இலங்கை

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுமா?; ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து “முழுநாடும் ஒன்றாக” தேசிய செயலணியில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இந்த செயலணி கூடிய போதே இது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. .

போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது தனிப்பட்ட தொடர்புகளையும் தாண்டி முழுப் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதோடு, அது மேலும் விரிவடைந்து வருவதைக் கருத்தில் கொண்டே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்படும் வரம்பற்ற செல்வத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள குற்றவியல் சூழல், தற்போது தேசிய பொருளாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் சமூக ஒழுக்க அமைப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்கள் குறித்து அச்சப்படும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக கடுமையான சட்டங்களை அமல்படுத்துவதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இந்த கலந்துரையாடலில் முழு சமூகத்தையும் சீரழித்து, நாட்டின் எதிர்கால சந்ததியை இரையாக்கிக் கொண்டிருக்கும் இந்த நச்சுப் போதைப்பொருள் பேரழிவை வேரறுக்க நாட்டில் நடைமுறைச் செயல்பாடுகளையும் விரைவான கருத்தியல் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள’ள ஜனாதிபதி, அதற்கு மதத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தீவிர பங்களிப்பை அரசு எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேசிய பேரழிவின் ஆழத்தைப் புரிந்து கொண்டு, நிறுவன அமைப்பிற்குள் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் அங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்குதல் தொடர்பான சட்டத் திருத்தங்கள் ஏற்கனவே தயாரித்து முடிக்கப்படும் இறுதிப் கட்டத்தில் உள்ளதோடு, அவை விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வழக்குகள் தாமதமாவதற்கு காரணமான அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வெளியிடும் நடைமுறை கணிசமாக துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 6,414 அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச பகுப்பாய்வாளர் அறிக்கை தாமதமாவதால் சிறையிலுள்ள நபர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக, கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவுக்கு ஏற்ப (5 கிராமிற்கு குறைவான, 10 கிராமிற்கு குறைவான என) தெளிவான தரவு வகைப்பாட்டை சமர்ப்பிக்குமாறும், அரச பகுப்பாய்வாளர் திணைக்களம், பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அறிக்கை கிடைத்தவுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முறைமை ஒன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் கொள்ளளவை உயர்த்தவும் அதன் வசதிகளை விரிவுபடுத்தவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வினவயுள்ள ஜனாதிபதி, அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெறும் பணிகளுக்கு கடற்படையின் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதேவேளை பாதுகாப்பு கேமரா அமைப்புகளைப் பொருத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button