனால் சில நாட்கள் தனது மனைவியை பாடசாலை விட்டதும் அழைத்துவரச்செல்லும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான கணவர், அந்தத் தனவந்தர் சரத் ஹாமுவின் மனைவிக்கும் லிஃப்ட் கொடுக்கத்தொடங்கினார். இந்த உறவினால் பொலிஸ் பொறுப்பதிகாரி சமரநாயக்கா, சரத் ஹாமுவின் குடும்ப நண்பராகிவிடுகிறார்.

அடிக்கடி ஹாமுவின் வீட்டில் விருந்துகளிலும் கலந்துகொள்கிறார். சமரநாயக்காவுக்கு, தனவந்தரின் இரண்டு சொத்துக்களில் ஆசை வந்துவிடுகிறது. ஒன்று அசையும் சொத்து, மற்றது அசையாத சொத்துக்கள்.

பொலிஸ் பொறுப்பதிகாரியின் மிடுக்கும், ஆங்கிலப்புலமையும், அதிகாரமும் அந்த கிராமத்து ஹாமுவின் மனைவியை கவர்ந்துவிட்டதனால். இருவருக்கும் இடையில் கள்ளக்காதல் அரும்பிவிடுகிறது.

இந்திரன் கெட்டதும் பெண்ணாலே, சந்திரன் கெட்டதும் பெண்ணாலே… என்று ஒரு பாடல் இருக்கிறது. தற்காலத்தில் சில சாமியார்கள் கெட்டுப்போவதும் பெண்களினால்தான் என்று திருத்திப்பாடத்தோன்றுகிறது.

இந்த காதல்களியாட்டம் வெளியூர் ஓய்வு விடுதிகள் (Rest House) வரையில் தொடர்ந்துவிட்டன. ஒரு பொறுப்புள்ள பொலிஸ் அதிகாரி, குடும்ப நண்பர், ஒரு ஆசிரியையின் கணவர் ஆகிய பிம்பங்கள் சமரநாயக்காவுக்கு இருந்தமையால் சரத்ஹாமுவுக்கு எந்தச்சந்தேகமும் வரவில்லை.

ஆனால், ஹாமுவின் வீட்டு வேலைக்காரன் சூரசேனவுக்கு வந்துவிட்டது. அவன் அருகில் உள்ள கிராமத்தில் தனது வீட்டிலிருந்து ஹாமு வீட்டுக்கு காலையில் வந்து அந்த வீட்டின் சமையல் வேலை தொடக்கம் தோட்டவேலைகள் மற்றும் அங்கு வளர்க்கப்பட்ட மயில்களுக்கு இரைபோடுவது வரையில் செய்துவிட்டு மாலையானதும் வீடு திரும்பிவிடுபவன்.

ஒரு நாள் ஹாமு வெளியூருக்கு சென்றுவிட்டார். அன்று இரவு அவர் வரமாட்டார் என்பது அறிந்து பொலிஸ் பொறுப்பதிகாரி, தனது வீட்டில் தனது மனைவியிடம், பொலிஸ் நிலையத்தில் கடமை இருப்பதாக பொய் சொல்லிவிட்டு தனது தனிப்பட்ட ‘கடமைக்காக’ ஹாமுவின்

வீட்டுக்கு வந்து இரவு தங்கிவிட்டார். மறுநாள் காலையில்தான் அவருக்கு கஷ்டகாலம் தொடங்கியிருக்கிறது. வேலைக்காரன் சூரசேன காலையில் வேளைக்கே வந்துவிடுகிறான். சமரநாயக்கா குளித்து முழுகிவிட்டு ஹாமுவின் டவலை அணிந்துகொண்டிருக்கிறார்.

வேலைக்காரனுக்கு சந்தேகம் பிடிபடத்தொடங்கிவிட்டது. ஆனால், பெரியகுடும்பத்துச்சமாச்சாரம் எனக்கருதி மௌனமாக இருந்துவிட்டான்.

