சாமானியனின் சரடு…..15 … ( கட்டுரை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

அப்படி அந்த அத்தை முறைப் பெண்களெல்லாம் மகள்களை கட்டிக் கொள்ளும்படி சொல்லி கேலி பண்ணுவது கிராமத்தில் இருக்கும் ஒரு வழக்கு என்றாலும் அதையும் தாண்டி ஒன்றும் இருந்தது. அப்படி உரிமையுடன் சொல்வது எல்லா பெண்களையும் திருமணம் செய்து வைப்பதற்கா? என்னையும் கோபியர் கொஞ்சும் ரமணா என்று பார்ப்பதற்கா என்றெல்லாம் எண்ணி உங்கள் கற்பனைக் குதிரையின் கடிவாளத்தை தொய்வில் விட்டு அக்குதிரையை தாறுமாறாய் ஓடவிடாதீர்கள். அப்படிச்சொல்ல அவர்களுக்கு எல்லாம் என்னை வைத்து ஒரு காரியம் நடக்கவேண்டி இருந்தது. அதற்காக என்னை குதூகலப்படுத்த சொன்ன வார்த்தைகளே அவை.
நமக்கு ஒரு காரியம் ஆகவேண்டும் என்றால் யார் யாரிடம் எப்படிப் பேசவேண்டும் என்று இருக்கிறதல்லவா? எச்சில் கையால் காக்கை ஓட்டாதவனைக்கூட நீங்க தர்மப்பிரபு என்று சொல்வார்கள் அல்லவா
அந்தவகையைச் சார்ந்த ஒன்றுதான் இதுவும். அவர்கள் தங்களது பெண்களை எனக்குத் திருமணம் செய்தும் கொடுக்க மாட்டார்கள். நானும் மணந்து கொள்ள வாய்ப்பில்லை என்றாலும் என்னை ஈர்ப்பதற்காக கூறப்பட்ட வார்த்தைகளே என்பதை நானும் அறிவேன்.
அப்படி என்ன என்னால் அவர்களுக்கு ஆக 
வேண்டிய காரியம் இருக்கிறது? வேறொன்றுமில்லை அவர்கள் பெற்றோர் உறவுகளுக்கெல்லாம் நான்தான் கடிதம் எழுதவேண்டும். கடிதம் எழுதுவதோடு மட்டுமல்ல அதை பேட்டையில் தபாலிலும் நானே சேர்க்கவேண்டும். இதற்கு முன் பக்கத்து தெருவில் ஒருவர் எழுதிக் கொடுத்த கடிதங்களை அவர்களது பெற்றோரோ உறவுகளோ கண்டுகொள்ளவே இல்லையாம். அதனால் அவரை விட்டு என்னிடம் கடிதம் எழுத வந்தார்கள். நான் கடிதம் எழுதியபின்தான் அவர்களது உறவுகளும் பெற்றோர்களும் ஒழுங்காக கடிதம் எழுதுகிறார்களாம்.
இதை எத்தனையோ தடவை என்னிடமே
சொல்லியிருக்கிறார்கள். இப்படி அவர்கள் சொல்வது எனக்கு புதிராக இருந்தது. அதன்பின் அதன் காரணத்தை அதற்குண்டான சந்தர்ப்பம் கிடைத்தபின் கண்டுபிடித்தேன். ஒருமுறை அவர்களில் ஒருவர் என்னிடம் கடிதம் எழுதச் சொன்னார்கள். அப்படிச் சொன்ன போதுதான் ஏன் அவர்களின் பெற்றோர்களும் உறவுகளும் பதில் போடவில்லை என்பதற்குண்டான காரணம் புரிந்தது. கடிதம் எழதச்சொன்ன ஒருவர் சொல்லச் சொல்ல எனக்கு வியப்பாக இருந்தது.
அதை அப்படியே சொல்கிறேன். உங்களுக்கு காரணம் புரியும். “எனக்கு கல்யாணம் பண்ணி வைத்தீர்களா? இல்லை கிணற்றில் தள்ளி விட்டீர்களா? அக்கா பொண்ணு வயசுக்கு வருகிற மாதிரி இருக்கு. அதுக்கு ஆசையாய் ஒரு புதுத்துணி எடுத்து கொடுப்போம் என்ற துப்பு என் உடன் பிறந்தவங்க எவனுக்காவது இருக்கா? இவனுக எல்லாம் இருந்து என்ன பயன்? எனக்கு உடன் பிறப்பு எதுவும் இல்லை செத்து போயிட்டானங்க என்று நினைத்துக் கொள்கிறேன். அதே மாதிரி நான் செத்தாகூட ஒருத்தனும் இந்த கரிசல்குளம் மண்ணை உறவைச் சொல்லிக் கொண்டு மிதிக்கக்கூடாது.” இப்படி எல்லாம் சொல்லி கடிதம் எழுதச்சொல்லி இருக்கிறார்கள்.
