கட்டுரைகள்

தமிழனாக எனது ஏக்கம்!…. ( கட்டுரை ) … சங்கர சுப்பிரமணியன்.

இக்கட்டுரையை எழுதுவதன் நோக்கம் நாம் ஒன்றைப்பற்றி கேள்விப்படும்போது அதுபற்றிய எண்ணமேற்படுவது இயற்கை. சிலர் அதை பொது வெளியில் வெளிப்படுத்துவார்கள். சிலர் நமக்கு ஏன் வம்பு என்று இருந்து விடுவார்கள். ஏனென்றால் நாம் தெரிந்தோ தெரியாமலோ ஒரு கருத்தை சொல்லி விடுகிறோம். ஆனால் அக்கருத்தை உள் வாங்குபவர்கள் வெவ்வேறு மாதிரி. எந்த ஒரு கருத்துக்கும் எதிர் கருத்து இருக்கும். ஒரு பெரிய தேசிய இனத்தில் பலர் பலவிதமாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவார்கள்.

இதில் இவர் யார் கருத்துக்கூற. எங்களுக்கு எல்லாம் தெரியும். இவர்கள் சொல்லி நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்ல என்று ஒருவர் சொன்னால் அது ஏற்கக்கூடியதே. அதில் தவறொன்றுமில்லை. ஏனெனில் அது அவர் கருத்து. அப்படி கருத்து கூறவதே தவறு எனில் அப்புறம் என்ன பெரிய தேசிய இனம்? அவர் சொல்லக்கூடாது இவர் சொல்லக்கூடாது என்பதுமாறி அப்புறம்
அப்பகுதிக்காரன் கருத்து சொல்லப்கூடாது இப்பகுதிக்காரன் கருத்து சொல்லக்கூடாது என்றாகி கடைசியில் அந்த கிராமத்துக்காரன் சொல்லக்கூடாது இந்த கிராமத்துக்காரன் சொல்லப்கூடாது எனக்குறுகி பெரியதேசிய இனமென்ற சொல்லுக்கே நாளடைவில் பொருளற்றுப் போய்விடும்.

நான் சொல்லப்போகும் இக்கருத்து நான் என்னை ஒரு பெரிய தேசிய இனத்துக்கு சொந்தக்காரன் என்பதுவும் அது என்னுள் ஏற்படுத்திய தாக்கமே தவிர இக்கருத்தை கூறுவதால் தனிப்பட்ட முறையில் எனக்கு எவ்வித ஆதாயமுமில்லை என்பதை வலியுறுத்துகிறேன். கடந்த சனிக்கிழமை (15/08/20) அன்று ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினரால் “போருக்கு முன்பும் பின்பும்”  என்ற இணையவழி காணொளி அரங்கு நடந்தது. அதில் எழுத்தாளர் ஜே. கே அவர்கள் “கேட்பாபுலவு” என்ற நூல் பற்றி கருத்ததை பதிவு செய்தார்கள்.

அப்பகுதியைப் பற்றிக் குறிப்பிடுகையில் அது ஐநூறு ஏக்கர் பரப்பளவுள்ள தமிழர் நிலப்பகுதி என்று குறிப்பிட்டார். அந்த நிலத்தின தன்மையைப்பற்றி குறிப்பிடும்போது நாலுபேர் சேர்ந்து நிலத்தை கிண்டினால்கூட நீர் வந்துவிடும் என்றும் நூறு கிலோமீட்டர் தூரம் சென்றால் கடலில் மீன் பிடிக்கலாம் என்றார். அப்படிப்பட்ட விவசாயத்துக்கும் மீன்பிடித் தொழிலுக்கும் ஏற்ற தமிழர் வாழ்ந்த பாரம்பரிய நிலம் ஈழ இறுதிப்போரின் பின்
அங்கிருந்த தமிழர் அகற்றப்பட்டதால்
இராணுவத்தினர் வசம் இருப்பதாகத் தெரிவித்தார்.

அந்த இடத்தில் மீள்குடியிருப்பின்போது ஐம்பது ஏக்கர் நிலப்பரப்பே தமிழருக்கு வழங்கப்பட்டதாகவும் எஞ்சியோரை சற்று தள்ளி எந்தவசதியுமற்ற ஐம்பது அடி தோண்டினலும் நீர் கிடைக்காத பகுதியில் குடியமர்த்தப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்தது. கேப்பாபுலவில் முழுஅளவில் மீள்குடியமர்த்த போராட்டம் நடந்து வருவதாகவும் தெரிவித்தார். அப்போது அங்கே ஒரு கேள்வி எழுந்தது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஏற்பட்ட பேரெழுச்சியும் அதற்கு உலகத்தமிழர் அனைவரும் தந்த வரவேற்பும் அதனால் கிடைத்த பெருவெற்றி பற்றியும் கூறினார்கள். நானும் அவ்விடத்தில் ஒரு கேள்வியை வைத்தேன். கேப்பாபுலவு போராட்டத்துக்கு இலங்கையில் தமிழர் வாழக்கூடிய கிழக்கு இலங்கை மற்றும் மத்திய இலங்கையில் இப்போராட்டம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது? எவ்வளவு தூரத்துக்கு ஆதரவு கிடைத்தது என்பதே அக்கேள்வி.

என் கேள்விக்கு பதிலளித்த திரு. ஜே.  கே. அவர்கள் இலங்கையில் மற்ற தமிழர் வாழும் பகுதிகளில் இதற்கு வரவேற்பு இருந்ததாகவும் மற்றும் சில இடங்களில்
சிங்களவர்களுக்கு மத்தியிலும் ஆதரவு இருந்ததாகவும் குறிப்பிட்டார். எனக்கு என்னவோ உலகத்தமிழர் மத்தியில் பேரெழுச்சியை ஏற்படுத்த தவறிவிட்டதோ அப்படி ஏற்பட்டுருந்தால் குறைந்தபட்சம் பாதியளவு நிலத்தையாவது
மீட்டிருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இதில் எனது அபிப்பிராயம் எந்த அளவுக்கு சரி என்று எனக்கு தெரியாது. உலகத்தமிழர் எல்லோரும் ஒன்றாக இணைந்து ஒரு பேரினமாகச் செயல் பட்டால்தான் நமக்கு ஓரளவு பலன் கிடைக்கும்.

ஜல்லிக்கட்டின் வெற்றிக்கு உலகத் தமிழர் ஒன்றுபட்டு ஒருபேரினமாக உணர்வினை வெளிப்படுத்தியதே காரணம் என எண்ணுகிறேன். நமக்குள் கருத்து வேற்றுமைகள் இருக்கலாம் ஆனால் முடிவு எப்படியிருப்பினும் இனத்திற்காக குரல் கொடுக்க நம் இனம்தான் முன்வரும். வேறு எந்த இனமும் இரக்கம் காட்டுமேயொழிய முன்வராது. எப்போதோ சில சுயநலவாதிகளால் மறக்கமுடியாத கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதற்கு பலவேறு காரணங்கள் உலக அரசியலில் நிலவியிருக்கலாம். அதையே எண்ணி பிரிந்து நின்றால் ஒரு தேசிய பேரினம் சிதறுண்டுபோகும். அதனால் இழப்பு நமக்கேயன்றி வேறு எந்த வகையிலும் நன்மை உண்டாகாது என்பது எனது அபிப்பிராயம் மட்டுமே. நான் சொல்வது சரியா தவறா என்பதை தமிழ்சார்ந்த நல்லுலகம்தான் தீர்மானிக்க வேண்டும். கருத்து வேறுபட்டாலும் இனத்தால் ஒன்று படுவோம்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button