கட்டுரைகள்

சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்!…  விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!!….  தொடர் – 04….. சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

முன்பே ஏற்பாடு செய்த வாகனத்தை ரத்து செய்து விமான நிலையத்தில் வாடகை வாகனத்தை பிடித்ததால் பத்தாயிரம் யென் அதிகம் கொடுக்க வேண்டியிருந்தது. விமான நிலயத்திலிருந்து ஐம்பது நிமிடப் பயணத்துக்குப் பின் தங்கும் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தோம். பன்னிரண்டாவது மாடியில் நாங்கள் தங்கும் அறை இருந்தது. மாலை ஆறு மணி இருக்கும்.

ஓட்டலின் அருகிலேயே சாகாய்சூஸி ஹொன்மாச்சி சுரங்கப்பாதை ரயில் நிலையமும் பத்துநிமிட நடை தூரத்தில் ஹொம்மாச்சி ரயில் நிலையமும் இருப்பதை ஓட்டலை பதிவு செய்யுமுன்பே தெரிந்து வைத்திருந்தேன். தவிர அருகிலேயே செவன்-லெவன் மற்றும் பேமிலி மார்ட் இருப்பதையும் உறுதி செய்தபடியே ஒட்டலுக்கு திரும்பினோம்.

ஜப்பானியர்கள் அதிகமாக தொடர் வண்டியைத்தான் பயன் படுத்துகிறார்கள. ஒரு தொடர்வண்டியை விட்டால் அடுத்தது என்று தொடர்ந்து வண்டிகள் வந்து கொண்டிருப்பதாலும் நேரம் தவறாமையும் காரணம் என்று நினைக்கிறது. உச்ச நேரங்களில் தொடர்வண்டிகள் நிரம்பி வழிவதுடன் அடுத்தடுத்து வந்தகொண்டே இருக்கின்றன.

ரயில் வரும் நேரத்தை வைத்து கடிகார முள்ளை ஜப்பானில் திருப்பி வைத்துக் கொள்ளலாம் என்பதை கேள்விப்பட்டிருந்த நான் நேரில் உணர்ந்தேன். மறுநாள் கியோட்டோ போக முடிவெடுத்திருந்தோம். கியோட்டோ நகரம் ஒருகாலத்தில் ஜப்பானின் தலைநகராக இருந்திருக்கிறது. ஜப்பான் நகரங்களில் கியோட்டோ ஒன்பதாவது பெரிய நகரமாகும்.

நாங்கள் தங்கிய ஒசாகா ஜப்பானின் மூன்றாவது பெரிய நகரமாகும். கியோட்டோ செல்லக் காரணம் ப்யூசிமி இனாரி டய்ஷா என்ற புகழ்பெற்ற கோவில்தான். இக்கோவில்
நெல் அறுவடை, வியாபாரம் மற்றும் வளமான வாழ்க்கை போன்றவற்றில் முன்னேற்றம் காண வேண்டிக் கொள்ளும் இடமாகும். இருப்பினும்
இக்கோவில் நெல் அறுவடைக்கே முன்னுரிமை கொடுத்து வணங்கப்பட்டது.

பின் தொழில் மற்றும் வாழ்வின் முன்னேற்றத்துக்காகவும் வேண்டும் இடமாக மாறியது. இவ்வாறு வேண்டியவர்களின் வேண்டுதல் நிறைவேறியதும் தங்களது காணிக்கையை கொடுக்கிறார்கள். நாம் இங்கு வைரக்கிரீடம், தங்கவேல், வைரவாள், எடைக்கு எடை பொருள் கொடுப்பதுபோல் அவர்களும் கொடுக்கிறார்கள். என்ன மாதிரி காணிக்கை தெரியுமா?

காணிக்கையை தெரிந்து கொள்ளும் முன் கோவிலைப் பற்றி தெரிந்து கொள்வோம். ப்யூசிமி என்றால் ஒரு குறிப்பிட்ட பகுதியின் பெயர். திருவேற்காடு மாரியம்மன், மதுரை மீனாட்சி, பத்துமலை முருகன் மற்றும் கதிர்காமக் கந்தன் என்றில்லையா? அதுபோல் ப்யூசிமி இனாரி. இனாரி என்றால் கடவுள். டய்ஷா என்றால் கோவில் மட்டுமல்ல அல்ல. அது பெரியகோவில். தஞ்சை பெரிய கோவில் என்கிறோமே அதைப் போன்று புகழ்மிக்க பெரிய கோவில்.

எல்லாம் சரி, கடவுள் என்றால் ஆண் கடவுளா? பெண் கடவுளா? ஜப்பானிய ஷிண்டோ மத முறைப்படி ஆணாகவோ பெண்ணாகவோ அல்லது இருபாலினத் தன்மை கொண்டதாகவும் இருக்கலாம். சில சமயங்களில் இதை நம்பிக்கையுடையோர் கைவசமும் விடலாம் என்று சொல்லப்படுகிறது. நாமும் அப்படித்தானே. பார்வதி என்றால் பெண் தெய்வம் சிவன் என்றால் ஆண் தெய்வம்.

