கட்டுரைகள்

சாமானியனின் சரடு…..சரடு…7…. சங்கர சுப்பிரமணியன்.

நள்ளிரவும் வந்தது. அபிராமி பட்டருக்காவது வானில் சுடர் வந்தது. இங்கே அரும்பாடுபட்டு விடியவிடிய காத்திருந்தவர்களுக்கு பேய் ஒன்றுமே
வரவில்லை. அதன் பின் பேயை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் அந்த குழு சென்றது. ஆனால் அதன் பிறகும் அந்த பேயை பார்த்திருக்கிறார்களாம். விபத்துக்களும் உயிரிழப்புக்களும் நடக்கின்றன. வேறு மாநிலத்தில் இருந்து அந்த இடத்தில் அப்படியாக ஒரு சம்பவம் இருக்கிறது என்பதைப் பற்றி தெரியாமல் வருபவர்களுக்கு ஒன்றும் நடப்பது இல்லையே ஏன்? மனிதர்களைப்போல் பேயும் ஏமாற்று வேலைகளைக் கற்றுக் கொண்டதோ?

விடிய விடிய காத்திருந்தவர்களுக்கு காட்சி தராமல் பயந்தவர்களுக்கு மட்டும் பட்டென தோன்றுகிறதே? சிலரை பார்த்திருப்பீர்கள். சூழ்நிலையைப் பார்ப்பார்கள். அங்கு எல்லோரும் பயந்தவர்களாக இருந்தால் “ஆ”… “ஊ”… என்று வீரத்தைக் காட்டுவர்.
அங்கு கொஞ்சம் பலசாலிகளைப் பார்த்தால் அப்படியே அமைதியாகி
விடுவார்கள். மனிதனின் எச்சம் பேய் என்று சொல்கிறார்களே அதனால் பேயும்
அந்தமாதிரி நடக்கின்றனவோ என்னவோ?

பயந்தபேய்களும் இருக்கின்றன போல் தெரிகிறது. ஏனென்றால் அது பயப்படுபவர்கள் கண்களுக்கு மட்டும்தான் தெரிகிறது. அப்படியானால் என் தாத்தாவும் பயந்தவர்தானா? பயத்தைப் போக்கத்தான் அப்படி பயமில்லாமல் நடந்திருக்கிறாரா? அல்லது அவருக்கு விதிவிலக்கு இருக்குமா? சிலர் கண்களுக்கு மட்டும்தான் பேய் தெரியும் என்றும் சிலர் சொல்வார்கள்.
அதிலும் சில ராசிக்காரர்களுக்கு பேய் கண்டிப்பாகத் தெரியுமாம். சிலர் நாய்க்கும் பூனைக்கும் தெரியும் என்பார்கள். சிலர் நாய் பேயைப் பார்த்ததும் ஊளையிடும் என்பார்கள். இப்படியாக ஏதாவது ஒன்று இருக்கிறதா? இல்லையா? என்று சந்தேகம் இருக்குமிடத்தில் நம் மக்கள் தங்கள் விருப்பத்துக்கு கதை கட்டிவிடுவார்கள்.

இது கிட்டத்தட்ட “சைனீஸ் விஸ்பர்ஸ்” போல பல கற்பனையுடனும் முடிவில் வேறுவிதமக அமைவதும் உண்டு. கிராமப் பறங்களில் இருப்பவர்கள் பேயைப் பற்றி நிறையவே கதைவிடுவார்கள். பேயை நம் வயப்படுத்திவிட்டால் அதை நம் விருப்பத்துக்கு பணிபுரியுமாம். கண்ணுக்கு தெரியாத பேயை எப்படி வயப்படுத்துவது? அல்லது பேயை பார்க்கவே பயம் என்றால் எப்படி வயப்படுத்துவது? சிலவேளை பேயைப் பார்த்து பயப்படாதவர்கள் வயப்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன்.

