இலங்கை

மகிந்தவைக் கைது செய்வதாக அச்சுறுத்தி அரசியல் நடத்துவதா?; ஜனாதிபதிக்கு நாமல் எச்சரிக்கை

மகிந்த ராஜபக்‌ஷவை கைது செய்வதாக எங்களை அச்சுறுத்தி அரசியல் செய்ய முடியுமென்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நினைத்துக்கொண்டிருப்பாராக இருந்தால் அந்த எண்ணம் அவருக்கு பிழைத்ததாக இருக்கும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை செய்தியாளர்களை சந்தித்த போதே நாமல் ராஜபக்‌ஷ இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்‌ஷவை கைது செய்வதா? இல்லையா? என்பதனை ஜே.வி.பியே தீர்மானிக்க வேண்டும். இதனால்தான் மேதினத்தில் வழக்குத் தீர்ப்பு தொடர்பில் கதைத்தனர். மேதினத்தில் தொழிலாளர்கள் தொடர்பில் கதைக்காமல் சிறையில் அடைப்பது தொடர்பில் கதைக்கின்றனர். இவ்வாறாக எங்களை அச்சுறுத்தி அரசியல் செய்ய முடியுமென்று ஜனாதிபதி நினைத்துக்கொண்டிருப்பாராக இருந்தால் அதில் அவர் பிழைவிட்டார் என்றே கூற வேண்டும்.

அதேபோன்று மகிந்த ராஜபக்‌ஷ இதனை விடவும் பெரிய சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளார். அதேபோன்றுதான் அன்றைய அரசாங்கமும் இருந்தது. இதன்படி இதற்கு நாங்கள் முகம்கொடுப்போம். அத்துடன் மகிந்த ராஜபக்‌ஷவை வாக்குமூலமளிக்க வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறுவதானது, அச்சுறுத்தி பலவந்தமாக வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டதாக சத்தியக்கடதாசியில் குறிப்பிட்டவரே வாக்குமூலத்துடன் தொடர்புடையவர்.

இதேவேளை அரசாங்கத்தின் கோடிக் கணக்கான டொலர்களை வேறு கணக்குகளில் போடுபவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றார்கள் என்று பொலிஸார் கூறுகின்றனர் என்றால் இவை அனைத்திலும் மக்களுக்கு சந்தேகங்கள் எழுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button