மாதொரு பாகன் என்றால் ஆணும் பெண்ணும் இணைந்ததுதானே. தமிழுக்கும் ஜப்பான் மொழிக்கும் உள்ள தொடர்பு இப்போது உங்களுக்குப் புரியும். இன்னும் இதுபோன்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆரம்ப காலத்தில் நமது கொற்றவை வழிபாட்டு முறையைப் போன்று இனாரி என்றால் பெண் வழிபாடாகவே இருந்திருக்கிறது. பின் காலப்போக்கில் பல சார்பாண்மை கொண்டவைகளாக மாறிவிட்டன.

பொதுவாக உணவு உற்பத்தி செய்யும் விவசாயத்துக்கு இளம்பெண் தெய்வமாகவும் நெல்லுடன் கூடிய வயதான மனிதராகவும் அல்லது இருபாலினத் தன்மை கொண்டவராகவும் சித்தரிக்கப் படுகிறார்கள்.

நமக்கு மழை கொடுக்கும் மாரியம்மன் இல்லையா? உணவைக் கொடுக்கும் நெல்லை மழை நீரில் இருந்து காத்த நெல்லையப்பர் இல்லையா? இதையும் தொடர்புக்கு சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

பியூஷிமா இனாரியில் முதன்மைக்கடவுளாக இருப்பது பெண் ஆகும். நமது கோவில்களைப் போலவே அங்கும் பல கடவுளர் குடி கொண்டுள்ளனர். முதன்மைக் கடவுளாக இளம்பெண் நெற்கதிர் கட்டுடன் இருப்பாள். நமது காமாட்சி அம்மன் கையில் கரும்பு இருக்கிறதல்லவா? அதைப்போல இதை எடுத்துக் கொள்ளலாம்.

பூமி மற்றும் வழிகாட்டுதலுக்கு ஒரு ஆண் கடவுள் இருக்கிறார். வாய்க்குள்ளே பிரபஞ்சத்தைக் காட்டியவராகவும் கடலுக்குள் ஒளித்து வைத்திருந்த பூமியை மீட்டுவந்தவராகவும் நமக்கு சொல்லப்படும் கடவுள் போல் இவரை வைத்துக் கொள்ளலாம். கல்விக்கு சரஸ்வதி பெண் கடவுள் இருப்பதுபோல் இங்கு திறமை மற்றும் பேச்சத் தொடர்புக்கு ஒரு பெண் கடவுள் இருக்கிறார்.

மேலும் நமக்கு வருணன் என்று ஒருவர் இருப்பதுபோல் இவர்களுக்கும் காலநிலையை விவரமாக கணக்கிடல் சம்பந்தமான இரு ஆண் துணைக்கடவுளர் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் பயிர்களை பாதுகாக்கவும் மற்றும் அறுவடைக்கு தயார் செய்யவும் வேண்டிய கடவுள். மற்றவர் நான்கு திசைகள் மற்றும் நான்கு காலநிலைகளை கண்காணிப்பவர். இவரால் விவசாயம் ஆண்டு முழுவதும் சீராக நடக்க உதவியாக இருக்கிறதாம்.

இப்படியான ஐந்து கடவுளரும் மலை அடிவாரத்தில் ஒன்றாகவும் மலைமேல் ஏறிச் செல்லும் வழியில் தனித்தனியாக இருக்கிறார்கள். ஷிண்டோ முறைப்படி மலையையே புனிமான இடமாக கருதுகின்றனர். நமநு சமரிமலை, அண்ணாமலை, மற்றும் திருமலையைச் சொல்லலாம். அடிவாரம் தினந்தோறும் மக்கள் வழிபாட்டுக்கும் காணிக்கை செலுத்தவும் வசதியாக உள்ளது.

மலைமேல் இருந்துதான் இந்த கடவுளர் இறங்கி கீழே இறங்கி வந்திருக்கிறார்கள். ஆதலால் மலைமேல் ஏறுவதை புனிதப் பயணமாக கருதுகிறார்கள். மலைமேல் ஏறுவதற்காக பக்தர்கள் ஆயிரக்கணக்கில் தங்கள் வசதிக்கு ஏற்ப வழியை காணிக்கையாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இம்மலையில் ஏறுவதற்கு இரண்டிலிருந்த மூன்று மணி நேரமாகும்.

மிகவும் நீண்ட இந்த மலைப்பாதை பலவளைவுகளுடன் ஆயிரக் கணக்கான படிகளைக் கொண்டது. இந்த மலையேறும் பயணம் சவாலக இருப்பதால் மிகவும் எளிதானதல்ல. ஆதலால் பெரும்பாலான உல்லாசப் பயணிகள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சென்று திரும்பிவிடுவார்கள். நமது பிள்ளையாரே உலகைச் சுற்றி வருவதைவிட அம்மை அப்பனைச் சுற்றவில்லையா? ஆதலால் எல்லா இடங்களிலும் நோகாமல் நோம்பிருக்க வழியுண்டு.

இப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை மலை மீது ஏற வழிப்பாதையமைத்து காணிக்கையாக கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னேன் அல்லவா? அதைப் பற்றிப் பார்ப்போம். அலங்கார வளைவு மற்றும் தோரணவாயில் போன்று தமிழில் கூறப்படும் சொல்போன்றதே இந்ந டோரி கேட். இது ஆலயத்தின் முன் நமது கோவில்களில் காணப்படும் கோபுரவாசலை ஒத்தது என்றாலும் வடிவ அமைப்பில் மாறுபட்டது.

(தொடரும்…)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button