கட்டுரைகள்

நாடுகளும் மகிழ்வான வாழ்வும்!….. ( கட்டுரை ) … ஏலையா க.முருகதாசன்.

ஒரு நாடு மிகப் பெரிய நிலபரப்பையும் வல்லரசுத்தனத்தையும் கொண்டிருந்தால் அந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்று அர்த்தமில்லை.

பிரபஞ்சத்தை ஊடுருவிச் செல்லும் ஆற்றலோ வேற்றுக்கிரகங்களில் போய் இறங்கும் விசுவரூப விஞ்ஞான வளர்ச்சியோ வேற்றுக் கிரகங்களில் நிலங்களை வாங்குவதும் வாங்க முயற்சிப்பதுமோ மக்களின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பவை அல்ல.

நாடென்றால் அது மாபெரும் நிலப்பரப்பைக் கொண்டிருந்தால் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதும் அர்த்தமல்ல .மக்கள் என்ற தன்மை தனித்தனி மனித அலகுகளின் ஒருங்கிணைந்த குழுத்தன்மையோகும்.

எனவே ஒவ்வொரு தனிமனிதனும் மகிழ்ச்சியாக வாழ்கிறானா என்பதை கவனிக்க வேண்டியவர்கள் அந்த மனிதனை நிர்வகித்து அவனது தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாங்கங்களே.

மனிதனின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது நாட்டின் நிலப்பரப்போ அல்லது அந்நாட்டின் வல்லரசுத்தனமோ அல்ல.

வல்லரசு என்றால் எதையும் சாதிக்கக்கூடிய விஞ்ஞான இராணுவ பலம் என்ற கருத்தே உலகளவில் நிலவுகிறது.

இது மிகவும் தவறான கணிப்பீடாகும்.மேற்கூறியவை இருந்தும் உணவுப் பொருட்களை வாங்குவதில் வருமானத்தை மிஞ்சிய அவனுக்கு ஏற்படும் கட்டுப்படியாகாத விலையேற்றம் அதனால் தனது பசியை போக்க முடியாதவனாக இருப்பானானால் அவனிருக்கும் நாடு வல்லரசு நாடு அல்ல பஞ்சம் கொண்ட நாடேயாகும்.

ஒரு சிறு தீவாக இருந்தாலும் அந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனும் உணவு நீர் உறையுள் உடை போன்றவற்றைப் பெறுவதில் அவனுடைய வருமானத்திலிருந்து அவற்றைப் பூர்த்தி செய்வானானால் அது நிறைவான நாடு.

உணவில் தன்னிறைவு கண்டு பஞ்சம் என்ற நிலையை எந்த நாடு அடையாதிருக்கின்றதோ அந்த நாடே வல்லரசு என்று சொல்லாம்.

ஒரு நாட்டின் குடிமகனின் நோயற்ற ஆரோக்கியமும் உணவுப் பஞ்சமற்ற நிலையே மகிழ்ச்சியான நாடாகும்.

உணவுதான் ஒரு நாட்டினுடைய செல்வத்தைது தீர்மானிக்கின்றது.ஒரு நாட்டில் உள்ள அனைவரும் ஒரே விதமான வருவாயைப் பெறுபவர்கள் அல்ல.

ஆனால் அனைத்து விதமான வித்தியாசமான வருவாயைப் பெறுபவர்கள் அனைவரும் மிகக் குறைந்த விலையில் அடிப்படை வாழ்வுக்கான உணவுப் பொருட்களை வாங்கக்கூடிய விதத்தில் எந்த நாடு பொருட்களின் விலை நிர்ணயத்தை தீர்மானிக்கின்றதோ அந்த நாடுதான் சொர்க்கபுரி செல்வந்த நாடு.

நாட்டு மக்களை பட்டினி போட்டுவிட்டு சுப்பர்சோனிக் விமானம் தயாரித்து என்ன பலன் வேற்றுக் கிரகத்தில் போய் இறங்கித்தான் என்ன பலன்.

ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்.அது பொருந்துமென்று நினைக்கிறேன்.”தாய் ஊரெல்லாம் பிச்சை எடுக்கிறார் மகன் கந்தவனக் கடவையில் வானவேடிக்கையோடு திருவிழாச் செய்கிறார் “என்பது போல.

ஐரோப்பிய நாடுகளில் மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கின்ற உணவு – நீர் – மின்சாரம் – மருத்துவம் – உடை – உறையுள் இவை யாவும் ஒவ்வொரு தனிமனிதனின் வருவாய்க்குள் அவன் வாழக் கூடிய விதத்தில் திட்டமிட்டிருந்த போதிலும் யேர்மனி மிகச் சிறப்பாக திட்டமிட்டு மக்களை நிர்வகித்து வருகின்றது

என்பது எனது அவதானிப்பாகும்.

ஆகக்குறைந்த வருமானத்தின் அடிப்படையிலேதான் அடிப்படை வாழ்வுக்கான பொருட்களின் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

உதாரணமா : அரிசி – மா . சீனி – பால் – எண்ணை – காய்கறி வகைகள் – பழவகைகள் – பாண் – நீர்- சவர்க்காரம் – பற்பசைகள் – எனப் பல வாழ்வுக்கான அடிப்படைப் பொருட்களின் விலைகளை எப்பொழுதும் ஒரு யூரோவுக்கு மேற்படாமல் இருக்கத்தக்கதாக அரசு கவனித்துக் கொள்கின்றது.

இதே போல இலங்கையில் எப்பொழுது 10 ரூபாவுக்கு உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றதோ அப்பொழுதுதான் அந்த நாடு சுபீட்சமான நாடாகும்.

எனவே பரப்பளவில் தனிமனிதனின் மகிழ்ச்சி தங்கி நிற்பதில்லை உணவுப் பஞ்சமற்ற நிலையிலேயே தங்கி நிற்கின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button