சாமானியனின் சரடு…..சரடு…5 …. ( கட்டுரை )… சங்கர சுப்பிரமணியன்.

என் மனதில் அப்பியிருந்த சோகம் எனக்கு எந்தவித பயத்தையும் ஏற்படுத்தவில்லை. என்முன் எந்த பேயும் வந்து அச்சுறத்தவில்லை. சற்றுமுன்தான் பிரேதத்துக்கு நெருப்பூட்டி விட்டு சென்றிருக்க வேண்டும். பூமாலைகளையும்
உடைந்த மண்பாண்டத் துண்டுகளையும் பிணம் எரியும் தீ வெளிச்சத்தில் காணமுடிந்தது. வீடு வந்து சேர்ந்ததும் இருட்டில் எப்படி வந்தாய் என்று என் அம்மா கேட்டார்கள். நடந்ததை விபரமாய் சொன்னேன்.
ஏன் அப்படி வந்தாய்? கொஞ்சம் தாமதித்து யாருடனாவது சேர்ந்து வந்திருக்கலாமே என்றார்கள். அப்படியாவது பேயடித்து நான் செத்துப்போனால் உனக்கு ஒரு பாரம் குறைந்திருக்குமல்லவா என்று என் தாயிடம் சொன்னேன். என் தாய் என்னைக் கட்டிப் பிடித்து அழுதார்கள். அன்றுதான் எப்படியாவது
போராடி வாழ்க்கையில் ஒரு உன்னத நிலைக்கு வரவேண்டும் என்ற எண்ணம் அந்த சிறுவயதிலேயே என் மனதில் ஆழமாகப் பதிந்தது.
வாழ்வில் பெரிய சோகத்தையும் பெருத்த அவமானத்தையும் எதிர்கொள்பவர்கள் நிச்சயம் முன்னேறி விடுவார்கள் என்று சொல்லி கேள்விப்பட்டுள்ளேன். அது என்வரையில் நடந்திருக்கிறது. இல்லாவிட்டால் ஒரு குக்கிராமத்தில் பிறந்து பெரிய பொருளாதார பின்னணியோ பெரிதாக எந்த ஒரு கல்வியின் பின்பலமோ இல்லாமல் ஆஸ்திரேலியாவை உலக வரைபடத்தில் மட்டுமே பார்த்து விமானத்தை ஒரு குருவி அளவிலேயே அன்னாந்து வானத்தில் பார்த்து வளர்ந்த நான் இந்த அளவுக்கு வந்திருப்பதே மெகா லாட்டரியில் பம்பர் பரிசு கிடைத்ததைப் போன்றது.
நான் சிறுவனாக இருந்தபோது இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் பொற்கொல்லர்களின் வாழக்கையை தலைகீழாய் புரட்டிப் போட்டது. எத்தனையோ பொற்கொல்லர்கள் வாழவழியின்றி தற்கொலை செய்து கொண்டார்கள். பொற்கொல்லரான என் தந்தை நாலு பேருக்கு வேலைகொடுத்த நிலைமாறி அவருக்கே வேலை இல்லாது திணறினார்.
வாழ்க்கை மாறி வறுமை சூழ்ந்தது. நகைகள் எல்லாம் விற்கும் சூழ்நிலையும் வந்தது. கடைசியில் குடியிருக்கும் வீட்டின் மீதும் கடன் வாங்கும் நிலை வந்ததால் அந்த கவலையிலேயே என் தந்தை நோயுற்றார். அந்த சூழலில்தான் ஆதரவை நாடி என் தாய் வழித்தாத்தா வீட்டுக்கு வந்தோம். விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பார்கள். என் தாத்தா வீட்டுக்கு என் குடும்பம் சுமையானது. கழுதை தேய்ந்து கட்டெறும்பானதுபோல் எங்கள் தாத்தா வீட்டிலும் எங்களுக்கு மானமும் மரியாதையும் அந்த அளவே கிடைத்தது. இதை எல்லாம் பார்த்த என் தந்தையும் நோயிலிருந்து மீளாமலே மறைந்தார்.
அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது.
அது கையில் பணம் இல்லையென்றால் உற்றார் உறவினரிடம் பாசத்தையும் மரியாதை எதிர்பார்க்க முடியாது என்பதுதான். அதே சமயம் எல்லாம் இழந்த சூழலிலும் நமக்குஆதரவுக் கரம் நீட்டி நாம் முன்னேற உதவுபவர்களை நாம்
வாழ்வில் ஒருநாளும் மறக்ககூடாது. அப்படி எங்களுக்கு உதவியவர்கள்தான் எனது ஒன்றுவிட்ட பெரியம்மாவும் எனது பெரியப்பா மகனான அண்ணனும்தான். தடம் புரண்டுவிட்டது தடத்தை மாற்றி பேயோடு எழுத்தைத் தொடர்கிறேன்
எனது தாத்தா ஊரில் நான் படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் தெருவில்
திருமண வயதுள்ள ஒருவரை மோகினிப் பிசாசு பிடித்து இருந்ததாம். அவர் ஒரு சிலமாதங்களில் இறந்து போனார். அப்போது அவர் உயிரோடு இருந்தவரை மோகினிப்பிசாசு அவர் வீடுவரை இரவுநேரங்களில் வந்து போவதாக அவ்வூரில் பேசத்தொடங்கினார்கள். ஆதலால் இரவு நேரங்களில் ஒன்பது மணிக்குமேல் தெருவில் ஆட்கள் நடமாட்டத்தைப் பார்க்க முடியாது.
