சாமானியனின் சரடு…..12 …. ( கட்டுரை ) …. சங்கர சுப்பிரமணியன்.

நான் என் தாத்தா வீட்டில் தங்கி பேட்டை உயர்நிலைப் பள்ளியில் படித்துக் பொண்டிருந்தேன். பள்ளிக்கும் வீட்டுக்கும் நடந்துதான் செல்ல வேண்டும். நான்கு அல்லது ஐந்து கிலோமீட்டர் தூரம்
கிட்டத்தட்ட ஒருமணி நேரம் நடக்க வேண்டும். ஏழையானாலும் சரி பணக்காரர் என்றாலும் சரி அங்கேதான் நடப்பதிலாவது மக்களாட்சித் தத்துவத்தைக்
காணமுடிந்தது. அந்த கிராமத்திலிருந்து பள்ளிக்கு செல்ல இரண்டு வழிகளில் செல்லலாம். ஒன்று நேர் வழி ஆனால் தூரம் ஒரு கிலோமீட்டர் அதிகமாகும். மற்றொன்று குறுக்கு வழி. சற்றுதூரம் குறைவென்றாலும் கொஞ்சம் வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும்.
வித்தை கற்றுக் கொள்ளும் வரையில் வரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும். வித்தை கற்கும்போது கவனக்குறைவு ஏற்பட்டால் பின்விளைவு விபரீதமாய் இருக்கும். ரெம்பவும் உங்களை நான்
குழப்ப விரும்பவில்லை. நேரடியாக விசயத்துக்கு வருகிறேன். குறுக்கு வழியில் செல்லும்போது அடிக்கடி பாதையை மாற்றி படாதபாடெல்லாம் படவேண்டும். கொஞ்சதூரம் வீதியில் நடந்துவிட்டு அப்புறம் வயலுக்குள் இறங்கி நடக்கவேண்டும். வயலில் நடப்பதென்றால் வயல் வரப்புக்களில் நடக்கவேண்டும். வயல்வரப்பில் நடப்பது அவ்வளவு எளிதல்ல.
வயல் வரப்புக்களில் பசுமையாக புல் வளர்ந்திருக்கும். அந்த புற்களில் லாவகமாக பரதநாட்டியத்திற்கு அபிநயம் பிடிப்பது போல் பாதத்தை வைத்து ஊன்றவேண்டும். காலணிகளோடு நடக்க இயலாது. ஆதலால் இந்த குறுக்கு வழியை தேர்ந்தெடுப்பவர்கள் ஒன்று காலணிகளை அணியக்கூடாது அல்லது காலணிகளை கழற்றி கையில் வைத்துக்கொள்ள வேண்டும். குறுக்கு வழியில் முன்னேறுவது எளிதல்ல அதைத் தேர்ந்தெடுக்கும்போது பல இன்னல்களை எதிர் கொள்ளவேண்டும் என்ற வாழ்க்கைத் தத்துவம் அங்கே அரங்கேறக் காணலாம்.
கொஞ்ச கவனக்குறைவாகவோ அல்லது சரியாகவோ பாதத்தை ஊன்றாவிட்டால் வழுக்கி வயலுக்குள் சேற்றில் விழவேண்டியதுதான். சில இடங்களில் இரு வரப்புக்களின் இடையே தண்ணீர் பாசணத்துக்காக ஓடிக் கொண்டிருக்கும். அப்படி ஓடிக்கொண்டு இருந்தால் அந்த வாய்க்காலில் விழுந்து உடைகள் புத்தகப்பை எல்லாம் நனைந்து விடும். ஈர உடையோடு பள்ளிக்கு செல்ல முடியாது.
நான் அதுமாதிரி வரப்பு வழுக்கி வரப்பிலும்
சகதியான வயலிலும் விழுந்திருக்கிறேன்.
இப்படி விழுவதில் உண்மையும் இருக்கும்
சிலவற்றில் பல இரகசியங்களும் இருக்கும்.
