கட்டுரைகள்
சாமானியனின் சரடு…..சரடு…9…. ( கட்டுரை )……சங்கர சுப்பிரமணியன்.

சரி, ஒரு உண்மையான சம்பவம் ஒன்றையும் சொல்லி உங்களை கொஞ்சம் குழப்பி நானும் மீளமுடியா குழப்பத்தில் இருந்ததைப் பற்றி சொல்கிறேன். எனக்கு திருமண வயது வந்தது. எனது அம்மாவின் பெரியப்பா மகன்களுக்கு பெண் பிள்ளைகள் நிறைய இருந்தனர். எல்லாம் முறைப் பெண்கள். உறவுகளிலும் நிறைய பெண்கள் இருந்தனர். ஆனால் என் அம்மாவுக்கு உறவுகளிடம் பெண் எடுக்க கொஞ்சமும் விருப்பமில்லை. காரணம் நாங்கள்
நன்றாக வாழ்ந்த காலத்தில் அவர்கள் காட்டிய ஆசையும் பாசமும் நாங்கள் வறுமையில் வாடி ஆதரவின்றி நின்றபோது பாராமுகமாய் இருந்ததும் ஆறாத புண்ணாக இருந்தது. பேச்சுவார்த்தை மட்டும் போதும் பெண் எடுத்து உறவுகளைப் புதுப்பிக்க வேண்டாம் என்று தீர்மானமாக இருந்தார்கள்.
எனக்கு இப்போது பெரிய மரியாதை. நான் என்னவோ பெங்களூரில்தான் இருந்தேன். ஆனால் எங்க ஊரில் நான் சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற ஊரில் இருப்பதுபோல் எல்லோருக்கும் நினைப்பு. அதனாலேயே நான் எந்த மாமா பெண்ணையும் சுயம்வரம் முறைப்படி தேர்வுசெய்யுமளவுக்கு எனக்கு உரிமையை கொடுத்தார்கள். நான் எந்த அளவுக்கு அவமானமும் வறுமையையும் அனுபவித்தானோ அதேமண்ணில் தலைநிமிர்ந்து பெருமையுடன் நின்றேன். ஆனால் நான் என் தாயை மதிக்காதவர்களை, ஆதரவளிக்காதவர்களை என் தாயை மீறி ஏற்றுக்கொள்ள மனமில்லை. எனவே உறவுக்கு அப்பால் திருமணம் செய்ய முடிவு செய்தோம்.
என்னை பெரிய புரட்சியாளன் என்று அப்போது உறவுகளெல்லாம் சொல்ல ஆரம்பித்தார்கள். எங்கள் உறவுகள் எல்லாம் குண்டுச்சட்டியிலேயே குதிரை ஓட்டுபவர்கள். ஆதாவது திருமணம் என்றால் பெண் எடுப்பது கொடுப்பது எல்லாம் திருநெல்வேலி மாவட்டத்துக்குள்தான். என் தாய் உறவில் பெண் எடுக்க வேண்டாம் என்றதால் மதுரையில் பெண்பார்க்க விரும்பினேன். நான் பெங்களூரில் படித்துக் கொண்டிருந்தபோது என் குடும்பத்துக்கு ஆதரவளித்த தென்காசியில் உள்ள என் பெரியம்மா மகனான அண்ணனிடம் பெண்பார்க்கும் பொருப்பை என் தாய் கொடுத்தார்கள்.
என்னடா இவன் பேய்க்கதையைத்தானே சொல்லி வந்தான். இப்ப பெண்பார்க்கும் கதையை ஆரம்பித்து விட்டானே என்று எண்ணாதீர்கள். அதற்குத்தான் வந்து கொண்டிருக்கிறேன். என் அண்ணாவுக்கு தெரிந்தவர்கள் மூலம் கோவில்பட்டியில்
இருந்து ஒரு இடம் வந்தது. முதலில் என் அண்ணா மட்டும் பெண்வீட்டுக்கு சென்று அறிந்து வருவதாக சென்றிருக்கிறார். பெண்ணின் தந்தை மிகவும் பிரபலமானவர். மிகவும் வசதி படைத்தவர். என் அண்ணாவும் சென்று முறைப்படி பெண் கேட்டிருக்கிறார். அவரும் நல்லபடி பேசியிருக்கிறார்.