ஹாமுவை இல்லாமல் செய்துவிட்டால் அனைத்து சொத்துகளும் அவரது மனைவிக்கு வந்துவிடும். தனது மனைவியை கைவிட்டுவிட்டு, ஹாமுவின் மனைவியுடன் வெளிநாடு ஒன்றுக்கு ஓடிவிடுவதுதான் சமரநாயக்காவின் திட்டம். அதற்கான சதித்திட்டத்தை உருவாக்குவதற்கு நீண்ட நாட்களாக யோசித்தார் அந்த பொறுப்பதிகாரி.

1970-1971 காலப்பகுதியில் ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடங்கியது. தென்னிலங்கையில் வெள்ளவாய பொலிஸ் நிலையத்தாக்குதலுடன் அந்தக்கிளர்ச்சி ஆரம்பமானது. அந்தக்கிளர்ச்சியை தனக்கு சாதகமாக்கிக்கொள்வதற்கு திட்டம் தீட்டினார் சமரநாயக்கா.

சரத்ஹாமு ஒரு தனவந்தர். அவரை கொன்றுவிட்டு அந்தப்பழியை ஜே.வி.பி.யின் கிளர்ச்சிக்காரர்கள் மீது போடுவதுதான் அவரது திட்டம். அதற்காக ஒரு தடவை ஒரு ஊர் ரவுடி அல்பர்ட் என்பவனிடம் பணமும் துப்பாக்கியும் கொடுத்து இரவு வேளையில் அனுப்பினார். அந்த ரவுடியும் சென்றான். ஆனால், அவனது அரவத்தைக் கேட்டதும் தோட்டத்திலிருந்த மயில்கள் அகவத்தொடங்கிட்டன. அந்த முயற்சி பலிக்காமல் அவன் திரும்பிவிட்டான்.

எதிர்பாராதவிதமாக தோட்டத்தில் மயில்களின் அகவல்சத்தம் கேட்ட சரத் ஹாமு, ஏதோ திருடர்களின் நடமாட்டமாக இருக்கலாம் என நம்பி, குடும்ப நண்பரான பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் முறையிட்டிருக்கிறார்.

உடனே சமரநாயக்காவும் , “ அந்தத் திருடர்களை பிடித்துத் தருகிறேன்.” எனச்சொன்னதுடன், தனக்குத்தெரிந்த மற்றுமொரு ஊர் ரவுடி களுபியதாஸ என்பவனை இரவு நேரக்காவல் கடமைக்காக அங்கு அனுப்பிவைத்தார். அவனுக்கு ஒரு வாளும் கொடுக்கப்ட்டது. அவன் மிகவும் நம்பிக்கையானவன் என்ற பிம்பத்தையும் அந்த அப்பாவி தனவந்தருக்கு தெரிவித்தார்.

இதனால் நீண்ட காலம் அங்கு வீட்டுவேலைக்காரனாக பணியிலிருந்த சூரசேன உஷாரடைந்தான். பொலிஸ் பொறுப்பதிகாரி வெளியே

மௌனமாக மேற்கொள்ளும் சதித்திட்டம் அவரது கள்ளக்காதலி திருமதி சரத்ஹாமுவுக்குத் தெரியாது. தனது கணவரை கொலைசெய்யும் அளவுக்கு அந்த கள்ளக்காதலன் துணிவான் என்றும் கடைசிவரை அவள் நம்பவே இல்லை.

சில வாரங்களுக்குப்பின்னர், மீண்டும் ஒரு சதித்திட்டத்தை, முதலில் அனுப்பிய ஊர்ரவுடி அல்பர்ட் மற்றும் தன்னால் நியமிக்கப்பட்ட இரவுநேரக்காவல்காரன் களுபியதாஸ ஆகியோருடன் சேர்ந்து தீட்டினார். களுபியதாஸ வழக்கம்போன்று காவல் கடமையில் இருப்பான். அவன் மயில்களை கவனிப்பான். அந்த ஊர்ரவுடி மீண்டும் துப்பாக்கியுடன் சென்று ஹாமுவை முடிப்பது, இந்த விடயங்கள் எதுவுமே தெரியாதவிதமாகத்தான் பொலிஸ் நிலையத்தில் அவ்வேளையில் கடமையில் இருப்பது. இதுதான் திட்டம்.