பல இரகசியங்களில் ஒன்றாக பள்ளிக்கு போகப் பிடிக்காத நாட்களில் இப்படி மாணவர்கள் விழுவதுண்டு. வரப்புக்களில் நேராக போய்க் கொண்டிருக்கவும் முடியாது. போகவேண்டிய இலக்கை நோக்கி குறுக்கும் நெடுக்குமாக வரப்புகளைத் தாண்டியும் நடந்தும் போய்க் கொண்டிருக்க வேண்டும். இலக்கு என்னவென்றால் கொஞ்ச தூரம் இப்படியே நடந்து கரை ஏறவேண்டிய குளக்கரைதான். குளக்கரையை அடைவதற்குள் கால்கள் பயங்கரமாய் வலிக்கும். ஆரம்ப காலத்தில் ஏற்படும் இந்த வலி போகப்போக சிலமாதங்களில் பழகிவிடும்.
குளக்கரையை ஏறுமிடத்தில் மதகு இருக்கும். இந்த மதகின் வழியாக குளத்தில் இருந்து வயல்களுக்கு பாய்ச்ச தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். அப்படி ஓடுகின்ற நீரைப் பார்த்தபடியே குளக்கரையில் ஏறியதும் குளத்தில் கடல்போல் கண்ணுக்கு
எட்டிய தூரம்வரை படர்ந்திருக்கும் நீர்ப்பரப்பும் அதன்மேலே தவழ்ந்து வரும் சிற்றலைகளும் அதன்மூலம் கொண்டு வரப்படும் இதமான குளிர் காற்றும் வயல்களைக் கடந்துவந்த களைப்பைப் போக்கும். குளத்தில் நீர் மட்டத்துக்குமேல் துள்ளிக் குதிக்கும் மீன்கள் கண்கொள்ளாக் காட்சியாய் இருக்கும்.
ஆனந்தமாக இருக்கும் வாழ்க்கை நிரந்தரமில்லை என்பதை உணர்த்துவது போல் ஆனந்தமாக மேலே துள்ளிக் குதிக்கும். மீன்களை சில நேரங்களில் எங்கிருந்தோ வந்த கழுகு நொடிப் பொழுதில் கவ்விச்செல்லும். பரந்து கிடக்கும் தண்ணீரின் எல்லையத் தாண்டி புகைவண்டி சென்றுகொண்டு இருக்கும்.
அது மேல்நோக்கி புகைவிட்டு செல்லும் காட்சியும் அந்த புகை வானில் ஏற்படுத்தும் கோலங்களும் மெய் மறக்கச்செய்யும்.
குளக்கரையில் ஏறியதும் கரையிலேயே நடந்து செல்லவேண்டும். வயலில் நடக்கும்போது ஒரு பிரச்சனை என்றால் குளக்கரையில் நடக்கும்போது படர்ந்திருக்கும் முட்செடிகள் தொட்டு உறவாடி துன்பம் கொடுக்கும். சுமாராக இரண்டு கிலோமீட்டர் தூரம் கடந்ததும் மதுரை திரவியம் தாயுமானவர் கல்லூரியின் மாணவர் விடுதியருகே குளக்கரையில் இருந்து இறங்கி சற்று தூரம் நடந்ததும் பள்ளிக்கூடம் வரும்.
இவ்வளவு இடர்களுக்கு மத்தியிலும் கல்வி கற்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை நடைமுறையில் கடைப்பிடிக்கும் 
வாய்ப்பினை கிராமப்புற மாணவர்களுக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுத்தவர் பெருந்தலைவர் கமராஜர் அவர்களே. நானே விரும்பி இருந்தாலும் இலவசக்கல்வித் திட்டத்தை பெருந்தலைவர் அறிமுகம் செய்திருக்காவிட்டால் நிச்சயமாக கல்வி கற்றிருக்க முடியாது.
இதெல்லாம் நான் கல்விகற்றபின்தான் தெரியவந்தது. அப்படிப்பட்ட கல்வி எனக்கு வளமான வாழ்வைனை வழங்கிய போதும் அக்கல்வியை நான் கற்கும்போது அது இளவயதில் எனக்கு ஏற்படுத்திய அனுபவங்கள் இன்னும் என்மனதின் அடித்தளத்தில் வந்துபோகும்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()