அவர் பெண்ணைப்பற்றி பேசியதைக் காட்டிலும் தன் செல்வாக்கு வருமானம் அவரது வீடு என்று தன்னைப் பற்றியே சுயவிளம்பரம் செயதிருக்கிறார். கடைசியாக தன்னிடமுள்ள இரண்டு வெளிநாட்டு நாய்களைப் பற்றியும் அதற்கு மாதம் ஆகும் செலவைப் பற்றியும் சொல்லவே என் அண்ணா சரி வருகிறேன் தங்களிடம் பெண் இருப்பதாகவும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கேள்விப்பட்டு வந்தேன். இன்னொரு நாள் பெண்களையும் அழைத்து வந்து பெண் கேட்கிறேன் என்று சொல்லி கிளம்பினார். அதன்பின்னரே அவர்
விபரம் கேட்டிருக்கிறார்.
என்னைப்பற்றிய விபரங்களைச் சொல்லவும் பெண்ணின் போட்டோவும் ஜாதகமும் தருகிறேன் என்று அவர் சொல்லியும் நேரில் பெண்ணைப் பார்த்ததும் ஜாதகம் எல்லாம் பார்க்கலாம் என்று சொல்லி போட்டோ, ஜாதகம் கூட வாங்காமல் வந்தவிட்டார். அதன்பின் பெண்பார்க்க கோவில்பட்டி செல்லவேயில்லை. கேட்டதற்கு மனிதர்கள் எவ்வளவுதான் செல்வாக்குள்ளவர்களாய் இருந்தாலும் ஆணவப்பேய், பணப்பேய் மட்டும் பிடித்திருக்ககூடாது. எவ்வளவு பெரிய செல்வந்தர்களாய் இருந்தாலும் அடக்கம் அவசியம் வேண்டும். நீ வறுமையின் பிடியிலிருந்து இப்போதுதான் மீண்டு நல்ல நிலையில் மகிழ்வுடன் இருக்கிறாய் அதனால் இந்த இடம் வேண்டாம் என்றார். அப்போது இப்படியும் பேய்கள் உள்ளன என்பதை அறிந்தேன்.
கடைசியாக என் வாழ்வில் நிகழ்ந்த நம்புவதற்கு தடையாகவும் மயிர்க்கூச்செரியும் நிகழ்வொன்றைக் கூறுகிறேன். பெண் பார்க்கும் படலம் தொடர்ந்தது. மதுரையில் ஒரு பெண்ணைப் பார்த்து விபரமாக கடிதம் எழுதியிருந்தார். நன்றாக படித்த பெண். பெண்ணின் தந்தை இந்தியன் ஏர்லைன்ஸில் பணிபுரிகிறார். கோவில்பட்டி மாதிரி இவர்கள் இல்லை. ஏர்லைன்ஸில் பணிபுரிந்தாலும் விமானத்தைப் பற்றி ஒருவார்தத்தை கூட பேசவில்லை. நானாகக் கேட்டபின்தான் ஆண்டுதோறும் குடும்பத்துடன் விமானத்தில் பல ஊர்கள் சென்று வருவார்களாம் என்று சொன்னார் என்றார் அண்ணா.
அதற்கு நான் அண்ணாவிடம் விமானத்தை நான் பக்கத்தில் கூட பார்க்கவில்லையே இந்த இடம் சரிப்படுமா என்று கேட்டேன். அதற்கு உன் போட்டோவைக் காண்பித்து உன்னைப்பற்றிய விபரம் எல்லாவற்றையும் சொன்னேன். அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. பெண்ணின் அப்பாவும் மிகவும் சிரமப்பட்டு முன்னேறியிருப்பதாய் சொன்னார். ஆதலால் நீயும் அம்மாவும் ஒருமுறை மதுரை வந்து பெண்ணைப் பாரத்துவிட்டு செல்லுங்கள் என்று விபரமாக கடிதம் எழுதியிருந்தார். எனக்கு வண்ண வண்ண கனவுகள் எல்லாம் வர
ஆரம்பித்தன.
மதுரைக்கு நானும் அம்மாவும் செல்ல டிக்கெட் எல்லாம் பதிவு செய்துவிட்டோம். இன்னும் ஒருவாரத்துக்குள் மதுரை செல்லப்போகிறோம். மதுரைக்கு பெண் பார்க்க வருவதாகவும் தெரிவித்து விட்டோம்.
“பூவரசும்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு” என்று பெண் வீட்டினரும் எங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போதுதான் “நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை” என்ற பாட்டும் இருக்கிறது என்று நினைவூட்டும்படி ஒன்று நிகழ்ந்தது.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()