இவர்களுக்கெல்லாம் இதற்கு முன் கடிதம் எழுதியவர் இவர்கள் சொன்னபடியே அச்சுப் பிசகாமல் எழுதி இவர்களது பெற்றோர் மற்றும் உறவுகளுக்கிடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தி உறவுக்கே முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் என்பது அப்போது எனக்கு தெரிய வந்தது. நான் அவர்கள் சொன்னதை எல்லாம் அப்படியே எழுதுவதில்லை. அவர்கள் பாவம் படிப்பறிவற்ற கிராமத்தவர்கள். அவர்களது உள்ளத்தில் வெடித்த எரிமலையை வெளியே நெருப்பாகக் கக்குகிறார்கள். நானும் அப்படியே எழுதினால் நான் படித்ததற்குண்டான பலன் என்ன?
அதனால் அவர்கள் சொல்லவருவதினை உணர்ந்துகொண்டு அச்செய்தியை மட்டுமே கடிதத்தில் எழுதுவேன். மற்றபடி அவர்கள் திட்டுவதை எல்லாம் எழுதினால் எனக்கு
முன் கடிதம் எழதியவரின் பணியையே நான் தொடர்ந்திருப்பேன். நான் எனது பாணியில் கடிதத்தை எழுதியதால்தான் அவர்களது உறவுகளுக்குள் விரிசல் ஏற்படாமலும் அதே சமயம் எனக்கென அவர்கள் கொடுக்கும் கௌரவத்துடனும் வலம்வர முடிந்தது.
ஆனால் நான் அவர்கள் சொன்னதை அப்படியே எழுதாமல் என் விருப்பத்துக்கு மாற்றி எழுதுவது சரிதானா என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன். அவர்கள் சொல்வதை அப்படியே எழுதினால் அவர்களின் உறவுக்குள் சிக்கல் அதிகமாகுமே தவிர குறையாது. காரணம்
நான் அவர்கள் சொல்ல வருவதின் கருத்தை மட்டும் எழுதுவேன். எப்படி அன்னப்பறவை பாலும் நீரும் கலந்து வைத்தால் பாலை மட்டும் குடிக்கும் என்று சொல்வார்களோ
அதைப்போல் கருத்தை மட்டும் எழுதுவேன்.
அப்படி இருந்தும் ஒருநாள் அவர்கள் என்னிடம் வந்து அவர்களது பெற்றோர் மற்றும் உறவுகளிடமிருந்து பழையபடி கடிதப் போக்குவரத்து நின்றுவிட்டதாக சொன்னார்கள். எனக்கு திக்கென்று இருந்தது. சரியாகத்தானே எழுதினோம் என்று யோசித்தேன். சிறுவயதில் நான் கொஞ்சம் சந்தேகப்பிராணி. அதற்காக மற்றவர்களை நம்பமாட்டேன் என்று தப்பாக எண்ணிவிடாதீர்கள். சொல்கிறேன் கேளுங்கள்.
தபால் பெட்டியின் உட்புறம் பசை எதுவும் தடவி இருக்கமாட்டார்கள். ஆனால் நான் என்ன செய்வேன் தெரியுமா? கடிதத்தை தபால்பெட்டியில் போட்டுவிட்டு அந்தபெட்டியின் வெளிப்புறமாக இருபக்கமும் இருகைகளாலும் தட்டி கடிதம் உட்புறம் எங்கும் ஒட்டிக் கொள்ளாமல் உள்ளே நேராக விழுந்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே அவ்விடத்தை விட்டு அகல்வேன். அப்பபயிருக்க கண்டிப்பாக கடிதம் தவறியிருக்க வாய்ப்பே இல்லை. பின் என்னவாக இருக்கமுடியும்?
இப்படி பலவாறாக எண்ணிக்
கொண்டிருக்கும்போதே எனக்கு பொறிதட்டியது. உடனே அவர்களுக்கு ஆறுதல் சொல்லி இன்னும் ஒருமாதம் பொருத்திருப்போம் அப்படியும் ஒன்றும் உங்கள் உறவினர்களிடமிருந்து இருந்து பதில் வராவிட்டால் தபால் நிலையம்சென்று புகார் கொடுப்போம் என்று அவர்களை அனுப்பி வைத்தேன். அனுப்பி வைத்த கையோடு உடனடியாக புத்தகப்பையை நோக்கி ஓடினேன். அதிலிருந்த நோட்டுக்களையும் புத்தகங்களையும் நன்றாகப் புரட்டி தேடினேன். கடைசியாக ஆழ்கடலில் முத்துக்குளித்து கொண்டுவந்த சிப்பிக்குள் முத்தாய் விஞ்ஞானப் புத்தகத்தின் ஊடே தபால் பெட்டியில் சேரவேண்டிய கடிதம் தஞ்சமடைந்திருந்தது.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()