சுஜாதாவின் மர்மக்கதைகளில் குற்றவாளிகள் எங்காவது ஓரிடத்தில் சொதப்பிவிடுவார்கள். அந்தச்சொதப்பலே கதையின் உச்சமாகவும் இருக்கும். அதுபோன்று இரண்டு பேரை அந்த சதித்திட்டத்திற்கு பயன்படுத்திய சமரநாயக்காவுக்கு, அன்றைய தினம் இரவு சரத்ஹாமுவின் வீட்டில் அவரது தம்பி இருப்பதோ, வேலைக்காரன் சூரசேனா தனது வீடு திரும்பாமல் அங்கேயே தங்கியிருப்பதோ தெரியாது.

அப்பொழுது அந்த இரவு வேளையில் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்ற தகவலை பொலிஸ் நிலையத்திலிருக்கும் சமரநாயக்காவுக்கு தெரிவிப்பதற்கு, அவரால் நியமிக்கப்ட்ட அந்த இரவுநேர காவல்காரன் களுபியதாஸவிடம் இக்காலம்போன்று கைத்தொலைபேசி இருக்கவில்லை!

துப்பாக்கியுடன் வந்த அந்த ரவுடிக்கும் ஏதோ போதாத காலம். தனியே வராமல் தனது உறவினன் ஆர்.கே. பியசேன என்பவனையும் மேலும் மூன்று நண்பர்களையும் அழைத்துக்கொண்டு வந்திருக்கின்றான்.

ஒரு வீட்டில் கொள்ளையடிக்கப்போகிறோம் என்றுதான் பியசேனவுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. முதலில் அவன் அதற்கு மறுத்துள்ளான். ஓன்றும் செய்யவேண்டாம் பேசாமல் வா. கிடைப்பதில் பங்கு தரப்படும் எனச்சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த வீட்டிலே அந்தக்கொலையை தலைமை ஏற்று செய்யவிருப்பவன் இப்படி மேலும் மூவருடன் வருவான் என்பது தெரியாமல் காவல் கடமைக்கான வாளுடன் காத்திருந்தான் களுபியதாஸ.

அல்பர்ட் என்ற அந்த ரவுடி தனது சகாக்களுடன் நடுநிசி வேளையில் சரத்ஹாமுவின் வீட்டுக்காணிக்குள் பிரவேசித்தபோது, ஏற்கனவே அங்கு காவல் கடமையில் இருக்கும் களுபியதாஸ, மயில்கள்

அகவினால் அவற்றை வெட்டிச்சாய்ப்பதற்கும் தயாராக இருந்துள்ளான்.

ஆனால், எல்லாம் தலைகீழாக நடந்தது. ரவுடி அல்பர்ட் முதலில் வளவின் கேட்டருகே இருந்த மின்விளக்கை துப்பாக்கியால் சுட்டு அணைத்துவிட்டான். கொள்ளைக்காரர்கள் வந்துவிட்டனர் என தெரிந்துகொண்ட வேலைக்காரன் வாசல் கதவைத்திறந்து பார்த்துமூடிய பின்பு கதவை நீண்ட தடியினால் அழுத்திக்கொண்டு நின்றான். அடுத்த சூடு அவனது தோள்ப்பட்டையில் விழுந்தது. வந்தவர்களினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அடுத்தடுத்து சூடுகள். சரத்ஹாமுவும் அவரது தம்பியும் கொல்லப்பட்டனர். இந்த அமளியினால் ஹாமுவின் மனைவி தனது குழந்தையுடன் ஒரு அறைக்குள் புகுந்து மறைந்துகொண்டாள்.