நடிகர்கள் இரட்டை வேடம் போடுவதுமோல் பேய்களும் இரட்டை வேடம் போடுமாம்.
ஏனென்றால் பயப்படாதவர்களிடமும் பேய் வருமாம். அதுவும் பேய் பேசிக்கொண்டே வருமாம். அவர்களும் பேயும் பேசிக்கொண்டே வருவார்களாம். சில சமயம் பேசாமலும் கூட வருமாம். என் தாத்தாவும் ஒருவேளை இந்தவகையைச் சேர்ந்வராய் இருந்திருப்பாரோ? சரி, இன கட்டுரையோடு பயணிப்போம். சில மாட்டுவண்டி ஓட்டுபவர்களுடன் அவர்களைப் பின்தொடருமாம் பேய். அவர்களும் வழித்துணைக்கு அதனுடன் பேசிக்கொண்டே வருவார்களாம். ஊருக்கு அருகில் வரும்போது மறைந்துவிடுமாம்.

சில சமயம் வெற்றிலைபோட சுண்ணாம்பு கேட்கும். அப்படி கேட்டால் தூக்கிப் போட வேண்டும். தூக்கிப் போட்டால் இருட்டென்றாலும் கைதேர்ந்த கிக்கெட் பிளேயர் போல கேட்ச் பிடிக்குமாம்.
அதேபோல் அது சுண்ணாம்பு டப்பாவை திரும்ப கொடுக்கும்போது கைநீட்டி வாங்கக்கூடாது. கைநீட்டி வாங்கினால் அடித்துவிடுமாம். அது சுண்ணாம்பு டப்பாவைத் தூக்கிப் போடும்அல்லது வண்டியில் வைக்கும். கூட பேசிக்கொண்டு வந்தாலும் கவனமாக இருக்கவேண்டும். இந்த வம்பெல்லாம் வேண்டாம் என்பவர்கள் மாட்டை அடிக்கும் குச்சியின் முனையில் சுண்ணாம்பைத் தடவிக் கொடுப்பார்களாம் அது சுண்ணாம்பை எடுக்காதாம் அல்லது ஓடிவிடும். காரணம், தார்க்குச்சியின் முனையில்  வேகமாக ஓடுவதற்காக  மாட்டைக் குத்த ஆணி இருக்கும். இரும்பென்றால் பேய்க்கு பயமென்பதால் பேய் ஓடிவிடுமாம்.

இந்த இரும்புக்கு இன்னொரு கதையும் சொல்வார்கள். இறைச்சி என்றால் பேய்க்கு ரொம்ப பிடிக்கும். ஆதலால் இறைச்சியுடன் செல்லும்போது பேய் பின்தொடருமாம். அதனால் இறைச்சியுடன் செல்பவர்கள் அந்த இறைச்சியுடன் ஆணி போன்ற ஏதாவது ஒரு இரும்பைவைத்து எடுத்துச் சென்றால் பேய் வராதாம். இப்படி பேயுடன் பழக யூசர்ஸ் மேனுவல் மற்றும் டேம்ஸ் அண்ட் கண்டிஷன்கள் எல்லாம்உள்ளது. இப்படி எல்லாம் பேயுடன் குடும்பம் நடத்தியதுபோல் கதை கதையாகச் சொல்வார்கள் வயதில் பெரியவர்கள்.

இதை எல்லாம் உணர்ந்ததால்தான் “வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க” என்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாட்டே எழுதியிருக்கிறார். இந்தப் பாட்டைச்சொல்லி பேயாவது பூதமாவது என்று நாம் மறுத்தால் பாட்டாவது மண்ணாவது பேய் இருக்காத்தாம்ல செய்யுது. எனக்கும் பணம் கொடுத்தால் நானும் அதுமாதிரி ஆயிரம் பாட்டெழுதுவேன் என்பார்கள்.

நீ கடவுளைக்காட்டு நான் பேயைக் காட்டுகிறேன் என்பார்கள். அவர்களிடம் கடவுளை நம்மால் காட்டமுடியுமா? நாம் கோவிலைக் காட்டினால் அவர்கள் புளியமரத்தையும் வேப்பமரத்தையும் காட்டுவார்கள். “நாம்தான் உண்டென்றல் உண்டு இல்லை என்றால் அது இல்லை” என்று “உள்ளம் என்பது ஆமை அதில் பொய்மை என்பது ஊமை” என்பதுபோல் முடிவெடுக்க வேண்டும்.மாந்திரீகத்துக்கு பெயர்பெற்றது மலையாள மாந்திரீகம். எங்கள் ஊருக்கு அறுபது கிலோமீட்டர் தூரத்தில்தான் கேரளா உள்ளது. அதனால் மாந்திரீகத்தைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே கதைவிடுவார்கள்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button