கட்டுரைகள்

விடிதல் வரும்!… ( கட்டுரை )… சங்கர சுப்பிரமணியன்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு இடர் உலகில் வரும். இது ஏதாவதொரு வகையில் நடந்து கொண்டிருக்கவே செய்கிறது. மக்கள் இதையெல்லாம் தாண்டி மீண்டு வாழ்ந்திருக்கிறார்கள். உதாரணமாக உலகப்போர், ஜப்பானில் அணுக்குண்டு வீச்சால் ஏற்பட்ட பேரழிவு, சுனாமி இப்படி எத்தனை எத்தனையோ.
அப்படிப்பட்ட காலத்திலெல்லாம் மக்கள் வாழாமல் முடங்கிவிடவில்லை. அதுபோல்தான் இந்த கொரோனா காலமும். அதற்காக ஒடிந்துபோய் மூலையில் உட்கார்ந்து புலம்பவேண்டியதில்லை.

இந்த கொரோனா வேறுபாடின்றி பணக்காரர் ஏழை, படித்தவன் படிக்காதவன், நகரப்புறத்தில் வாழ்பவன் கிராமத்தில் வாழ்பவன் என எல்லோருக்கும் வருகிறது.
ஆனால் பாதிப்படைபவர்கள் தினக்கூலிகள்தான். இந்த தினக்கூலிகளையும் வளர்ந்த நாடுகளில் ஓரளவு பாதுகாக்கிறார்கள். வளரும் நாடுகளிலும் பின் தங்கியநாடுகளிலும் அரசு செய்யும் உதவிகள் மக்களுக்கு சரிவர சென்றடையாததாலும் அல்லது இந்த சூழலை அரசு சரிவர கையாளாததாலும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

பொருளாதாரம் வளமிக்க முன்னேறிய நாடுகளில் வீட்டில் அடைந்து கிடைப்பதைத் தவிர பின்தங்கிய நாடுகளில் அன்றாட தேவையான உணவு போன்றவைகளுக்கு அல்லல்படும் அவல நிலையில்லை. கடும்போர் நடைபெற்று குண்டுமழை பொழியும்போது உயிரோடிருக்க வேண்டுமானால் வீட்டில் அடைபட்டு கிடந்தே ஆகவேண்டும். அதேபோல்தான் இதுவும். வீட்டில் அடைபட்டிருப்பது எப்படியோ இருக்கிறது என்று அங்கலாய்த்தால் குண்டடிபட்டு சாக வேண்டியதுதான்.

பெரிய பெரிய வியாபார நிறவனங்கள் எல்லாம் இழப்பை சந்தித்து வருகிறது. வழிபடும் இடங்கள் எல்லாம் மூடப்பட்டு வருவாரின்றி உள்ளது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் எல்லாம் மூடப்பட்டுள்ளன. இப்படி எல்லா இடங்களிலும் இடர்பாடுகள் உள்ளபோது இலக்கியவாதிகள் வேறு ஒருபுறம் இத்தோடு இலக்கியவாழ்வே முடிந்து போவதுபோல் கவலையடையத் தொடங்கி விட்டார்கள். இப்போது இலக்கிய விழாக்களும் நிகழ்வுகளும் நடக்காவிட்டால்
இலக்கியமோ தமிழ் நிகழ்வுகளோ இனிமேல் நடைபெறாமல் நின்றுபோய்விடாது.

தமிழர் வாழ்வில் மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டுவரை இருண்டகாலம் என்று ஒன்றிருந்ததை வரலாற்றின் மூலம் அறிந்துள்ளோம். அதையெல்லாம் கடந்து தமிழும் தமிழ் இலக்கியமும் செழித்து வாழ்ந்துகொண்டு இருக்கத்தான் செய்கிறது. இந்த கொரோனாவில் தமிழ் அழிந்து விடுவதுபோல் இணையவழியில் நிகழ்வுகளை நடத்த ஆரம்பித்துள்ளார்கள். யாரோ ஒருவர் எங்கோ பொழுது போகவேண்டுமே என்று ஆரம்பிக்க அதுவே
இப்போது அப்படி நடத்துவதை ஏதோ கட்டாயம் என்பதுபோல் ஆக்கிவிட்டார்கள்.

எந்த ஒரு நிகழ்வும் அந்தந்த முறைப்படி நடந்தால் மட்டுமே உயிரோட்டமாக இருக்கும் என்பது என் கணிப்பு. இல்லாவிட்டால் இலக்கிய நிகழ்வுகள் எல்லாம் யூடியூப் காணொலி மாதிரி ஆகிவிடும். வருங்காலத்தில் மண்டபம் ஒழுங்கு செய்தல், உணவுவழங்க ஏற்பாடு, சிறப்பு விருந்தினரை தேர்வு செய்வது போன்றவற்றால் ஏற்படும் செயல்களில் இருந்து விடுபட தொலைக்காட்சிகளில் பட்டிமன்றம் நடப்பதுபோல் நடத்த வழிவகுக்கும். இது என் தனிப்பட்ட கருத்து.

பொழது போக்க எத்தனையோ வழிகள்
இருக்கிறது. இதுநாள்வரை இல்லாவிட்டாலும் இந்த காலகட்டத்திலாவது குடும்பத்தினருக்கு
வேண்டிய உதவிகளைச் செய்யலாம். குழந்தைகளோடு ஆடிமகிழலாம். அவர்களுக்கு கற்றுத் தரலாம். நூல்கள் வாசிக்கலாம். எழுதுபவர்கள் எழுதலாம். நல்ல திரைப்படங்களைப் பார்க்கலாம். யூடியூப் போன்று வலைத்தளங்களில்
அறிவுசார்ந்தவற்றையும் பொழுதைப் போக்கவும் ஏகப்பட்டவைகள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை எல்லாம் விரும்பாதவர்கள் அல்லது இவற்றில் எல்லாம் பொழுதைப் போக்கியும் பொழுது போகாவிட்டால் இணையவழியில் நிகழ்விகளை நடத்தி பொழுதுபோக்கலாம்.

எனவே பொழுது போகாது திணறுபவர்களுக்கு இந்த இணையவழி நிகழ்வுகள் ஒரு வடிகாலாய் இருக்கும் என எண்ணுகிறேன். மற்றவர்கள் காலம் மாறும் கொரோனா மறையும் விடிதல் வரும் என்று நம்பிக்கையுடன் இருப்போம்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button