மாமனிதர்கள் காத்திடுவர்!… சங்கர சுப்பிரமணியன்.

எதுவும் எவர் கையிலும் இல்லை என்ற உண்மை இப்போது புரிகிறது. இயற்கையின் வழிதான் உலகம் இயங்கும் என்ற தத்துவம் புரிந்து விட்டது. நடப்பது நடக்கும் அதை நிறுத்தி விட எவராலும் முடியாது. நடக்கமுடியாததை நடத்திக் காட்டவும் முடியாது. இயற்கையின் பெரும் சக்திக்குமுன் நம் கற்பனை எல்லாம் சவால்விட முடியாது.
யாரிடம் என்ன பலம்
இருந்தென்ன பயன்? ஒரு ஊசி முனையில் கணக்கற்று நிற்கக் கூடிய கண்ணுக்கு தெரியாத நுண்கிருமியையே கட்டுக்குள் கொண்டு வரமுடியாத ஆற்றல் எங்கு ஒளிந்து இருக்கிறது. எத்தனை நாள் கட்டுக்கதைகளையும் கண்மூடித் தனத்தையும் நம்பி இருப்போம் தெரியவில்லையே?
ஏற்கனவே பேரிடரால் உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கும்போது இப்போது இன்னொரு கொடுமை! ஆம்பன் புயல் வேறு வந்து ஆதிக்கம் செய்து விட்டது. அதற்கு தெரியமா தொற்றுநோயால் துன்பத்தில் துயரப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு தொடர்ந்து இன்னல் கொடுக்க வேண்டாம் என்று? இல்லையென்றால் எந்த சக்தியினாலும் இதைக்கட்டுப் படுத்தி விடமுடியுமா?
இந்தியாவில் ஒரிசாவையும் மேற்கு வங்கத்தையும் புரட்டிப் போட்டுவிட்டதே பெரும்புயல். அவர்கள் என்ன பாவம் செய்தவர்களா? ஏன் இடிமேல் இடியாக இந்த துயரம்? காரணம் நாம் எல்லோரும் அறிந்ததே.
இருபத்தொரு ஆண்டுகளுக்குப்பின் வங்கக்கடலில் புயல் உருவாகிவிட்டது. இதை எந்த சக்தியால் தடுக்க முடிந்தது? ஒரு சக்தியாலும் தடுக்க முடியவில்லையே!
ஆழிப்பேரலையையும் ஆட்டிவைக்கும் பெரும்புயலையும் பொங்கியெழும் எரிமலையையும் போட்டுத்தாக்கும் நுண்கிருமிகளையும் இவ்வுலகம் தோன்றிய நாள் முதல் எந்த சக்தியும் தடுத்து நிறுத்தியதாக வரலாறு கிடையாது. மனிதனே தொடர்ந்து போராடி தன் அறிவைப் பயன்படுத்தி தன்னைக் காத்துவந்துள்ளான்.
ஆற்றில் தண்ணீரைத் தேக்க அணையை கட்டினான். வெள்ளம் வரும்போது திறந்து விட்டான். குகையில் வாழ்ந்தவன் பாதுகாப்பாக வாழ வீடு கட்டினான். இயற்கையாகவே இனத்தைப் பெருக்கினான். கூட்டமாய் வாழும்போது ஒரு தலைவனை தேர்வு செய்தான். நோய்க்கு மருந்து கண்டான். பசிக்கும் உணவைக் கண்டான். இத்தனையும் இவன் செய்யும்போது இடையில் இன்னொருவன் எங்கிருந்து வந்தான்?
எட்டுமணி நேரம் கடினமாய் உழைத்தவனை விட்டு அவனுக்கு கூலி கொடுக்காமல் இன்னொருவனுக்கு கூலி கொடுத்தால் என்ன நியாயம்? இந்த தொற்றுநோய்க்கும் மனிதன் மருந்தை கண்டுபிடிப்பான். அவன் தான் நம்மை இந்த இக்கட்டிலிருந்து காப்பான். மந்திரத்தில் வேறு யாரும் நமக்கு மாங்காய் தந்துவிட மாட்டாரகள். முயன்று கொண்டிருக்கிறார்கள். முயற்சி திருவினையாக்கும் என்ற நம்பிக்கையில் இருப்போம். மனிதனே மனிதனை காக்கவில்லை என்றார் வேறு யார் வந்து காத்துவிடப் போகிறார்கள்?
நாம் மகிழ்ந்திருக்கும் போது கூட மகிழ்ந்திருப்பவர்களை உறவுகள், நண்பர்கள், காப்பவர்கள் என்று கணக்கில் கொள்ளமுடியாது. வள்ளுவன் சொன்னதுபோல் உடுக்கை இழந்தவன் கைபோல நாம் துனபத்தில் இருக்கும்போது ஓடி வரவேண்டும். இந்த நேரத்தில் உறவுகளாலும் நண்பர்களாலும் நமக்கு ஒன்றும் செய்யமுடியாது. மாமனிதர்களான விஞ்ஞானிகள் தாம் நம் வினை தீர்க்கவேண்டும்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()