அந்தக்கூட்டத்தில் வந்தவர்களில் இரண்டுபேர், தலைவனின் கட்டளைக்கு மாறாக ஒரு காரியத்தில் ஈடுபட்டார்கள். சரத்ஹாமுவின் மனைவியும் பொலிஸ் பொறுப்பதிகாரியின் ஆசைநாயகியுமான அந்த ஆசிரியை பாலியல் வல்லுறவுக்கு ஆளானாள். இந்தக்கொடுமைகளை செய்வதில் அந்த ஆசைநாயகன்தான் பின்னணியிலிருந்து இயங்கியிருக்கிறான் என்பது அவளுக்கு விசாரணை நீதிமன்றத்துக்கு வரும்வரையில் தெரியாது.

அந்த நடுநிசியில் இந்த எதிர்பாராத சம்பவங்களினால் கலக்கமுற்ற ஆர்.கே. பியசேன தலைதெறிக்க வெளியே ஓடியிருக்கிறான். ஓடியவன் ஒரு பெட்டிக்கடையருகே சென்று கதறி அழுதிருக்கிறான்.

இதனால் அந்த ஊர் களேபரமடைந்தது. ஜே.வி.பி. கிளர்ச்சிக்காரர்கள்தான் கொலைகளையும் கொள்ளைகளையும் செய்துவிட்டு தப்பிவிட்டனர் என்ற வதந்தி ஊரெங்கும் பரவத்தொடங்கியது.

சரத் ஹாமு வீட்டில் அசம்பாவிதமாம் எனக்கேள்விப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி தனது கடமை உணர்வுடன் ஜீப்பை எடுத்துக்கொண்டு அவ்விடத்திற்கு விரைகிறார். இரண்டு கொலைகள். வேலைக்காரன் சூரசேன காயத்துடன் போராடிக்கொண்டிருக்கிறான். ஹாமுவின் மனைவி அதிர்ச்சியில் உறைந்து குழந்தையை அணைத்தவாறு நிற்கிறாள்.

ஊர்மக்கள் வேடிக்கை பார்க்கவும் தேறுதல் சொல்லவும் திரண்டுவிடுகின்றனர். ‘ஒருவனையும் விடமாட்டேன்’- சூளுரைத்தவாறு காயப்பட்டிருந்த சூரசேனவை ஜீப்பில் ஏற்றி ஹக்மணை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கிறார் சமரநாயக்கா. திரும்பிவரும் வழியில் ஒரு பெட்டிக்கடையருகே நிற்கும் கூட்டத்தைப்பார்த்து சமரநாயக்கா தனது ஜீப்பை நிறுத்துகிறார்.

அந்தச்சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவனை தாங்கள் பிடித்து கட்டிவைத்திருப்பதாக ஊர்மக்கள் சொல்கிறார்கள். சமரநாயக்கா உஷாரடைகிறார். கட்டிவைக்கப்பட்டிருக்கும் ஆர்.கே. பியசேனா, தான் இயக்கித்தயாரித்த நாடகத்தில் ஒரு பாத்திரம் அல்ல ! இவன் எப்படி இந்த நாடகத்தினுள் நுழைந்தான்…?

அவன் அழுது புலம்புகிறான். தனது உறவினன் அல்பர்ட்தான் தன்னை சரத்ஹாமுவின் வீட்டுக்கு அழைத்துச்சென்றதாகவும், தனக்குத்தெரியாத மேலும் நான்குபேர் அந்தச்சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் அவன் சொன்னதும் சமரநாயக்காவுக்கு அதிர்ச்சி அதிகரித்தது. தான் தயாரித்து இயக்கிய அந்த நாடகத்தில் மேலும் சிலரா..? அவர்களில் இரண்டுபேர் தனது ஆசைநாயகியை வல்லுறவுக்குட்படுத்திவிட்டார்களா..?