என் தாத்தா வீட்டில் மின்சாரம் கிடையாது. இரவு மண்ணெண்ணெய் விளக்கில்தான் படிக்கவேண்டும். விளக்கை ஒன்பது மணிக்கெல்லாம் அணைத்து விடுவார்கள். ஆதலால் நான் படிக்க வேண்டுமானால் இரண்டு தெருக்கள் சந்திக்கும் சந்தியில் உள்ள தெருவிளக்கில்தான் படிக்க வேண்டும்.
அப்படிப்பட்ட சந்தியில் இரவு ஒருமணிவரை படித்துக் கொண்டிருப்பேன். அப்போது கீழத்தெருவில் இருந்து வயதான ராமையா தேவர் தாத்தா தூக்கம் வராமல் நள்ளிரவில் வெளியே வந்து உலாவுவார். கோவில் திருவிழாவில் அவர்மேல் சுடலைமாட சாமி வந்து சாமி ஆடுவார். அவருக்கு பேய், பிசாசு பற்றி பயமெல்லாம் கிடையாது. அப்படி தெருவில் உலாவிக்கொண்டிருந்த போது அவர் இந்த நேரத்தில் சந்தியில் பயமில்லாமல் யார் இருப்பது என்று பார்க்கவந்தார்.
என்னைப் பார்த்ததும் நான் படித்துக் கொண்டிருப்பதை பார்த்து என் தலை முடியைத் தடவி கோதிவிட்டு,
“பேராண்டி, தாத்தா இப்ப சொல்றன் நீ நம்பு. நீ வாழ்க்கையில நல்ல நிலைக்கு வருவைய்யா. மோகினிப் பிசாசு சுத்துதுன்னு ஊரே அடங்கிக் கிடக்கு. நீ பெய்கிற பனியில இப்படி தெருவிளக்குல படிக்கிற. அப்பாவ பறிகொடுத்து உன் குடும்பம் ஆடிப்போய் நிற்குது. நீ படிச்சு நல்ல நிலைமைக்கு வரனும். மோகினியாவது மண்ணாவது நீ படிடா ராசா” என்று ஆறுதல் சொல்லிவிட்டு போவார்.
சோம்பேறியின் மனம் பேயின் தொழிற்சாலை என்ற ஆங்கில பழமொழிக்கேற்ப நம் மனம் வேலை ஏதுமின்றி இருக்கும்போதுதான் பற்பல எண்ணங்கள் மனதில் வந்து போகும்.
நான் சிறுவனாக இருந்த போது சுத்தமல்லி என்ற பக்கத்து ஊரில் எங்கள் உறவினர் வீட்டிற்கு என் தாத்தா அழைத்துச் சென்றார். ஏழெட்டு மைல் தூரம் நடந்து செல்லவேண்டும். எனது தாத்தா ஊரிலிருந்து ஒரு குளக்கரை வழியாக நடந்து பின் குளக்கரையில் இருந்து இறங்கி ஒரு பரம்பைக் கடந்து போக வேண்டும். பரம்பு முழுக்க நெருஞ்சி முள் நிறைந்திருக்கும். ஒற்றையடிப்பாதை வழியாகவே செல்ல வேண்டும்.
உறவினர் வீட்டில் இருந்து திரும்ப இரவு பத்து மணிக்கு மேலாகி விட்டது. இரவில் அந்த பரம்பில் நடப்பது கடி னமாக இருந்தது. பௌர்ணமி நிலாவும் இல்லை. ஆனால் கொஞ்சமாக நிலா வெளிச்சம் இருந்தது. அதுவும் அடிக்கடி கண்ணாமூச்சி காட்டி மேகத்தில் நுழைந்து விளையாட்டு காட்டியது. ஒற்றையடிப்பாதை சரியாகத் தெரியாது. பாதையை விட்டு இருளில் கால் விலகும்போது நெருஞ்சிமுள் காலை பதம் பார்த்துவிடும்.
பகலில் அமைதியாக இருக்கும் அப்பரம்பு இரவில் இரத்தத்தை உறையவைக்கும் நிகழ்வுடையதாக இருக்கும். அந்த பரம்பிற்கு மேற்கே ஐந்துகண் பொத்தை என்ற மேட்டுப்பகுதியின் அடியிலிருந்து திடீரென வெளிவரும் வழிப்பறிக்காரர்கள் அந்த ஓற்றையடிப் பாதையில் வருபவர்களைத் தாக்கி பொருட்களை அபகரித்துச் செல்வார்கள்.
(தொடரும்)
-சங்கர சுப்பிரமணியன்.
![]()