முச்சந்தி

மக்கள் பெரும் அச்சத்தில்; மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடுகள்

நாட்டில் அண்மைக் காலமாக மீண்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது மக்கள் மத்தியில் மீண்டும் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

கடந்த வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து நான்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 22ஆம் திகதி அதிகாலை தெவிநுவர பகுதியில் இனந்தெரியாத நபர்கள் வீடொன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டை நடத்தி சென்றிருந்தனர். இதில் எவருக்கும் காயம் ஏற்பட்டிருக்கவில்லை. அத்துடன் 23ஆம் திகதி தெமட்டகொட குப்பியாவத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்திருந்தார்.

இதேவேளை 23ஆம் திகதி இரவு வத்தளை பள்ளியாவத்தை பகுதியில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் புகுந்த துப்பாக்கிதாரியொருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதேபோன்று பெல்லன்வில பகுதியில் 25ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 55 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நவகமுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் எனவும், மின்னேரியா இராணுவ முகாமிலிருந்து துப்பாக்கிகளைக் கடத்திய சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சந்தேகநபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் மன்னாரில் இருந்து கடல்வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்த போது இராமேஸ்வரம் பகுதியில் இந்தியக் கடலோரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பாதாள குழுக்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடையவை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும் கடந்த சில வாரங்களாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் எதுவும் பதிவாகாமல் இருந்த நிலையில் மீண்டும் கடந்த வாரத்தில் இருந்து திடீரென மீண்டும் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகுவது தொடர்பில் மக்களிடையே மீண்டும் அச்ச நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button