நாடகமே முற்றிலும் தவறாக அரங்கேறிவிட்டது. அதில் பங்கேற்று நடித்தவர்களைவிட மிகச்சிறந்த நடிகர்தான் அந்த தயாரிப்பு இயக்குநர். அந்த ஊர்பொதுமக்கள் முன்னிலையில் தனக்கு முன்பின் தெரியாத அந்த பியசேனாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டுவிட்டு, அவனை ஏற்றிக்கொண்டு பொலிஸ் நிலையம் வருகிறார்.

ஊர்மக்களுக்கு சம்பவங்களை நேரில் கண்ட ஒரு சாட்சியம் கிடைத்துவிட்டது. இந்த சாட்சியத்தை அழிக்கவேண்டும். அவர் யோசிக்கத்தொடங்கினார். பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கொலமுனே என்பவரிடம் சொல்லி ஒரு விலங்கை எடுத்து மாட்டி யன்னலருகே அவனை நிறுத்திவிடுகிறார்.

கொலைகள் நடந்த இடத்துக்கு மரணவிசாரணை அதிகாரி வந்து கொலை என்று சொல்லிவிட்டு பொலிசாரை விசாரிக்கச்சொல்கிறார்.

இந்தச்சம்பவத்தினால் அதிர்ச்சியுற்ற காலி மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் மேலதிக தகவல் அறிவதற்கு ஹக்மணை பொலிஸ் நிலையத்துக்கு வரவிருப்பதை அறிந்த சமரநாயக்கா, தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பியசேனாவை பொலிஸ்நிலையத்திற்கு பின்புறமுள்ள கராஜில் மறைத்து வைக்கிறார்.

“ ஏன் அந்த சாட்சியை மறைக்கிறீர்கள்?” என்று கான்ஸ்டபிள் கேட்டதற்கு, “வரும் பொலிஸ் அத்தியட்சர் சாட்சியை விசாரித்து குழப்பிவிட்டுவிடுவார். அவன் முக்கிய சாட்சி. எனவே இந்த விசாரணை முடியும் வரையில் அவனை மறைத்துத்தான் வைக்கவேண்டும்.” என்கிறார் சமரநாயக்கா.

அந்தக்கான்ஸ்டபிளுக்கும் சந்தேகம் துளிர்க்கிறது. எனினும் மேலதிகாரிக்கு எதிராக எதுவும் செய்யமுடியாத நிலை.

காலி பொலிஸ் அத்தியட்சர் ஹக்மணை பொலிஸ் நிலையம் வந்து, சம்பவத்தை தீவிரமாக விசாரிக்குமாறு பணிப்புரை விடுக்கிறார். அதற்கு முக்கிய காரணம் கொல்லப்பட்ட சரத்ஹாமுவும் அவரது தம்பியும் கம்புறுப்பிட்டிய பாராளுமன்ற உறுப்பினர் ஏலியன் நாணயக்காரவின் நெருங்கிய உறவினர். அவர் சமசமாஜக்கட்சியைச் சேர்ந்தவர். ஜே.வி.பி.யின் கிளர்ச்சிதான் இந்தக்கொலைகளின் பின்னணி என்று அவரும் நம்பிவிடுகிறார்.

ஹக்மனை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வேலைக்காரன் சூரசேனாவை மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டார்கள். அந்தச்சம்பவங்களை நேரில் பார்த்த மற்றுமொரு முக்கிய சாட்சி அந்த வேலைக்காரன் சூரசேன.

சமரநாயக்கா உஷாரடைகிறார். பல ஆங்கில மர்ம நாவல்கள் அவர் படித்திருக்கவேண்டும்.

பொலிஸ் நிலைய கராஜில் அடைபட்டிருக்கும் அந்த பியசேனாவை தனது பேஜோ காரில் ஏற்றிக்கொண்டு மாத்தறை ஆஸ்பத்திரிக்கு வருகிறார்.

( தொடரும் )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *