கட்டுரைகள்

சாமானியனின் சரடு…..சரடு!…11…. ( கட்டுரை ) …. சங்கர சுப்பிரமணியன்.

சில சமயங்களில் நாம் ஒன்றைப் பேசிக்கொண்டிருக்கும் போதே பேச்சு திசைமாறி எங்கெங்கோ சென்றுவிடும். பின் திசைமாறிச் சென்றுவிட்ட குதிரையை
நெறிப்படுத்தி அதை சரியான திசையில் செலுத்த உதவும் கடிவாளத்தை லாவகமாக இழுத்து சரியான இடத்தில் விடுவதுபோல் எழத்தாளனுக்கும் நிகழ்வதுண்டு. எழுதிக் கொண்டேவரும் எழுத்தாளனுக்கும் அவன்
பாதை தடம்புரண்டு விலகும். அதேபோல் எனது எழுத்தும் பாதையிலிருந்து விலகியதால் அதை நேர்வழிக்கு கொண்டு வந்து ஏலகிரி மலையில் எனது பயணத்தை தொடர்கிறேன்.

ஏலகிரி மலையில் குறிப்பிட்ட கொண்டை ஊசி வளவில் இரவுநேரங்களில் வாகன ஓட்டிகளின் முன்னே வெள்ளை நிறத்தில் உருவம் கடந்துசெல்வதைப் பார்த்ததும் அச்சத்தில் விபத்து நடந்து விடுகிறது என்பதைப் பார்த்தோம். அதைக் கண்டுபிடிக்க ஒருகுழு முதல்நாள்
மாலையே வந்து பேய்க்காக காத்திருந்தனர். ஆனால் நடந்தது என்ன?  இரவு முழுக்க காத்திருந்தும் எந்த ஒரு பேயும் வரவில்லை. வாகனங்கள் எதுவும் விபத்துக்குள்ளாகவும் இல்லை.
அப்படியானால் அந்த பேய்க்கு என்ன ஆயிற்று? சற்று விரிவாகப் பார்ப்போம்.

பாவமன்னிப்பு படத்தில் பாலிருக்கும் பழமிருக்கும் பாட்டை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? யோவ்! பேய்க்கும் பாலிருக்கும் பழமிருக்கும் பாடலுக்கும் என்னைய்யா சம்பந்தம் என்று நீங்கள் நாக்கை துருத்துவதில் நியாயம் இருக்கிறது. என் தரப்பு நியாயத்தைச் சொல்கிறேன். அந்தப் பாடலில் கடைசி வரிகள், “வேதமெல்லாம் காதலையே மறப்பதில்லையே, அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே”
என்ற வரிகள் வருகின்றன. வானில் தோன்றும் மேகங்கள் பல வித்தைகள் காட்டி மறைவதை நாம் பார்த்திருப்போம்.

யானை மாதிரி குதிரை மாதிரி தேர்மாதிரி எல்லாம்உருவங்கள் தோன்றி  மறையும். இன்னும் நம் கற்பனைக்கு ஏற்றமாதிரி எல்லாம் உருவங்கள் தோன்றி மறைவதை நாம் நன்கறிவோம். அதே மாதிரி மலை உச்சியிலும் மேகங்கள் கடந்து செல்லும். ஏலகிரி மலையில் அந்த குறிப்பிட்ட வளைவில் மட்டும் மேகங்கள் அதுமாதிரி செல்ல மலையின் அமைப்பு, நிற்கும் மரங்களினால் உண்டாகும் காற்றின் வேகம், அது மேகங்களை இழுத்தச் செல்லும் விதம் ஒரு உருவம் நடந்து செல்வதைப் போல தோன்றத்தை ஏற்படுத்தலாம். அந்த இடத்தில் சூழ்ந்திருக்கும் இருள் மற்றும் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் இருந்து தோன்றும் ஒளி இதுமாதிரி ஒரு பிம்பத்தை ஏற்படுத்த உதவியாய் இருந்திருக்கலாம்.

சரி, அப்படியானால் அதைத் தேடி வந்த குழுவினர் கண்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை? காரணம் அன்று மேகம் அவ்விடத்தில் இல்லாது இருந்திருக்கலாம். அல்லது அவர்கள் நடந்து சென்றதாலோ அல்லது ஓர் இடத்தில் இருந்து கண்காணித்ததாலோ கார் முகப்பு விளக்கின் ஒளி, அது சீறிப்பாயும் வேகம்,
பிம்பம் போன்று ஒன்று உருவாகும் சூழல் பொருந்தாது போயிருக்கலாம். அல்லது காற்று இல்லாது இருந்திருக்கலாம். இப்படி பல காரணங்களால் அந்த குழுவுக்கு அது மாதிரி ஒன்று அன்று நிகழாதும் போயிருக்கலாம். தூரத்தில் அடர்த்தியாக செல்லும் மேகம் கூட சில சமயங்களில் மலையில் நாம் நின்றிருந்தால் அது நம்மைக் கடந்து செல்லுவதைப் பார்க்கலாம். ஆனால் நம்மைக்கடந்து செல்லும்போது உருவம் எதுவும் தெரியாது.

இப்படியாகத்தான் பேய், பிசாசு போன்றவைகளெல்லாம் இருப்பதாக சூழ்நில்களால் நம்பப் பட்டிருக்கிறதே ஓழிய உண்மையில் பேய் பிசாசுகள் எல்லாம் இருக்கிறது என்ற நம்பிக்கை என்னைப் பொருத்த மட்டில் இல்லை. நம் மனம் பலவீனம் பட்டிருக்கும்போது ஒரு திடுக்கிட்ட சூழ்நிலயில் நம் மூளை செயலாற்ற மறுக்கும் சிலநொடிகள்தான் இவ்வாறு நம்பத் தோன்றுகின்றது.  உதாரணத்துக்கு இரவு நேரம் மங்கலான வெளிச்சமுள்ள ஓரிடத்தில் ஒரு கயிறு கிடக்கிறது. அக்கயிறு வளைந்து பாம்புபோல் கிடக்கிறது. அதேசமயத்தில் இலேசாக காற்றடிக்க அது பாம்பு ஊர்ந்து செல்வதுபோல் நகர்கிறது. அந்த ஒரு சில நொடிகள் அதை பாம்பென்று நினைத்து பதறிவிடுகிறோம் அல்லவா.

அந்த உணர்வுதான். அச்சமயம் அது கயிறா பாம்பா என்று யோசிக்க நம் மனம் மறத்துவிடுகிறது. இதே சூழல்தான் பேய் பிசாசு என்று உணரும்போதும் ஏற்படுகிறது. மாறாக அது உண்மைதானா என்று யோசிக்க முடியாது மயங்கி விழுவதோ அல்லது தப்பித்தோம் பிழத்தோம் என்று ஓடுவதோதான் நடக்கிறது. இதுவரை நான் கூறிய கருத்துக்கள் எனக்குத் தெரிந்த நானறிந்த அனுபவங்களின் அடிப்படையில் கூறினேன். இத்தோடு பேய்பற்றிக் கூற என்னிடம் ஏதும் இல்லாததால் என்னிடமிருந்தும் பேயிடமிருந்தும் உங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button